For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழ்த் தாய் வாழ்த்து பாடலுக்கு காப்பிரைட்... நிறுவனங்கள் மீது நடவடிக்கை தேவை: ராமதாஸ்

தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை வணிக ரீதியாக பயன்படுத்தியுள்ள நிறுவனங்கள் மீது நடவடிக்கை வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

சென்னை : நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலுக்கு தனியார் நிறுவனம் காப்புரிமை கேட்டதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு தனியார் நிறுவனம் காப்புரிமை விதிமீறல் நோட்டீஸ் அனுப்பி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Ramadoss on Tamil Thai Vazhthu copyright issue

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டையும், அதன் உரிமைகளையும் ஆட்சியாளர்கள் விற்பனை செய்து கொண்டிருப்பதாலோ என்னவோ, தமிழர்களின் சொத்தான தமிழ்த்தாய் வாழ்த்தை காப்புரிமை என்ற பெயரில் தனியார் நிறுவனம் ஒன்று விற்பனை செய்துகொண்டிருக்கிறது என்று அந்த அறிக்கையில் ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.

கல்லூரி நிகழ்ச்சி

மேலும் அந்த அறிக்கையில், இந்திய மின்னணு இதழாளர்கள் சங்கத்தின் சார்பில் சிவகாசியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் அதன் மாணவர்களுக்கு கடந்த 24ம் தேதி மின்னணு இதழியல் குறித்த பயிலரங்கம் நடத்தப்பட்டது. அதன் தொடக்கத்தில் மரபுப்படி தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற பயிலரங்கம் முழுவதும் காணொலிக் காட்சியாக தொகுக்கப்பட்டு, மாணவர்கள் பார்ப்பதற்கு வசதியாக யூடியூப் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.

யூடியூப் நிறுவனம்

அடுத்த 24 மணி நேரத்தில் இந்திய மின்னணு இதழாளர்கள் சங்கத்திற்கு யூடியூப் நிறுவனம் மூலமாக சரிகம பப்ளிஷிங் என்ற நிறுவனம் அறிவிக்கை அனுப்பியுள்ளது. அதில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை ஒளிபரப்ப தாங்கள் காப்புரிமை பெற்றிருப்பதாகவும், மின்னணு இதழாளர்கள் சங்கம் சார்பில் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள நிகழ்ச்சித் தொகுப்பில் தமிழ்த்தாய் வாழ்த்து இடம் பெற்றிருப்பது காப்புரிமை மீறல் என்று கூறப்பட்டுள்ளது.

வணிகப் பொருளாக அனுமதி ?

அதுமட்டுமின்றி, காணொலித் தொகுப்பிலிருந்து தமிழ்த்தாய் வாழ்த்துப் பகுதியை நீக்கத் தேவையில்லை என்றும், அதற்கு பதிலாக அந்தக் காணொலித் தொகுப்பில் தங்களின் விளம்பரங்களை ஒளிபரப்பிக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று சரிகம நிறுவனம் அடுத்த பேரத்தைத் தொடங்கியுள்ளது. இவை அனைத்துமே தமிழின் சிறப்பைப் போற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை வணிகப் பொருளாக்கி, பொருளாதார லாபம் தேட முயலும் அருவருக்கத்தக்கத் தந்திரங்கள் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. தமிழர்களால் மிகவும் புனிதமாக போற்றப்படுவதும், மதிக்கப்படுவதுமான தமிழ்த்தாய் வாழ்த்துப்பாவை, அதன் சிறப்புகளை அறியாத ஒரு நிறுவனம் விலை பொருளாக மாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

நாட்டுடைமையாக்கப்பட்ட பாடல்

தமிழ்மொழியின் சிறப்புகளை விளக்கும் வகையில், மனோன்மணியம் பெ.சுந்தரனார் அவரது மனோன்மணியம் என்ற நாடகத்தின் வாழ்த்துப் பாடலாக எழுதிய பாடலின் ஒரு பகுதி தான் 1970ம் ஆண்டு முதல் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக பாடப்பட்டு வருகிறது. தமிழக அரசு சார்ந்த விழாக்கள், கல்வி நிலையங்களின் நிகழ்ச்சிகளில் இப்பாடல் பாடப்படுவது கட்டாயமாகும். இது நாட்டுடைமையாக்கப்பட்ட ஒன்று என்பதால் இந்தப் பாடலை பாடவும், பயன்படுத்தவும் அனைவருக்கும் உரிமை உண்டு; அதேநேரத்தில் இதை வணிக நோக்கத்திற்காக பயன்படுத்த உலகில் யாருக்கும் உரிமை இல்லை.

நிறுவனத்தின் துணிச்சல்

அவ்வாறு இருக்கும் போது, தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெற்ற நிகழ்ச்சியின் தொகுப்பை யூடியூப்பில் ஒளிபரப்புவது காப்புரிமையை மீறிய செயல் என்று கூறுவதற்கும், அந்த தொகுப்பில் தங்கள் விளம்பரத்தை சேர்த்து ஒளிபரப்ப வேண்டும் என்று கூறுவதற்கும் சரிகம நிறுவனத்திற்கு யார் அதிகாரம் கொடுத்தது? சரிகம நிறுவனத்தின் இந்த அத்துமீறலை அனுமதித்தால், தமிழ்த்தாய் வாழ்த்து இடம் பெற்ற அரசாங்க நிகழ்ச்சிகள் யூடியூப்பில் ஒளிபரப்பப்பட்டால் அதற்காக அரசாங்கத்திடமே பணம் கேட்கும் துணிச்சல் இத்தகைய நிறுவனங்களுக்கு வந்து விடும்.

காப்புரிமை கேட்ட நிறுவனம்

இப்போது தமிழ்த்தாய் வாழ்த்துக்கு சொந்தம் கொண்டாடும் நிறுவனங்கள் இன்னும் சிறிது காலத்தில் தேசிய கீதத்துக்கும் உரிமை கொண்டாடும் நிலை ஏற்பட்டு விடும். எனவே, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எந்தவொரு நிறுவனமும் வணிக ரீதியாக பயன்படுத்து வதை தடை செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, இந்தப் பாடலை எந்தெந்த நிறுவனங்கள் இதுவரை வணிக ரீதியாக பயன்படுத்தியுள்ளன என்பது குறித்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழக ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும் என வலியுறுத்துவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

English summary
Ramadoss on Tamil Thai Vazhthu copyright issue . PMK Founder Ramadoss in a statement that, Tamilnadu Government should take necessary actions on the Private companies who used tamil thai vazhthu on Commercial use.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X