For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரி மேலாண்மை வாரியம்- பிரதமர் இல்லம் முன்பு போராட்டம் நடத்த ராமதாஸ் வலியுறுத்தல்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பிரதமர் இல்லம் முன்பு போராட்டம் நடத்த வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அனைத்துக்கட்சி சார்பில் பிரதமர் மோடி இல்லம் முன்பு போராட்டம் நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற ஆணைப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கும்படி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்துவதென அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இதுகுறித்து அடுத்த கட்ட தகவல் எதுவும் வெளியாகதது வருத்தம் அளிப்பதாக உள்ளது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 அனைத்துக்கட்சிக் கூட்டம்

அனைத்துக்கட்சிக் கூட்டம்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த பிப்ரவரி 22ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்ட நிலையில் 23ம் தேதியே பிரதமருடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்க வேண்டும். குறைந்தபட்சம் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு மற்றும் புதுவை நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு சூரத் வழியாக தில்லி திரும்பியதும் பிரதமரை தமிழக அனைத்துக் கட்சிக் குழுவினர் சந்தித்திருக்க வேண்டும். ஆனால், 9 நாட்களாகியும் இதுவரை சந்திப்புக்கு தேதி குறிக்கப்படாதது மர்மமாக உள்ளது.

 உடனடியாக நடவடிக்கை தேவை

உடனடியாக நடவடிக்கை தேவை

அனைத்துக் கட்சிக் கூட்டம் முடிந்த உடனேயே தில்லி தமிழ்நாடு இல்லத்தில் உள்ள உறைவிட ஆணையர் பிரதமர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு சந்திப்புக்கு நேரம் கேட்டிருக்க வேண்டும். அது சாத்தியமாகாத நிலையில் பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வந்த போது அவரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து அனைத்துக் கட்சிக் குழுவினருடனான சந்திப்புக்கான நேரத்தை உறுதி செய்திருக்க வேண்டும். அந்த வாய்ப்பையும் தவற விட்டிருந்தால் தமிழக அரசின் தலைமைச் செயலர், பொதுப்பணித்துறை செயலர் தலைமையில் குழுவை அனுப்பி பிரதமர் அலுவலகத்துடன் பேசி நேரத்தைத் தீர்மானித்திருக்க வேண்டும். ஆனால், இவற்றையெல்லாம் தமிழக ஆட்சியாளர்கள் செய்தார்களா? இல்லையா? என்பது குறித்து எந்த தகவலும் தெரியவில்லை.

 தமிழகத்திற்கு துரோகம்

தமிழகத்திற்கு துரோகம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தங்களின் சொந்தப் பிரச்சனைகளுக்காக பிரதமர் நரேந்திரமோடியை நினைத்த நேரத்தில் சந்தித்த நிகழ்வுகள் அடிக்கடி நடந்தன. பிரதமர் அலுவலகத்துடன் முதலமைச்சர் அவ்வளவு நெருக்கமாக இருக்கும் நிலையில், தமிழகத்தின் முக்கியப் பிரச்சனை குறித்து விவாதிப்பதற்கு மட்டும் பிரதமர் அலுவலகக் கதவுகள் திறக்க மறுப்பதன் காரணம் விளங்கவில்லை. இவ்வி‌ஷயத்தில் காத்திருந்து ஏமாந்து விடக்கூடாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வி‌ஷயத்தில் மீண்டும் ஒருமுறை தமிழகத்திற்கு துரோகம் இழைக்கப்பட்டு விடுமோ? என்ற அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

 இன்னும் 4 வாரங்களே உள்ளன

இன்னும் 4 வாரங்களே உள்ளன

தமிழகம் வந்த பிரதமரும் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக எந்த உத்தரவாதமும் அளிக்காததால் காவிரி மேலாண்மை வாரியம் என்பது காணல் நீராகி விடுமோ? என்ற அச்சமும், ஐயமும் உழவர்களிடம் ஏற்பட்டுள்ளது. அதை அகற்ற வேண்டியது தமிழக அரசின் கடமையும், பொறுப்புமாகும். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக உச்சநீதிமன்றம் அளித்த 6 வாரக் கெடுவில் இரண்டு வாரங்கள் நிறைவடைந்து விட்டன. மீதமுள்ள 4 வாரங்களில் அனைத்து நடைமுறைகளும் முடிக்கப்பட வேண்டும்.

 தியாகத்திற்கு தயாராக வேண்டும்

தியாகத்திற்கு தயாராக வேண்டும்

ஆனால், பிரதமரை சந்திக்க இன்னும் நேரம் கிடைக்காத நிலையில், எப்போது பிரதமரை சந்தித்து, வலியுறுத்தி, எப்போது மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்பதை நினைத்தாலே வேதனை ஏற்படுகிறது. பிரதமரை சந்திப்பதற்கான நேரம் ஞாயிற்றுக்கிழமைக்குள் தீர்மானிக்கப்படவில்லை என்றால், வரும் திங்கட்கிழமை முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சிக் குழுவினர் தில்லி சென்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பிரதமர் இல்லம் அலுவலகம் முன் போராட்டம் நடத்த வேண்டும். இவ்வி‌ஷயத்தில் எத்தகைய தியாகத்திற்கும் தமிழக அரசும், கட்சிகளும் தயாராக இருக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

English summary
Ramadoss needs immediate action on Cauvery Verdict. He also codemns the state Government for not taking any initiative for setting up Cauvery Management Board.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X