For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழக பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும் - ராமதாஸ் கோரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: வளைகுடா நாடுகளில் வீட்டுப்பணி செய்யும் தமிழக பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சவுதி அரேபியாவில் வீட்டுப்பணி செய்யச் சென்ற வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கஸ்தூரி என்ற பெண்ணின் கைகளை அவர் பணியாற்றும் வீட்டின் உரிமையாளர் கொடூரமான முறையில் வெட்டித் துண்டாக்கியது குறித்து அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியாகியிருக்கின்றன.

Ramadoss statement about women stuck in household works in gulf countries

இதனால், வளைகுடா நாடுகளில் பணியாற்றும் தமிழ்நாட்டு பெண்களின் பாதுகாப்பு குறித்து பெரும் அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

சவுதி அரேபியா பயணம்:

வீட்டு வேலை செய்வதற்காக மாதம் ரூபாய் 23,000 ஊதியம் என்று கூறித் தான் கடந்த ஜூலை மாதம் 28 ஆம் தேதி கஸ்தூரி முனிரத்தினம் சவுதி அரேபியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், அங்கு சென்றதில் இருந்தே அதிக நேரம் பணி செய்யும்படி கட்டாயப்படுத்தப்பட்டார். உணவும், ஊதியமும் கூட முறையாக வழங்கப்படவில்லை. சவுதி அரேபியாவில் பணியாற்றும் பெரும்பாலான பெண்களின் நிலையும் இப்படிப்பட்டதாகவே இருக்கிறது.

இரண்டு பேருக்கு மட்டுமே துணிச்சல்:

இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் 7 பெண்களிடம் அந்நாட்டு அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்தனர். அவர்களில் 5 பெண்கள் மிரட்டலுக்கு பணிந்து விசாரணைக்கு வராமல் பின்வாங்கிய நிலையில், கஸ்தூரி உள்ளிட்ட இருவர் மட்டும் துணிச்சலாக தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து பட்டியலிட்டுள்ளனர்.

கத்தியால் வெட்டித் தள்ளிய கொடூரம்:

அதிகாரிகள் நடத்திய விசாரணையிலும் இது உறுதி செய்யப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த வீட்டு உரிமையாளர்கள் கஸ்தூரியை அறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர். அவர்களிடம் தப்புவதற்காக மூன்றாவது மாடியிலிருந்து சேலையை கட்டி, அதைப் பிடித்துக்கொண்டு இறங்கிய போது தான் அவரை வீட்டு உரிமையாளர்கள் கத்தியால் வெட்டி மாடியிலிருந்து கீழே தள்ளியிருக்கின்றனர் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. கஸ்தூரிக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை கேட்கும் போதே நெஞ்சம் பதறுகிறது.

இந்தியப் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள்:

உண்மையில், கஸ்தூரிக்கு இழைக்கப்பட்ட கொடுமை வளைகுடா நாடுகளில் பணியாற்றும் இந்தியப் பெண்களுக்கு இழைக்கப்படும் கடலளவு கொடுமைகளில் சிறுதுளி மட்டும் தான். வீட்டுப் பணிக்காகவும், வேறு பணிகளுக்காகவும் அழைத்துச் செல்லப்படும் பெண்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாக்கப் படுகின்றனர். ரூபாய் 25,000 முதல் ரூபாய் 30,000 வரை ஊதியம் வழங்குவதாக அழைத்துச் செல்லப்படும் அவர்களுக்கு அதில் மூன்றில் ஒரு பங்கு கூட தரப்படுவதில்லை.

மாறும் உரிமை மறுப்பு:

மாறாக ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 15 மணி நேரம் வரை பணியாற்றும்படி கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு விடுமுறை மறுக்கப் படுவதுடன், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். ஓரிடத்தில் பணியாற்ற பிடிக்கவில்லை என்றால், இன்னொரு இடத்திற்கு மாறும் உரிமை மறுக்கப்படுகிறது. ஆடு, மாடுகளை அடைப்பதற்குக் கூட லாயக்கற்ற இடங்களில் தங்க வைக்கப்படுக்கிறார்கள். இதுகுறித்து வளைகுடா நாட்டு அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் செய்யப்படும் போதிலும் எந்த பயனும் ஏற்படவில்லை.

90 ஆயிரம் இந்தியப் பெண்கள்:

சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட், குவைத், பஹ்ரைன், ஓமன், கத்தார் ஆகிய வளைகுடா நாடுகளில் இந்தியாவைச் சேர்ந்த 90 ஆயிரம் பெண்கள் வீட்டுப் பணிப்பெண்களாக பணியாற்றுகின்றனர். இவர்களில் சுமார் 35 ஆயிரம் பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் தவிர சுற்றுலா விசாவில் வளைகுடா நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படும் ஆயிரக்கணக்கான பெண்கள் சட்டவிரோதமாக வீட்டுப்பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

மீண்டு வர வழியில்லை:

அவர்களுக்கு விசா இல்லை என்பதாலும், அவர்களின் பாஸ்போர்ட்டுகளை உரிமையாளர்கள் பறித்து வைத்துக் கொள்வதாலும் அவர்களால் அந்தக் கொடுமைகளில் இருந்து மீண்டு வர முடியவில்லை. இக்கொடுமைகளை அறியாத பெண்கள், தங்கள் குடும்ப வறுமையை போக்குவதற்காக வளைகுடா நாடுகளுக்கு சென்று கொடிய வலையில் சிக்கிக் கொள்கிறார்கள். இந்தக் கொடுமைகளில் இருந்து அவர்களை மீட்டெடுக்க வேண்டும்.

வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும்:

இதற்காக தமிழக அரசு அதிகாரிகள், இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் அடங்கியக் குழுவை அனைத்து வளைகுடா நாடுகளுக்கும் அனுப்பி அங்குள்ள தமிழகம் உள்ளிட்ட இந்தியப் பெண்களின் நிலைமை குறித்து ஆராய வேண்டும். அவர்கள் என்னென்ன வாக்குறுதி அளித்து அழைத்துச் செல்லப் பட்டார்களோ அந்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படுவதையும், தொழிலாளர் நல விதிகள் அனைத்தும் பின்பற்றப்படுவதையும் இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்தியா உறுதி செய்ய வேண்டும்:

வளைகுடா நாடுகளில் பணியாற்ற அழைத்து வரப்படும் இந்தியப் பெண்கள் ஒவ்வொருவரின் பெயரிலும் ரூபாய் 1.60 லட்சம் அதாவது 2500 அமெரிக்க டாலர் வங்கி உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என்று 18 நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. ஆனால், சவுதி அரேபியாவும், குவைத்தும் இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்தவில்லை. அனைத்து வளைகுடா நாடுகளும் இதை செயல்படுத்துவதை இந்தியா உறுதி செய்ய வேண்டும்.

தாயகம் திரும் உதவுங்கள்:

வளைகுடா நாடுகளில் பணியாற்ற விருப்பமற்ற பெண்கள் தாயகம் திரும்பவும், அவர்கள் பெயரில் அளிக்கப்பட்டுள்ள வங்கி உத்தரவாதம் ரூபாய் 1.60 லட்சத்தை அவர்களுக்கு இழப்பீடாக வழங்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, கை துண்டிக்கப்பட்ட கஸ்தூரியை தமிழகம் அழைத்து வந்து உயர்தர சிகிச்சை அளிக்கவும், அவருக்கு அவரது உரிமையாளர்களிடம் ரூபாய் 25 லட்சம் இழப்பீடு பெற்றுத் தருவதற்கும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

English summary
central and TN govt will take action for women who are all stuck in gulf countries, ramadoss statement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X