For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹைகோர்ட் தீர்ப்பில் பெரிய ஓட்டை.. கணக்கு கூட்டலில் தவறு செய்த குமாரசாமி: ராமதாஸ்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதாவை விடுவித்து கர்நாடக ஹைகோர்ட் வழங்கிய தீர்ப்பில், கணக்கு கூட்டலில் பெரும் தவறு உள்ளதாக சுட்டிக் காட்டியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், எனவே உடனடியாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வருவாய்க்கு மீறிய வகையில் சொத்துக் குவித்தது குறித்த வழக்கிலிருந்து ஜெயலலிதா மற்றும் அவரது கூட்டாளிகள் விடுதலை செய்யப்பட்டதை ஆளுங்கட்சியினரும், அவர்களின் துதிபாடிகளும் கொண்டாடி வருகின்றனர்.

நீதி வென்று விட்டதாகவும், புடம் போட்ட தங்கமாக திரும்பியிருப்பதாகவும் ஆலாபனைகள் பாடப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில் ஜெயலலிதாவை விடுதலை செய்து வழங்கப் பட்ட தீர்ப்பின் அடித்தளத்தையே நொறுக்கும் வகையில் ஓட்டைகள் இருப்பது அம்பலமாகி வருகிறது.

என்ன அடிப்படையில் விடுதலை?

என்ன அடிப்படையில் விடுதலை?

சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக நேற்று நான் வெளியிட்ட அறிக்கையில்,பெங்களூர் உயர்நீதிமன்றம் எந்த அடிப்படையில் இம்முடிவுக்கு வந்தது என்பது சட்ட வல்லுனர்களுக்குக்கூட விடை தெரியாத வினாவாகவே உள்ளது என்று கூறியிருந்தேன். நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பில் ஜெயலலிதாவை விடுதலை செய்வதற்காக கூறப்பட்டுள்ள காரணங்கள் எதுவுமே ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் இல்லை.

கடன் கணக்கீட்டில் குளறுபடி

கடன் கணக்கீட்டில் குளறுபடி

ஜெயலலிதா தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை வினா எதுவும் எழுப்பாமல் நீதிபதி ஏற்றுக்கொண்டதாகவே தோன்றுகிறது. அதுமட்டுமின்றி, ஜெயலலிதா வாங்கிய கடன்களை அவரது வருவாயாக நீதிபதி ஏற்றுக்கொண்டிருக்கிறார். அதை சரியான நடவடிக்கையாகவே வைத்துக் கொண்டாலும் கடன் தொகையை கணக்கிடுவதில் ஜெயலலிதா மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு சாதகமாக குளறுபடிகள் செய்யப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது.

கடன் மதிப்பு ரூ.10.67 கோடி

கடன் மதிப்பு ரூ.10.67 கோடி

நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பு ஆணையின் 852வது பக்கத்தில் இது குறித்த விவரங்களை தெளிவாக அறிய முடிகிறது. ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும், அவர்களின் நிறுவனங்களும் இந்தியன் வங்கியிருந்து 10 கடன்களை வாங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த கடன்களின் மதிப்பு முறையே ரூ.1.50 கோடி, ரூ.3.75 கோடி, ரூ. 90 லட்சம், ரூ.25 லட்சம், ரூ.12.46 லட்சம், ரூ.50 லட்சம், ரூ.25 லட்சம், ரூ.1.57 கோடி, ரூ.1.65 கோடி, ரூ.17 லட்சத்து 85,274 ஆகும். இக்கடன் தொகைகளைக் கூட்டினால் மொத்த மதிப்பு ரூ.10 கோடியே 67 லட்சத்து 31,274 மட்டுமே வருகிறது.

13.50 கோடி கூட்டப்பட்டுள்ளது

13.50 கோடி கூட்டப்பட்டுள்ளது

ஆனால், இந்தக் கடன்களின் மொத்த மதிப்பு ரூ.24 கோடியே 17 லட்சத்து 31,274 என்றும் இதை ஜெயலலிதாவின் வருவாயாக கருத வேண்டும் என்றும் நீதிபதி குமாரசாமி தெரிவித்துள்ளார். அதாவது ஜெயலலிதாவின் வருவாய் மதிப்பில் ரூ.13.50 கோடி தவறுதலாக சேர்க்கப்பட்டிருக்கிறது.

ஜெயலலிதாவின் மொத்த வருவாய் ரூ.34 கோடியே 76 லட்சத்து 65,654 என்று உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தவறுதலாக அல்லது தவறாக சேர்க்கப்பட்ட ரூ.13.50 கோடியை கழித்தால் ஜெயலலிதா தரப்பின் வருவாய் ரூ.21 கோடியே 26 லட்சத்து 65,654 ஆகவே இருக்கும்.

வித்தியாசம் 2 கோடியில்லை

வித்தியாசம் 2 கோடியில்லை

கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அவர்களே ஏற்றுக்கொண்டவாறு ஜெயலலிதா தரப்பின் சொத்துக்கள் ரூ. 37 கோடியே 59 லட்சத்து 02,466 ஆகும். ஜெயலலிதா தரப்பின் உண்மையான வருவாய்க்கும், சொத்துக்களுக்கும் இடையிலான வித்தியாசம் 16 கோடியே 32 லட்சத்து 36 ஆயிரத்து 812 ஆகும். ஆனால், நீதிபதி குமாரசாமி இரண்டுக்கும் இடையிலான வித்தியாசம் வெறும் ரூ. 2.82 கோடி தான் என்றும், இது வருவாயை விட 8.12% மட்டுமே அதிகம் என்றும் தீர்ப்பில் கூறியிருக்கிறார்.

இதனால் விடுதலை

இதனால் விடுதலை

அதுமட்டுமின்றி கிருஷ்ணானந்த் அக்னிஹோத்ரி வழக்கில் வருவாய்க்கு மீறிய வகையில் சேர்க்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு 10 விழுக்காட்டுக்கும் குறைவாக இருந்தால் அதைக் கருத்தில் கொள்ளத் தேவையில்லை என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பையும், 20% வரையிலான வருவாய்க்கு மீறிய சொத்துக்களை கருத்தில் கொள்ளத் தேவையில்லை என்ற ஆந்திர அரசின் சுற்றறிக்கையும் வைத்துப் பார்த்தால் ஜெயலலிதா வருவாய்க்கு மீறிய வகையில் சேர்க்கப்பட்ட சொத்துக்களை கண்டுகொள்ளாமல் விடலாம் என்றும் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வித்தியாசம் 76.75%

வித்தியாசம் 76.75%

ஜெயலலிதா தரப்பின் சரியான வருவாயை அடிப்படையாக வைத்துப் பார்த்தால் அதற்கும், அவர்கள் தரப்பு சொத்துக்களுக்கும் இடையிலான வித்தியாசம் ரூ. 16 கோடியே 32 லட்சத்து 36 ஆயிரத்து 812 ஆகும். இது ஜெயலலிதா தரப்பு வருவாயை விட 76.75% அதிகமாகும். உண்மை இவ்வாறு இருக்கும் போது நீதிபதியால் சுட்டிக்காட்டப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பு அல்லது ஆந்திர அரசின் சுற்றறிக்கைப்படி பார்த்தால் கூட ஜெயலலிதாவையும், அவரது கூட்டாளிகளிகளையும் விடுதலை செய்ய முடியாது.

தப்பு கணக்கு போட்டாரா குமாரசாமி?

தப்பு கணக்கு போட்டாரா குமாரசாமி?

இதற்கெல்லாம் மேலாக உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் ஒருவர் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில் கடன் தொகையை தப்பும் தவறுமாக கூட்டுவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது; இது அறியாமல் நடந்த தவறாகவும் இருக்க முடியாது. ஒருவேளை அறியாமல் நடந்த தவறாக இருந்தால், இதையே சரியாக செய்ய முடியாதவர் ஒட்டுமொத்த வழக்கின் வாதங்களையும் எப்படி சரியாக ஆய்வு செய்து தீர்ப்பளித்திருக்க முடியும் என்ற வினா எழுகிறது?

உடனே மேல்முறையீடு

உடனே மேல்முறையீடு

எனவே, இத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். மேல்முறையீட்டின் மீதான விசாரணை முடிவடையும் வரை குறைபாடுள்ள இந்தத் தீர்ப்புக்குத் தடை விதிக்க வேண்டும்; உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை 3 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தை கர்நாடக அரசு கோர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

English summary
PMK founder Ramadoss finds fault in High court judgment in which Jayalalitha has been aquitted from the asset case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X