For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீண்டும் மருத்துவ நுழைவுத் தேர்வு ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் - ராமதாஸ்

Google Oneindia Tamil News

சென்னை: தேசிய அளவில் மீண்டும் மருத்துவக் கல்லூரிகளுக்கு நுழைவுத் தேர்வு என்பது ஏற்றுக் கொள்ள முடியாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்

இதுகுறித்த அவரது அறிக்கையில், ''இளநிலை மருத்துவம் மற்றும் பல்மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவில் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடத்தும் மத்திய அரசின் முடிவு சட்டவிரோதமானது என்று கடந்த 2013 ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட தீர்ப்பை உச்சநீதிமன்றம் திரும்பப் பெற்றுள்ளது. இதனால், இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டு இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரை தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களிலும் பொது நுழைவுத்தேர்வு நடத்தும் நிலை உருவாகியுள்ளது. இது ஏற்றுக்கொள்ள முடியாத தீர்ப்பாகும்.

Ramadoss speaks about Medical entance

கல்வி, மருத்துவம் ஆகியவை பொதுப் பட்டியலில் இருப்பதைக் காரணம் காட்டி, இவை தொடர்பான மாநில அரசுகளின் உரிமைகளில் மத்திய அரசு தலையிடுவது அதிகரித்து வருகிறது. அத்தகையதொரு நடவடிக்கையாகத்தான் மருத்துவப் படிப்புக்கு நாடு முழுவதும் நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டத்தை முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டுவந்தது. இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு செல்லாது என்றும், இதுதொடர்பான மத்திய அரசின் முடிவு சட்டவிரோதமானது என்றும் தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு மீது தான் நீதியரசர் அனில் தவே தலைமையிலான உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்புச் சட்ட அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இந்த நோக்கமும், நிலைப்பாடும் குறைகூற முடியாதவை. ஆனால், சில யானைகளைக் கொல்வதற்காக நடத்தப்படும் வேட்டையில் ஆயிரக்கணக்கான எறும்புகள் உயிரிழப்பதைப்போல, மாணவர் சேர்க்கை முறைகேடுகளில் ஈடுபடும் சில தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைகளால், நாடு முழுவதும் கோடிக்கணக்கான கிராமப்புற ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை மத்திய ஆட்சியாளர்களும், உச்சநீதிமன்ற நீதிபதிகளும் உணராமல் போனது துரதிருஷ்டவசமானதாகும்.

மருத்துவப் படிப்புக்கு நுழைவுத் தேர்வு நடத்தும்போது, அதற்காக தனிப் பயிற்சி வகுப்புகளில் சேரவேண்டியது அவசியமாகிறது. இத்தகையப் பயிற்சி வகுப்புகள் சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமே உள்ள நிலையில், கிராமப்புற மாணவர்களால் இத்தகையப் பயிற்சியைப் பெறுவது பூகோள அடிப்படையிலும், பொருளாதார அடிப்படையிலும் சாத்தியமற்றது.

இதனால், நகர்ப்புறங்களில் உள்ள பணக்கார மாணவர்கள் மட்டும்தான் மருத்துவப் படிப்புகளில் சேரமுடியும் என்ற நிலை ஏற்படும். மருத்துவப் படிப்பின் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதில் அக்கறைக்காட்டும் மத்திய அரசும், உச்சநீதிமன்ற நீதிபதிகளும் இப்படிப்பட்ட நடவடிக்கையால் கிராமப்புற ஏழை மாணவர்களில் மருத்துவப் படிப்புக் கனவு சிதைக்கப்பட்டுவிடும் என்பதை உணர மறுப்பது வருத்தமும், வேதனையும் அளிக்கிறது.

தமிழக மாணவர்களின் நலனை பாதிக்கும் இந்த முடிவுக்கு எதிராக தமிழகத்தைச் சேர்ந்த சமூக நீதியில் அக்கறை கொண்ட அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும். இந்தத் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்து இடைக்கால தடை பெறவேண்டும். பா.ம.க. ஆட்சிக்கு வந்தவுடன் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு சட்ட ரீதியிலான பாதுகாப்புப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.''என்று தெரிவித்துள்ளார்.

English summary
Medical entrance will spoil poor students future, PMK founder ramadoss says.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X