For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

10 மாதக் குழந்தைக்கு பீர் கொடுத்த தந்தை.. தமிழகம் எங்கே போகிறது? - ராமதாஸ்

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: பிறந்து பத்துமாதமே ஆன பச்சிளம் குழந்தைக்கு பீர் கொடுத்து குடிக்க வற்புறுத்தும் கொடூர மனம் கொண்ட தந்தையைக் கைது செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், "பால் மனம் மாறாத மழலையின் வாயில் அதன் தந்தையே பீர் ஊற்றும் கொடூரக் காட்சி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. அரக்க மனம் படைத்த இளைஞர்கள் சிலர் 4 வயது குழந்தைக்கு மது புகட்டியதால் ஏற்பட்ட அதிர்ச்சியே விலகாத நிலையில், தந்தையே குழந்தைக்கு பீர் கொடுப்பதை மனிதர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.

ramadoss urged to arrest the father who gave beer to his 10 month old baby

முகநூல், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக பரவி வரும் அந்த வீடியோ மொத்தம் 2.43 நிமிடங்கள் ஓடக்கூடியது ஆகும். அதில், வீட்டின் அறையில் அமர்ந்துள்ள 10 மாதங்களே ஆன குழந்தையின் முன் இரு மது பாட்டில்களை அதன் தந்தை வைக்கிறார். பின்னர் பீர் பாட்டிலை குழந்தையின் வாயில் வைக்கிறார். அப்போது அந்த பாட்டிலின் மூடி திறக்கப்படவில்லை.

இதையறிந்த தந்தை மூடியை அகற்றி விட்டு பீர் பாட்டிலை குழந்தையின் வாயில் வைத்து மதுவை புகட்டுகிறார். அடுத்த காட்சியில் குழந்தையின் தலையை பீர் பாட்டிலை நோக்கி சாய்த்து மதுவைக் குடிக்கும்படி கட்டாயப் படுத்துகிறார். ஒரு கட்டத்தில் அவரும் பீரை குடித்துக் கொண்டே, "அப்பா எப்படி குடிக்கிறேன் பாரு" என்று கூறுகிறார். பின்னர் மீண்டும் குழந்தையின் வாயில் பீர் பாட்டிலை வைத்து மது புகட்டுகிறார்.

குழந்தை தடுமாறிக்கொண்டே மது குடிக்க முயல்வதை பார்த்து அதன் தந்தையும், அக்காட்சியை செல்பேசி வீடியோவில் படம் பிடிக்கும் குழந்தையின் தாயும் சிரிக்கின்றனர். இந்தக் காட்சியைப் பார்க்கும் போது தமிழகம் எங்கே போகிறது? என்பதை நினைக்கவே அச்சமாக உள்ளது. அந்த வீடியோ சென்னையில் தான் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

பெரியவர்கள் மது குடிப்பதே தவறு என்று பிரச்சாரம் செய்யப்பட்டு வரும் நிலையில், 10 மாதக் குழந்தைக்கு, குற்ற உணர்வே இல்லாமல், அதன் தந்தையே மது புகட்டுவதும், அதை அக்குழந்தையின் தாயாரே வீடியோ எடுத்து வெளியிடுவதும் நினைத்துப் பார்க்க முடியாத சீரழிவுகள் ஆகும்.

இத்தகைய செயல்களை ஒருபோதும் மன்னிக்க முடியாது. தமிழகத் தலைநகரான சென்னையில் தான் அந்த வீடியோ பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று தெரியவந்திருக்கிறது. இந்த நிகழ்வு குறித்த செய்தியும், படமும் இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் உலகப் புகழ்பெற்ற மெயில், டெய்லி மிர்ரர் போன்ற இதழ்களில் வெளியாகி உலகளவில் தமிழக மானத்தை கப்பலேற்றிக் கொண்டிருக்கின்றன.

தமிழ்நாடு என்ற பெயரை குடிகார நாடு என மாற்றிவிடலாம் என்று கூறும் அளவுக்கு இந்தியா முழுவதும் தமிழகத்தைப் பற்றி அவப்பெயர் உருவாகியிருக்கிறது. இப்போது தமிழகத்தின் மது பெருமை இந்தியாவைத் தாண்டி உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இது தான் தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திராவிடக் கட்சிகளின் சாதனையாகும்.

தமிழகத்தில் இதுவரை 4 வயது குழந்தை மது அருந்துவது தான் வேதனையான சாதனையாக இருந்தது. இப்போது அதை விஞ்சும் வகையில் 10 மாதக் குழந்தைக்கு மது புகட்டப்பட்ட கொடுமை நடந்திருக்கிறது. தமிழகத்தில் குழந்தைகளும், மாணவ, மாணவிகளும் உரிய வயதுக்கு முன்பே மது குடிக்கும் அவலம் ஏற்பட்டிருப்பதற்கு காரணம் தெருவுக்குத் தெரு மதுக்கடைகள் திறக்கப்பட்டு, தடையின்றி மது கிடைப்பது தான் என்று உலக சுகாதார நிறுவனம் (WHO) கூறியிருக்கிறது.

அந்த வகையில் குழந்தைகளுக்கு மது புகட்டப்படுவதற்கும் உலக அரங்கில் தமிழகத்தின் பெயர் கெடுவதற்கும் ஜெயலலிதா அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப் படுத்தப்போவதாக அறிவித்த ஜெயலலிதா, அதற்காக மேற்கொண்ட முதல் கட்ட நடவடிக்கைகள் எந்த வகையிலும் பயனளிக்கவில்லை. 500 மதுக்கடைகள் மூடப்பட்டுவிட்டன.

மது விற்பனை 2 மணி நேரம் குறைக்கப்பட்டு விட்டது என்றாலும் கூட அதனால் மது நுகர்வு எந்த வகையிலும் குறையவில்லை. படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப் படுத்த அரசு எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் ஆர்ப்பரித்து வரும் வெள்ளத்தை வெள்ளைக் கொடி காட்டி தடுப்பதற்கு சமமானவை ஆகும். இதனால் எந்த விதமான பயனும் ஏற்படப்போவதில்லை. தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தான் மதுவின் தீமைகளை முழுமையாக கட்டுப்படுத்த முடியும்.

இதை உணர்ந்து வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி விடுதலை நாள் முதல் தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, குழந்தைக்கு மது புகட்டிய தந்தையை கண்டுபிடித்து கைது செய்து மனநல ஆலோசனைகளை வழங்க வேண்டும்"என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்

English summary
Pmk founder ramadoss urged to arrest the father, who gave beer to his 10 month old baby
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X