For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முதலீட்டாளர்கள் மாநாடு செய்தியைக் கேட்டால் சிரிப்பு தான் வருகிறது: ராமதாஸ் காட்டம்

முதலீட்டாளர்கள் மாநாடு செய்தியைக் கேட்டால் சிரிப்பு தான் வருகிறது என்று ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

சென்னை: முதலீட்டாளர்கள் மாநாடு என்கிற பெயரில் தேவை இல்லாத செலவை செய்து வரும் தமிழக அரசைப் பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

இந்த ஆண்டு மத்தியில் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், பெயரளவில் முதலீட்டாளர் மாநாடுகளை நடத்தி மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பது தவறு என்று விமர்சித்துள்ளார்.

 சிரிப்பு தான் வருகிறது

சிரிப்பு தான் வருகிறது

மேலும் அதில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு அடுத்த ஆண்டு ஜனவரியில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மாநாட்டின் மூலம் ரூ.3 லட்சம் கோடி முதலீடு திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக அரசுத் தரப்பில் பரப்பப்படும் செய்திகளை பார்க்கும் போது பெருமிதத்திற்கு பதிலாக சிரிப்பு தான் வருகிறது. தமிழக அரசு மக்களை முட்டாளக்கவே இத்தகைய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

 யாருக்கும் பயன் இல்லை

யாருக்கும் பயன் இல்லை

ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு முதன்மை தேவை கட்டமைப்பு மேம்பாடும், தொழில் வளர்ச்சியும் தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
தமிழ்நாட்டில் நடத்தப்படும் மாநாடுகளுக்கு உலக முதலீட்டாளர்கள் மாநாடு என்று பெயர் சூட்டப்பட்டு இருந்தாலும் கூட, அது கடமைக்கு விளம்பரம் தேடும் நிகழ்ச்சியாக மட்டுமே அமைகிறது. இதனால் யாருக்கும் பயன் கிடையாது. முந்தைய ஜெயலலிதா ஆட்சியின் தொடக்கத்திலேயே உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

 2.32 லட்சம் கோடி முதலீடுகள்

2.32 லட்சம் கோடி முதலீடுகள்

பல்வேறு காரணங்களால் தாமதப்படுத்தப்பட்டு 2015-ம் ஆண்டு தொடக்கத்தில் நடத்தப்படுவதாக இருந்த மாநாடு, சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பதவி நீக்கப்பட்டிருந்த ஜெயலலிதா முதல்-அமைச்சராக்கப்பட்ட பிறகு தான் நடத்த வேண்டும் என்பதற்காக 2015ம் ஆண்டு செப்டம்பர் 9, 10 தேதிகளில் நடத்தப்பட்டது. மாநாட்டில் ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு கிடைத்ததாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், கள அளவில் எந்த விதமான தொழில் வளர்ச்சியோ, வேலைவாய்ப்பு பெருக்கமோ ஏற்படவில்லை என்பது தான் உண்மையாகும்.

 ஆதாரங்கள் இருக்கின்றன

ஆதாரங்கள் இருக்கின்றன

இதுவரை செயலாக்கம் பெற்ற முதலீடுகளின் மதிப்பு சுமார் ரூ.13,000 கோடி மட்டும் தான். இது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் உறுதியளிக்கப்பட்ட தொகையில் வெறும் 5.34 விழுக்காடு மட்டும் தான். அதுமட்டுமின்றி, தமிழக அரசின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாததால் மின்னுற்பத்தித் துறையில் ரூ.1.07 லட்சம் கோடி முதலீடு செய்யும் திட்டத்தை பெரு நிறுவனங்கள் கைவிட்டு விட்டன. தமிழக அரசால் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாடு படுதோல்வி அடைந்து விட்டது என்பதை உறுதி செய்ய இந்த ஆதாரங்களே போதுமானவை ஆகும்.

 சொன்னதை செய்த ஆந்திரம்

சொன்னதை செய்த ஆந்திரம்

2015-ம் ஆண்டு உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு ரூ.100 கோடி செலவாகும் என்று கூறப்பட்டாலும் உண்மையில் ரூ.300 கோடிக்கும் கூடுதலாக செலவானது. ஆனால், அதற்கேற்ற பயன் இல்லை. கடந்த தொடக்கத்தில் ஆந்திரத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.10 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீட்டுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அதன்பின் ஓராண்டு கூட நிறைவடையாத நிலையில் இதுவரை 60 விழுக்காட்டுக்கும் கூடுதலான முதலீடுகள் வந்து குவிந்துள்ளன. அதனால் பல லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது.

 ஊழல் இல்லாத நிலை

ஊழல் இல்லாத நிலை

மாறாக பெயரளவில் முதலீட்டாளர் மாநாடுகளை நடத்தி மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பது தவறாகும். தமிழ்நாட்டில் போர்க்கால அடிப்படையில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். புதிய தொழில் திட்டங்களுக்கு விண்ணப்பித்த 3 வாரங்களில் அனைத்து அனுமதிகளும் வழங்கப்பட வேண்டும். தமிழகத்தில் ஊழல் என்பது இல்லாத நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு செய்தால் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தாமலேயே முதலீடுகள் குவியும். அத்தகைய நிலையை இன்னும் சில ஆண்டுகளில் பாட்டாளி மக்கள் கட்சி ஏற்படுத்தும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

English summary
Ramadoss slams TN Government on World Investors Meet. Earlier Tamilnadu Government postponed the Investors meet that is planed to happen on Mid of this year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X