For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெடுஞ்சாலை மதுக்கடைகளை இன்றுடன் மூட ஆணை.. பாமகவுக்கு கிடைத்த வெற்றி.. ராமதாஸ்

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: நெடுஞ்சாலையில் உள்ள மதுக்கடைகளை மூட சுப்ரீம் கோர்ட் உத்தவிட்டுள்ளது மதுவை ஒழித்து மக்களைக் காக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

நெடுஞ்சாலையிலிருந்து 100 மீ சுற்றளவுக்குள் மதுக்கடை அமைக்க அரசு அனுமதி கோரியிருந்தது. தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Ramadoss welcomed to Tasmac in highways should be closed from tomorrow

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாட்டில் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் அதையொட்டியுள்ள மதுக்கடைகளை இன்றுடன் மூட உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. மதுக்கடைகளை மூடாமல் இருப்பதற்காக தமிழக அரசின் சார்பில் முன்வைக்கப்பட்ட அனைத்து வாதங்களையும் உச்சநீதிமன்றம் நிராகரித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பு மதுவை ஒழித்து மக்களைக் காக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும்.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர், நீதிபதிகள் சந்திரசூட், நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய அமர்விடம், நெடுஞ்சாலையோர மதுக்கடைகளை அகற்ற நவம்பர் 28-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்க வேண்டும், மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிப் பகுதிகளில் உள்ள மதுக்கடைகளுக்கு இந்த ஆணையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும், நெடுஞ்சாலைகளில் இருந்து 100 மீட்டருக்கு அப்பால் மதுக்கடைகளை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் வாதிடப்பட்டது.
ஆனால், அந்தக் கோரிக்கைகளை ஏற்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். மதுக்கடைகளை மூடினால் அரசின் வருமானம் பாதிக்கப்படும் என்று கூறுவதே தவறு என்று குறிப்பிட்ட நீதிபதிகள், பூகோள சாத்தியக்கூறுகளைக் கருத்தில் கொண்டு 20,000-க்கும் குறைவான மக்கள் வசிக்கும் கிராமங்களில் மட்டும் நெடுஞ்சாலைகளிலிருந்து 220 மீட்டருக்கு அப்பால் மதுக்கடைகளை அமைத்துக் கொள்ள ஆணையிட்டனர். எனினும் இதனால் மூடப்படும் கடைகளின் எண்ணிக்கை பெரிய அளவில் குறையாது.

மக்கள் நலன் விரும்பும் அரசின் கடமை என்பது மக்களின் ஊட்டச்சத்து அளவையும், வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்துவது தான் என்றும், மருத்துவப் பயன்பாடு தவிர வேறு எதற்கும் மதுவைப் பயன்படுத்தக் கூடாது என்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வழிகாட்டி நெறிமுறைகள் பிரிவு 47-ல் தெளிவாக கூறப்பட்டிருக்கின்றன. ஆனால், அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகளை மதிக்காமல் மதுக்கடைகளை நடத்தியதுடன், மதுக்கடைகளை மூடினால் அரசின் வருமானம் போய்விடும் என்று உச்சநீதிமன்றத்திடம் கெஞ்சும் நிலைக்கு தமிழக அரசின் தரத்தை தாழ்த்தியது தான் திராவிடக் கட்சி ஆட்சிகளின் சாதனை ஆகும். இப்படி நிலைக்கு ஆளாக்கியதற்காக மக்களின் ஆட்சியாளர்கள் மன்னிப்பு கோர வேண்டும்.

மதுக்கடைகளுக்கு எதிரான அறப்போராட்டத்தை கட்சி தொடங்கிய நாளிலிருந்தே பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொண்டு வருகிறது. நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடுவதற்கான சட்டப் போராட்டத்தை வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவை மூலம் கடந்த 2012-ஆம் ஆண்டிலிருந்து பா.ம.க. மேற்கொண்டு வந்தது. ஐந்து ஆண்டுகால போராட்டத்தில் முதல்கட்டமாக தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்த 604 மதுக்கடைகள் மூடப்பட்டன. உச்சநீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ள உத்தரவின் மூலம் 3321 மதுக்கடைகள் மூடப்பட வேண்டும்.

20000 பேருக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் 220 மீட்டருக்கு அப்பால் உள்ள மதுக்கடைகளை மூடத்தேவையில்லை என்று நீதிபதிகள் கூறியிருப்பதால் மூடப்படும் கடைகளின் எண்ணிக்கை ஓரளவு குறையும் என்றாலும் , குறைந்தபட்சம் 3000 மதுக்கடைகளாவது இன்றுடன் மூடப்படும். தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன் 6815 மதுக் கடைகள் இருந்த நிலையில், அவற்றில் பாதிக்கும் கூடுதலாக சுமார் 3600 மதுக்கடைகளை அகற்ற வைத்ததும், அவற்றில் சுமார் 1700 மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வைத்ததும் பெரிய வெற்றியாகும்.

பாட்டாளி மக்கள் கட்சியின் மது ஒழிப்பு போராட்ட வரலாற்றில் இது குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமையும். நெடுஞ்சாலையோர மதுக்கடைகள் முழுமையாக அகற்றப்படுவதால் சாலை விபத்துக்களும், உயிரிழப்புகளும் பெருமளவில் குறையும்; அதனால் ஏழைக் குடும்பங்கள் ஆதரவற்றவர்களாவதும், இளம் வயதிலேயே பெண்கள் விதவைகளாவதும் தடுக்கப்படும் என்பதை நினைக்கும்போதே நெஞ்சம் இனிக்கிறது.

ஆட்சிக்கும், அதிகாரத்திற்கு வராமலே தமிழகத்தின் 70% மதுக்கடைகள் மூடவைத்த சாதனையை பாட்டாளி மக்கள் கட்சியைத் தவிர வேறு எவராலும் படைக்க முடியாது. நெடுஞ்சாலையோர மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற எனது விருப்பம் மற்றும் வழிகாட்டுதலின்படி வழக்கு தொடர்ந்து சாதித்த வழக்கறிஞர் சமூகநீதிப் பேரவை தலைவர் க.பாலு, அவருக்கு துணை நின்ற வழக்கறிஞர்கள் தனஞ்செயன், ஜோதிமணியன் ஆகியோருக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவையேற்று நெடுஞ்சாலையோர மதுக்கடைகளை அனைத்தையும் இன்று இரவுடன் மூட வேண்டும். தவறினால் தமிழகம் முழுவதுமுள்ள மதுக்கடைகளுக்கு பூட்டுப் போடும் போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும். அதற்கான தேதி நாளை அறிவிக்கப்படும். அதுமட்டுமின்றி, உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை முழு மதுவிலக்கை ஏற்படுத்துவதற்கான முதல்கட்ட நடவடிக்கையாகக் கருதி, அடுத்தக்கட்டமாக ஆகஸ்ட் 15-ஆம் தேதி விடுதலை நாள் முதல் தமிழகத்தில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

மதுக்கடைகளின் எண்ணிக்கை குறைவதால் அதற்கேற்ற வகையில் 50% மது ஆலைகளையும் மூட தமிழக அரசு ஆணையிட வேண்டும். மூடப்படும் மதுக்கடைகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு அவர்களின் கல்வித்தகுதிக்கு ஏற்ப மாற்று அரசு வேலை வழங்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

English summary
PMK founder Doctor Ramadoss welcomed to Tasmac in highways should be closed from tomorrow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X