For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிவகாசியில் வெடிவிபத்து அச்சம்... ஊரை விட்டு வெளியேறும் மக்கள்: ராமதாஸ்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சிவகாசி முழுவதும் ஆய்வு நடத்தி வெடிப்பொருட்களை பறிமுதல் செய்யவும், குடியிருப்பு பகுதிகளில் ஒரு கிராம் வெடிமருந்து கூட இல்லாத நிலையை உருவாக்கி மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனம் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

Ramadoss slams Govt for its silence over the Sivakasi cracker blasts

சுவாதி படுகொலை குறித்த பரபரப்பிலிருந்து ஊடகங்களும், தமிழக மக்களும் இன்னும் வெளிவராத நிலையில், சிவகாசியில் பெரும் பயங்கரம் நிகழ்ந்திருக்கிறது. இரு உயிர்களையும், பல உடைமைகளையும் பலி கொண்ட அந்த பட்டாசு விபத்து பயங்கரத்தை ஊடகங்கள் கண்டுகொள்ளாதது ஒருபுறமிருக்க, அச்சத்தை போக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகளும் வேடிக்கைப் பார்ப்பது கண்டிக்கத்தக்கது.

சிவகாசி நகரின் பாரதி காலணியில் உள்ள வணிக வளாகத்தில் ஜெகதீசன் என்பவர் பட்டாசுக் கடை நடத்தி வருகிறார். அவரது கடைக்கு பின்புறமுள்ள கிடங்கில் அவர் பதுக்கி வைத்திருந்த வெடிமருந்துகள் கடந்த சனிக்கிழமை வெடித்து சிதறின. இந்த கொடிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமின்றி, 6 கடைகள் கொண்ட வணிக வளாகம், 8 வீடுகள், ஒரு வங்கி ஏ.டி.எம் ஆகியவையும் இவ்விபத்தில் தரைமட்டம் ஆயின.

இரு சக்கர ஊர்திகள் உட்பட மொத்தம் 13 ஊர்திகளும் எரிந்து சாம்பலாயின. வெடிமருந்து விபத்தில் ஏற்பட்ட தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு இரவு 9.40 முதல் அதிகாலை 1.00 மணி வரை தீயவிப்பு வீரர்கள் போராடினர். அதன்பிறகு ஆங்காங்கே வெடிமருந்தின் மிச்சங்கள் வெடித்து சிதறின. இதனால் எந்த நேரத்தில் என்ன நடக்குமோ? என்ற அச்சத்தில் மக்கள் உறைந்துள்ளனர்.

விபத்து நிகழ்ந்த கிடங்கில் பொட்டாசியம் நைட்ரேட், பொட்டாசியம் குளோரைடு, பேரியம் நைட்ரேட், அலுமினியம் பவுடர் உள்ளிட்ட சக்தி வாய்ந்த வெடிமருந்துகள் பெருமளவில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தான் இந்த விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து சோலை காலணியில் குருசாமி என்பவரின் இல்லத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 304 மூட்டை வெடி மருந்துகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். நகரின் பல்வேறு பகுதிகளில் இதேபோன்று வெடிமருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சமும், இந்த வெடிவிபத்தைத் தொடர்ந்து பரப்பப்படும் வதந்திகளும் மக்களை மேலும் இன்னலுக்குள்ளாக்கி உள்ளன.

வெடிவிபத்து அச்சம் காரணமாக ஏராளமான மக்கள் வீடுகளை காலி செய்து விட்டு வெளியூர் சென்று விட்டனர். விபத்து நடந்த பகுதியிலுள்ள 50க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். சிவகாசி மற்றும் விருதுநகர் புறவழிச் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருக்கிறது. விபத்து நடந்த பகுதியில் இடிபாடுகளை அகற்றும் பணிகள் இன்று தான் தொடங்கியுள்ளன என்பதால், முழு இயல்பு நிலை திரும்புவதற்கு இன்னும் சில நாட்கள் ஆகும்.

சிவகாசியில் வழக்கமாக பட்டாசு ஆலைகளில் நடைபெறும் விபத்தாக இதை கருத முடியாது. பட்டாசு ஆலைகள் ஊருக்கு வெளியே இருக்கும். அங்கு விபத்து நடக்கும் போது உயிரிழப்பும், பொருட்சேதமும் ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கும். ஆனால், இப்போது நகருக்குள் மக்கள் நெரிசல் அதிகமுள்ள பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. இரவு நேரத்தில் விபத்து நடந்ததால் உயிரிழப்பு குறைவாக இருந்தது. மக்கள் நடமாட்டம் மிகுந்த பகல் நேரத்தில் விபத்து நடந்திருந்தால் உயிரிழப்பு குறித்து நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.

பொருளாதார காரணிகளின் அடிப்படையில் குட்டி ஜப்பான் என்றழைக்கப்பட்ட சிவகாசி இப்போது உயிர்க்கொல்லி விபத்துக்களின் காரணமாக அப்பெயரை பெற்று விடும் போலிருக்கிறது. ஜப்பானில் அடிக்கடி எரிமலை வெடித்து சிதறுவதைப் போன்று சிவகாசியில் எந்த நேரமும் வெடிமருந்து எரிமலை வெடித்து சிதறும் ஆபத்து நிலவுகிறது.

மக்கள் வாழும் பகுதிகளில் வெடிமருந்தை இருப்பு வைக்கக்கூடாது என விதிகளில் கூறப்பட்டுள்ளது. வெடிமருந்துகளை கையாள்வதை கண்காணிக்கும் பொறுப்பு மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் உள்ளது. இவை மட்டுமின்றி, சிவகாசியில் வெடிமருந்து வணிகம் மற்றும் பயன்பாட்டை ஒழுங்குபடுத்த பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பின் (Petroleum and Explosives Safety Organisation -PESO) கிளை அலுவலகம் திறக்கப்பட்டிருக்கிறது.

இவ்வளவுக்குப் பிறகும் மக்கள் வாழும் பகுதிகளில் வெடிமருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதன் மூலம் மத்திய, மாநில அரசு நிர்வாகங்களும், கண்காணிப்பு அமைப்புகளும் செயலிழந்து விட்டன என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

இந்த விபத்துக்குப் பிறகும் மத்திய, மாநில அரசுகளின் பிரதிநிதிகளோ, சிவகாசி தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியோ பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்கோ, மக்கள் மத்தியில் நிலவும் அச்சத்தைப் போக்கவோ முன்வரவில்லை.

சிவகாசியில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியதும், அச்சத்தை போக்க வேண்டியதும் மத்திய, மாநில அரசுகளின் கடமை. இதற்காக, சிவகாசி முழுவதும் ஆய்வு நடத்தி வெடிப்பொருட்களை பறிமுதல் செய்யவும், குடியிருப்பு பகுதிகளில் ஒரு கிராம் வெடிமருந்து கூட இல்லாத நிலையை உருவாக்கி மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

English summary
PMK founder Dr Ramadoss has slams the Govt for its silence over the Sivakasi cracker blasts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X