For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

50 வருடங்களாக தமிழக வளங்களை கொடூரமாக சுரண்டிய திமுக-அதிமுக: ராமதாஸ் குற்றச்சாட்டு

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: "தமிழ்நாட்டில் இன்றைய நிலையில் மக்கள் நலனுக்காக செய்யப்பட வேண்டிய மிகப்பெரிய பணி ஒன்று உண்டென்றால், அது அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சிகளின் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்டெடுப்பது தான். கடந்த 50 ஆண்டுகளின் தமிழகத்தின் அனைத்து வளங்களையும் மிகக்கொடூரமான முறையில் சுரண்டிய கட்சிகள் அவை" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். மேலும், திருச்சி மாநாட்டிற்கு பெருமளவில் கூடுமாறு தொண்டர்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக மாற்றம்... முன்னேற்றம் என்ற முழக்கத்துடன் சேலத்தில் தொடங்கிய பாட்டாளி மக்கள் கட்சியின் லட்சியப் பயணம் எதிர்பார்த்ததை விட அதிக வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது.

Ramadoss invites his party men to participate in Trichy rally

வடக்கு, தெற்கு, மேற்கு என அனைத்து திசைகளிலும் வலிமையை நிரூபித்த பா.ம.க. அடுத்த கட்டமாக மத்திய மண்டலத்தில் புதிய வரலாறு படைக்கவிருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் ஆறாவது அரசியல் மாநாடு வரும் 20.09.2015 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு திருச்சியை அடுத்த பஞ்சப்பூரில் நடைபெறவிருக்கிறது.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் முற்றிலும் வித்தியாசமான தேர்தல் ஆகும். 1967 ஆம் ஆண்டு முதல் 2011 வரை நடந்த அனைத்துத் தேர்தல்களிலும் எந்தக் கட்சி ஆட்சிக்கு வரக்கூடாது என்பது தான் முக்கியமான பிரச்சினையாக இருந்திருக்கிறது.ஆனால், இந்தத் தேர்தல் தான் கடந்த 50 ஆண்டுகளில் முதல் முறையாக எந்தக் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை அடிப்படையாக வைத்து நடைபெறவிருக்கிறது.

பாட்டாளி மக்கள் கட்சி வித்தியாசமான அரசியல் கட்சி....தமிழகத்தின் மற்ற கட்சிகள் அரசியல் லாபத்தை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டால் பா.ம.க. மக்கள் நலனை முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்படும் கட்சி என்பது பல்வேறு கால கட்டங்களில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் வரும் தேர்தலில் அனைவரின் தேர்வும் பா.ம.க.வாகவே இருக்கும்.

தமிழ்நாட்டில் இன்றைய நிலையில் மக்கள் நலனுக்காக செய்யப்பட வேண்டிய மிகப்பெரிய பணி ஒன்று உண்டென்றால், அது அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சிகளின் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்டெடுப்பது தான். கடந்த 50 ஆண்டுகளின் தமிழகத்தின் அனைத்து வளங்களையும் மிகக்கொடூரமான முறையில் சுரண்டிய கட்சிகள் அவை.

ஒருகாலத்தில் கல்வி, கலாச்சாரம் ஆகியவற்றின் அடையாளமாக திகழ்ந்த தமிழகம் இன்று மது விற்பனை, ஊழல், இயற்கை வளச் சுரண்டல் ஆகியவற்றின் அவல அடையாளமாக மாறியிருப்பதற்கு காரணம் இந்த 2 கட்சிகள் தான். இந்த நிலையை மாற்றி தமிழகம் இழந்த பொலிவை மீண்டும் பெற வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒற்றை இலக்காகும்.

மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான நமது பயணத்தில் முன்னேற்றங்கள் தொடர்கதையாகி வருகின்றன. சேலத்தில் தொடங்கி மதுரை வரை நடத்தப்பட்ட 5 அரசியல் மாநாடுகளும் நமது வலிமையை தமிழகத்திற்கு உணர்த்தியிருக்கின்றன. பாட்டாளி மக்கள் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்று வரும் மது ஒழிப்பு போராட்டங்களுக்கு பெருகிவரும் ஆதரவு, தமிழகத்தில் பெண்களின் ஆதரவு எந்தக் கட்சிக்கு என்பதற்குக் கட்டியம் கூறுவதாக அமைந்திருக்கிறது.

முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பிறகு 7 மாதங்களில் ஆறாவது மாநாட்டை நடத்தும் கட்சி என்ற பெருமை நமக்கு கிடைத்திருக்கிறது. இதுவரை இவ்வளவு குறுகிய இடைவெளியில் இத்தனை மாநாடுகளை தமிழகத்தில் வேறு எந்தக் கட்சியும் நடத்தியதில்லை என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்றாக உணர்ந்திருக்கின்றனர்.

இதுவரை நடத்தப்பட்ட 5 மாநாடுகளும் வெற்றிகரமானவையாக அமைந்தன. அவற்றை விஞ்சும் வகையில் மத்திய மண்டல மாநாடு அமைய வேண்டும்; மலைக்கோட்டை மாநகரம் மனிதத் தலைகளால் நிறைய வேண்டும் என்பது தான் எனது விருப்பம். எனது அன்புக் கட்டளைகள் அனைத்தையும் நிறைவேற்றிய நீங்கள் இதையும் நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

இதைவிட மிகவும் முக்கியம் நமது கட்டுப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் உங்களின் செயல்பாடுகள் அமைய வேண்டும் என்பது தான். பொதுமக்களுக்கும், போக்குவரத்தும் எந்தவித இடையூறுமின்றி, அமைதியாகவும், பாதுகாப்பாகவும் திருச்சி பஞ்சப்பூரில் நடைபெறவிருக்கும் மத்திய மண்டல அரசியல் மாநாட்டுக்கு வந்து செல்ல வேண்டும் என்ற ஒன்றை மட்டும் தான் உங்களிடமிருந்து நான் எதிர்பார்க்கிறேன்.

English summary
PMK founder Ramadoss invites his party men to participate in Trichy rally which is schedule to be held on September 20.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X