For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போக்குவரத்துக் தொழிலாளர்களுக்கு அரசே ஓய்வூதியம் வழங்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

போக்குவரத்துக் கழகங்களின் நிதிச்சுமை முழுவதையும் அரசே ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: போக்குவத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு தமிழக அரசே நேரடியாக ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

''தமிழக அரசின் நிதிநிலை எந்த திசையில் பயணம் செய்து கொண்டிருக்கிறது என்பதற்கு இரு சிறந்த உதாரணங்கள் அரசுப் போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியமும், அண்ணாமலைப் பல்கலைக்கழக பணியாளர்களுக்கு ஊதியமும் வழங்கப்படாமல் இருப்பது தான். தமிழக அரசுத் துறைகளில் ஊழலும் நிர்வாகச் சீர்கேடும் பெருகி விட்டது தான் இந்த அவலநிலைக்கு காரணமாகும்.

Ramadoss statement demanding pensions for transport workers

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற சுமார் 70 ஆயிரம் தொழிலாளர்களுக்கு டிசம்பர் மாத ஊதியம் இன்று வரை வழங்கப்படவில்லை. இதைக் கண்டித்து போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் தமிழ்நாடு முழுவதும் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைகள் முன் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆனாலும், அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கான அறிகுறிகள் கூட தென்படவில்லை. இதற்குக் காரணம் ஓய்வூதியம் வழங்குவதற்குத் தேவையான நிதி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் ஓய்வூதிய நிதி அறக்கட்டளையிடம் இல்லாதது தான்.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் 1998ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்காக ஓய்வூதிய நிதி அறக்கட்டளை என்ற தனி அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. போக்குவரத்துக்கழகத் தொழிலாளர்களிடமிருந்து அவர்களது ஊதியத்தில் 12% பிடித்தம் செய்யப்பட்டு ஓய்வூதிய நிதி அறக்கட்டளையில் செலுத்தப்படும்.

அதேபோல், போக்குவரத்துக் கழக நிர்வாகத்தின் பங்காகவும் 12% அறக்கட்டளையில் செலுத்தப்படும். தொழிலாளர்கள் ஓய்வுபெறும் போது அவர்கள் செலுத்திய தொகை ஓய்வூதியப் பயனாக வழங்கப்படும். நிர்வாகத்தின் சார்பில் செலுத்தப்பட்ட தொகையிலிருந்து மாதம் தோறும் ஓய்வூதியம் வழங்கப்படும். இது தான் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் முறையாகும்.

இத்திட்டம் முறையாக செயல்படுத்தப்பட்டிருந்தால் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியமும், ஓய்வூதியப் பயன்களும் தடையின்றி தொழிலாளர்களுக்கு கிடைத்திருக்க வேண்டும். ஆனால், கடந்த மாத ஓய்வூதியத்தைக் கூட தொழிலாளர்களுக்கு வழங்க முடியாத அளவுக்கு அறக்கட்டளையில் நிதி வறட்சி ஏற்பட்டிருக்கிறது.

போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்பு நிதியும், போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள் சார்பில் செலுத்தப்படும் பங்கு தொகையும்தான் அறக்கட்டளையின் நிதி ஆதாரங்கள் ஆகும். இந்நிதியை பல திட்டங்களில் முதலீடு செய்து அவற்றின் மூலம் கிடைக்கும் வருவாயிலிருந்து தான் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

ஆனால், அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் நிலவும் ஊழல்கள் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளால் போக்குவரத்துக் கழகங்கள் அனைத்தும் நஷ்டத்தில் இயங்குகின்றன. அன்றாடச் செலவுகளுக்குக் கூட நிதி இல்லாத நிலையில், தொழிலாளர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை ஓய்வூதிய நிதி அறக்கட்டளையில் செலுத்தாமல், தங்களின் சொந்த செலவுகளுக்கு போக்குவரத்துக் கழகங்கள் பயன்படுத்திக் கொண்டன. இந்த வகையில் மட்டும் ஓய்வூதிய நிதி அறக்கட்டளைக்கு போக்குவரத்துக் கழகங்கள் ரூ.4000 கோடி பாக்கி வைத்துள்ளன.

தங்களிடமிருந்த பணம் தவிர, தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம் உள்ளிட்ட பிற நிறுவனங்களிடம் கடன் வாங்கியும் ஓய்வூதியம் வழங்கிய அறக்கட்டளை நிலைமை கைமீறிப் போனதால் கடந்த மாத ஓய்வூதியத்தை வழங்க மறுத்து விட்டது.

இதே காரணத்தினால் தான் 2012-ம் ஆண்டு முதல் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஓய்வு பெற்ற பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு ஓய்வூதியப் பயன்கள் வழங்கப்படவில்லை. ஒவ்வொரு தொழிலாளருக்கும் ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை நிலுவை உள்ளது. சராசரியாக ரூ.8 லட்சம் என வைத்துக் கொண்டால் கூட ஓய்வூதியப் பயனாக ரூ.800 கோடி வழங்கப்பட வேண்டியிருக்கிறது.

இவை தவிர கடந்த 6 மாதங்களில் எல்.ஐ.சி. பிரிமியமாக செலுத்தப்பட வேண்டிய ரூ. 30 கோடி, கூட்டுறவு கடன் வழங்கும் சங்கங்களுக்கு செலுத்தப்பட வேண்டிய ரூ.80 கோடி, 8 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகை, ஆறு மாதங்களாக வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியப் பயன் திட்டம் (RBS), ஈட்டிய விடுப்பு ஒப்படைப்புத் தொகை என அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் பாக்கி வைத்துள்ள தொகை மட்டும் ரூ.7,000 கோடி அளவுக்கு குவிந்திருப்பதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிதிச் சுமையையும், நிதி நெருக்கடியையும் அரசுப் போக்குவரத்துக் கழகங்களால் நிச்சயமாக சமாளிக்க முடியாது. அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு தமிழக அரசு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை மற்றும் மானியத்தின் மதிப்பே பல்லாயிரம் கோடியைத் தாண்டும்.

எனவே, போக்குவரத்துக் கழகங்களின் நிதிச்சுமை முழுவதையும் அரசே ஏற்றுக் கொண்டு, ஓய்வூதியப் பயன்கள் உள்ளிட்ட தொழிலாளர்களின் அனைத்து உரிமைகளையும் வழங்க வேண்டும். ஓய்வூதிய அறக்கட்டளைக்கு பதிலாக போக்குவத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு தமிழக அரசே நேரடியாக ஓய்வூதியம் வழங்க வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

English summary
PMK chief Ramadoss statement demanding pensions for transport workers
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X