For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

8 துணைவேந்தர் பதவிகள் காலி... பழுதடைந்த பஸ்களாக தமிழக பல்கலை.கள்... ராமதாஸ் தாக்கு

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் பல மாதங்களாக 8 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர் பதவி இடங்கள் காலியாக இருந்தும் நிரப்பப்படாமல் இருக்கின்றன என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சாடியுள்ளார்.

இது தொடர்பாக ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்குவதற்கும், புதுமைகள் படைப்பதற்கும் அடிப்படைத் தேவை ஆரோக்கியமான, கல்வி ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடிய பல்கலைக்கழகங்கள் ஆகும். ஆனால், தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள் பழுதடைந்த பேருந்துகளைப் போல முடங்கிக்கிடக்கின்றன. தமிழ்நாட்டில் சென்னை பல்கலைக்கழகம் உட்பட 8 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவி காலியாகக் கிடக்கிறது.

ஒரே நேரத்தில் இத்தனை பல்கலைக்கழகங்கள் தலைமை இல்லாமல் தடுமாறும் அவலம் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. இவற்றில் சென்னை பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தர்கள் மட்டுமே இந்த வாரத்தில் பணி ஓய்வு பெற்றனர். மீதமுள்ள 6 பல்கலைக்கழகங்களில் கோவை பாரதியார் பல்கலைக்கழத்தின் துணைவேந்தர் பதவி செப்டம்பர் 17ஆம் தேதி முதல் 4 மாதங்களாகவும், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம், சென்னை கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தர் பதவிகள் கடந்த ஆண்டு ஜூலை முதல் 6 மாதங்களாகவும் காலியாக உள்ளன. இவற்றுக்கெல்லாம் முன்பிலிருந்தே மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவி கடந்த 09.04.2015 முதல் 10 மாதங்களுக்கும் மேலாக காலியாக உள்ளது. இந்த பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை தேர்வு செய்ய குழுக்கள் அமைக்கப்பட்ட போதிலும் எந்த முன்னேற்றமும் இல்லை.

நிர்வாக முடக்கம்

நிர்வாக முடக்கம்

பல்கலைக்கழகங்களின் இயக்கத்தில் மூளையை போன்றது துணைவேந்தர் பதவி ஆகும். இந்த பதவி காலியாக இருப்பதால் 8 பல்கலைக்கழகங்களின் நிர்வாகங்களும் முடங்கிவிட்டன. துணைவேந்தர் இல்லாததால் இந்த பல்கலைக்கழகங்களில் கொள்கை அடிப்படையிலான முடிவுகளை எடுக்க முடிய வில்லை; பட்டமளிப்பு விழாக்களை நடத்த இயலவில்லை. புதிய ஆய்வுகளைத் தொடங்க முடியவில்லை. பல்கலைக்கழகங்களில் காலியிடங்களை நிரப்பமுடியவில்லை. மொத்தத்தில் 8 பல்கலைக்கழகங்களும் முடங்கிக்கிடக்கின்றன. கடந்த 17.08.2013 அன்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் 155&ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுப் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா,‘‘பல்கலைக்கழக கல்வியின் உலக மையமாக தமிழகத்தை உருவாக்க பாடுபட்டுவருகிறேன்'' என்று ஜெயலலிதா கூறினார். எட்டு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பதவியை பல மாதங்களாக நிரப்பாமல் வைத்திருப்பது தான் தமிழகத்தை உயர்கல்வி உலக மையமாக மாற்றும் வழியா? என்பதை ஜெயலலிதா விளக்க வேண்டும்.

பேரம்தான் காரணம்

பேரம்தான் காரணம்

துணைவேந்தர் பதவிகள் இன்னும் நிரப்பப்படாமல் இருப்பதற்கான காரணத்தை அறிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளத் தேவையில்லை. துணைவேந்தர் பதவிக்கான விலை பேரம் இன்னும் முடியாதது தான் இதற்கான காரணம் ஆகும். துணைவேந்தர் பதவி என்பது உயர்கல்வியை வளர்ப்பதில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஆனால், இப்பதவிக்கு ஆட்களைத் தேர்வு செய்வதில் வெளிப்படைத்தன்மை சிறிதும் கடைபிடிக்கப்படுவதில்லை. தேர்வுக்குழு அமைப்பதிலேயே முறைகேடுகள் தொடங்குகின்றன. துணை வேந்தரை தேர்வு செய்யும் குழுவினர் துணைவேந்தரை விட உயர்பதவியில் இருப்பவர்களாக இருக்க வேண்டும். ஆனால், துணைவேந்தரை விட குறைந்த நிலையில் உள்ள கல்லூரி முதல்வர்கள் தான் பல தேர்வுக்குழுக்களுக்கு அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

உரிய விலை கொடுத்தா போதும்..

உரிய விலை கொடுத்தா போதும்..

பல்கலைக்கழகத்தில் கடைநிலை ஆசிரியர் பணியான உதவிப் பேராசிரியர் பணிக்கு கூட கல்வித் தகுதியைத் தவிர பல்வேறு கூடுதல் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஆனால், துணைவேந்தர் பணிக்கு கூடுதல் தகுதிகள் எதுவுமே தேவையில்லை. நேர்காணலில் கூட பங்கேற்கத் தேவையில்லை. ஆட்சியாளர்களை சந்தித்து பேசி, உரிய விலையை கொடுத்துவிட்டால் துணைவேந்தர் பதவி உறுதியாகிவிடும் என்பது தான் உண்மை.

காமராஜர் பல்கலை.

காமராஜர் பல்கலை.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தரை தேர்வு செய்ய 06.04.2015 அன்று தேர்வுக்குழு அமைக்கப்பட்டது. ஆனால், 10 மாதங்களாகியும் துணைவேந்தர் தேர்வு செய்யப்படவில்லை. இதற்கு காரணம் அப்பதவிக்கு நிலவும் போட்டியல்ல. மாறாக அப்பதவிக்கு முதல்வரும் உயர்கல்வித்துறை அமைச்சரும் யாருடைய பெயரையும் இன்னும் பரிந்துரைக்கவில்லை என்பது தான் காரணம்.

பொம்மை குழு

பொம்மை குழு

தேர்வுக்குழு என்பதே பொம்மைக்குழு தான். ஆட்சியாளர்கள் தான் துணைவேந்தர் பதவிக்கு விலை நிர்ணயம் செய்து, அதைக் கொடுக்கும் ஆட்களை தேர்வு செய்கின்றனர். அமைச்சரிடமிருந்து இதுபற்றிய தகவல் வந்த அடுத்த நிமிடமே அவர் பெயர் பட்டியலில் சேர்க்கப்பட்டு பணி ஆணை வழங்கப்படும். ஒரு துணைவேந்தர் பதவிக்கு ரூ.6 கோடி முதல் ரூ.40 வரை விலை பேசப்படுவதாக கூறப்படுகிறது. இவ்வணிகத்தில் உயர்கல்வி அமைச்சர் சிறந்தவர் என்பதால் தான் அவரால் ஆட்சி மேலிடத்திடம் செல்வாக்குடன் திகழ முடிகிறது. ஆட்சியாளர்களின் இந்த வணிக விளையாட்டால் உருக்குலைவது உயர்கல்வியும், துணைவேந்தராக தகுதி & திறமை கொண்ட பேராசிரியர்களின் எதிர்காலமும் தான்.

3 மாதங்களுக்கு முன்பே...

3 மாதங்களுக்கு முன்பே...

தமிழகம் வளர்ச்சியடைய வேண்டுமானால் உயர்கல்வி நிறுவனங்களான பல்கலைக்கழகங்கள் மேம்படுத்தப்பட வேண்டியது அவசியம் ஆகும். எனவே, காலியாக உள்ள 8 பல்கலைக்கழகங்களுக்கும் துணைவேந்தர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, துணைவேந்தர் பணி நிறைவு அடைவதற்கு 3 மாதங்களுக்கு முன்பே புதிய துணைவேந்தர் தேர்வுக்கான பணிகளைத் தொடங்கி வெளிப்படையான முறையில் நியமனம் மேற்கொள்ளப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

English summary
PMK founder Dr Ramdoss has slammed TN govt on vacancies of VC post.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X