For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுக அமைச்சர்களின் முறைகேடு சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

அதிமுக அமைச்சர்களின் முறைகேடு சொத்துக்களை அரசுடைமையாக்க வேண்டும் என்றும், அவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக அமைச்சர்களின் சொத்துக்குவிப்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில் ரூ.89 கோடி அவரது மூலம் வினியோகிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதுதவிர அவரது உதவியாளர்களிடமிருந்து ரூ.5.5 கோடி ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Ramadoss statement about AIADMK Ministers assets

சென்னை இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக அம்மா அணி வேட்பாளராக போட்டியிடும் தினகரனுக்காக ஒவ்வொரு வாக்காளருக்கும் தலா ரூ.4000 வீதம் வழங்கும் பொறுப்பை அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்றுக்கொண்டிருக்கிறார். அதன்படி வாக்காளர்களுக்கு ரூ.100 கோடிக்கு மேல் வழங்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், ரூ.89 கோடிக்கு மட்டும் தான் ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இவை தவிர தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த பல கட்சிகளின் தலைவர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் வினியோகிக்கப்பட்டிருக்கிறது. இவை தவிர ரொக்கமாக ரூ.5.50 கோடி பணம் பிடிபட்டிருப்பதையும் சேர்த்தால் சுமார் ரூ.125 கோடி பணம் அமைச்சர் விஜயபாஸ்கர் மூலம் செலவிடப்பட்டிருக்கிறது.

இது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் என்ற அடிப்படையில் இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட வேண்டும்; பணம் வினியோகித்த விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதெல்லாம் ஒருபுறமிருக்க, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு இவ்வளவு பணமும் எங்கிருந்து கிடைத்தது என்ற வினாவுக்கு விடை தேட வேண்டியதும் அவசியமாகும்.

இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தல் செலவுக்கான தொகையை விஜயபாஸ்கர் ஒரு வாரத்தில் திரட்டியதாகக் கூறப்படுகிறது. மருந்து நிறுவனங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகள் ஆகியவற்றிடமிருந்து இந்தப் பணம் கையூட்டாக பெறப்பட்டதாக தெரிகிறது. தேர்தல் செலவுக்காக மட்டும் ஓர் அமைச்சரால், ஒரு வாரத்தில் ரூ.125 கோடியை கையூட்டாக வாங்க முடியும் என்றால், அதிமுகவைச் சேர்ந்த ஒட்டுமொத்த அமைச்சர்களும் கடந்த 6 ஆண்டுகளில் எவ்வளவு ஊழல் செய்திருப்பார்கள்? முதலமைச்சராக இருந்தவர்கள் எத்தனைக் கோடிகளை குவித்திருப்பார்கள்? என்பதை கணக்கிட்டுப் பார்த்தாலே தலையை சுற்றும். அந்த அளவுக்கு ஊழல் தலைவிரித்தாடியுள்ளது.

2011-ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அரசு பதவியேற்ற நாளில் இருந்தே ஆற்றுமணல் கொள்ளை, தாதுமணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, துணைவேந்தர் மற்றும் பேராசிரியர்கள் நியமனம், அனைத்து வகை கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குதல், தொழில் தொடங்குவதற்கு உரிமங்களை வழங்குதல் என அனைத்துக்கும் ஒரு விலை நிர்ணயிக்கப்பட்டு முறைப்படுத்தப்பட்ட வகையில் ஊழல் நடைபெற்று வருகிறது. தகுதி, திறமை அனைத்தும் பின்னுக்குத் தள்ளப்பட்டு ஊழலுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அமைச்சர்களாக இருந்தவர்களும், இருப்பவர்களும் தங்களின் துறை சார்ந்த திட்டங்களை வகுத்து செயல்படுவதற்கு பதிலாக, திட்டங்களுக்கான ஒப்பந்தம், பணி நியமனம் ஆகியவற்றைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்துத் தரும் முகவர்களாக மட்டுமே செயல்பட்டனர் என்பது மறுக்க முடியாத உண்மை. அதேநிலை தான் இப்போதும் தொடர்கிறது.

முந்தைய ஆட்சியில் அதிமுக மூத்த அமைச்சர்கள் சிலர் ஊழல் மூலம் குவித்த பணத்தில் ஒரு பகுதியை தலைமையிடம் கணக்குக் காட்டாமல் தாங்களே பதுக்கிக் கொண்டதாக உளவுத்துறை மூலம் கிடைத்த தகவல்களை அடுத்து, ஐவர் குழு என்றழைக்கப்படும் 5 அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி பல்லாயிரம் கோடி பணமும், சொத்துக்களும் மேலிடத்தால் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாயின. 2 அமைச்சர்கள் உடனடியாக உண்மையை ஒப்புக்கொண்டு பணத்தை ஒப்படைத்துவிட்டதால் அவர்கள் மன்னிக்கப்பட்டதாகவும், மீதமுள்ள மூன்று அமைச்சர்களும் கடுமையான விசாரணைக்குப் பிறகே உண்மையை ஒப்புக்கொண்டதாகவும் செய்திகள் வெளியாகின.

மூத்த அமைச்சர்கள் அனைவருமே குவித்து வைத்திருந்த சொத்துக்கள் மற்றும் பணத்தில் ஒரு பகுதியை தலைமையிடம் ஒப்படைத்து விட்டு, மீதமுள்ள பணம் மற்றும் சொத்துக்களை பாதுகாப்பாக பதுக்கி வைத்து விட்டதாக கூறப்பட்டது. அமைச்சர்களிடமிருந்து பறிக்கப்பட்ட பணம் - சொத்துக்களின் மதிப்பு ரூ.30,000 கோடி என்று செய்திகள் வெளிவந்தன. கிட்டத்தட்ட இதே அளவிலான பணத்தை முன்னாள் ஐவர் அணியினர் பதுக்கிவிட்டனர். அந்த ஐவர் அணியினரில் ஒருவர் இப்போது முதல்வராக இருக்கும் நிலையில், மீதமுள்ள நால்வரில் இருவர் சசிகலா அணியிலும், இன்னும் இருவர் பன்னீர் செல்வம் அணியிலும் உள்ளனர். இவர்களைத் தவிர்த்த பிற அமைச்சர்களும் பெருமளவில் ஊழல் செய்து சொத்துக்களைக் குவித்துள்ளனர். தமிழகம் கிட்டத்தட்ட ஆறு லட்சம் கோடி கடன் சுமையில் தள்ளாடிக் கொண்டிருக்கும் நிலையில், மாநிலத்தின் வளங்களையும், மக்களின் வரிப்பணத்தையும் அமைச்சர்கள் கொள்ளையடித்து சொத்துக்களாக குவித்து வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது.

எனவே, 2011-ஆம் ஆண்டு முதல் யார், யாரெல்லாம் அமைச்சர்களாக இருந்து சொத்துக்குவித்தார்களோ அவர்கள் மீதெல்லாம் சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்து, ஊழல் மூலம் அவர்கள் சேர்த்த சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து அரசுடைமையாக்க ஆளுனர் ஆணையிட வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

English summary
PMK founder Ramadoss statement issues about AIADMK Ministers assets seized
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X