For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்து மதத்தை அதிகமாக விமர்சிக்கும் கட்சியா தி.மு.க.?: கருணாநிதி விளக்கம்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: இந்து மதத்தை அதிகமாக தி.மு.க. விமர்சிக்கிறது என்பது உண்மையல்ல.. இந்து மத பாதுகாவலர் என்போரின் தீவிரவாத செயல்பாடுகளைத்தான் நாங்கள் ஏற்றுக் கொள்வதில்லை என தி.மு.க. தலைவர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.

தி இந்து ஆங்கில நாளேட்டுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி அளித்த பேட்டி விவரம்:

Ramanuja broke caste barriers: Karunanidhi

கேள்வி: ராமானுஜரைப் பற்றி இளம் வயதிலேயே தெரிந்து கொண்டீர்கள் என்றும், அவரது சீர்திருத்தச் சிந்தனையினால் கவரப்பட்டீர்கள் என்றும், ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளீர்கள்; ஆனாலும் இதுவரை ராமானுஜரைப் பற்றி எழுதாதற்குக் காரணம் உண்டா?.

பதில்: குறிப்பிட்டு எந்தக் காரணமும் இல்லை. ராமானுஜரைப் பற்றி எழுதுவதற்கான வாய்ப்பு அப்போது ஏற்படவில்லை. மதத்திலே புரட்சி செய்த மகான்களில் ராமானுஜரும் ஒருவர் என்பதை நான் அறிவேன். மாற்றத்திற்கு வித்திட்ட அப்படிப்பட்ட சம்பவங்களை மக்களிடம் எடுத்துச் சொல்லி சிந்தனைக்கு விருந்தாக்கிட வேண்டும் என்ற கோரிக்கை வந்தபோது, அதை ஏற்க முன் வந்தேனே தவிர, ராமானுஜரின் வரலாற்றில் ஒரு பகுதியை நான் எழுதுகிறேன் என்பதால், அவருடைய ஆத்திகக் கொள்கைகளில் நான் மூழ்கி ஏற்றுக் கொண்டு விட்டேன் என்றோ, நான் நீண்டகாலமாகப் பின்பற்றி வரும் சுயமரியாதை - நாத்திகக் கொள்கைகளை விட்டு விட்டேன் என்றோ பொருள் அல்ல.

ராமானுஜரின் ஆன்மீகக் கொள்கைகளுடன் எங்களுக்கு எவ்வித உடன்பாடும் சமரசமும் இல்லை என்ற போதிலும், அவரது மதச் சார்பற்ற அணுகுமுறையைப் பாராட்டுகின்ற பண்பினைக் கொண்டுள்ளோம்.

தாழ்த்தப்பட்டோர் மேம்பாடு

கேள்வி: ராமானுஜர் செய்த சமூக சீர்திருத்தங்களில் எதனை மிக முக்கியமானது என்று நீங்கள் கருதுகிறீர்கள்?.

பதில்: மற்றெல்லோரையும் போலவே தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களையும் பாகுபாடு காட்டாமல் சமமாக மதிக்க வேண்டும்; அவர்களைக் கை தூக்கி உயர்த்தி விட வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டதை அவர் செய்த சமூக சீர்திருத்தங்களிலேயே தலையாயது என்று நான் கருதுகிறேன்.

விரைவில் விடை..

கேள்வி: ஆன்மீகக் குருக்களைப் பொறுத்தவரை, அவர்கள் வாழ்க்கை வரலாற்றை விவரிப்பவர்கள், அதனை மிகைப்படுத்தி சொல்லியிருக்க வாய்ப்பு உள்ளது. ராமானுஜரைப் பற்றி இதுவரை எழுதப்பட்ட படைப்புகளில் உண்மை நிகழ்வுகள் எவை? புனைந்து கூறப்பட்ட விவரங்கள் எவை? என்று ஒரு கதாசிரியர் என்ற வகையில் எப்படிப் பிரித்துப் பார்ப்பீர்கள்?.

பதில்: மதங்களில் புரட்சி செய்த மகான், ராமானுஜர் என்ற தொடர் "கலைஞர் தொலைக்காட்சி"யில் ஒளிபரப்பப்படும்போது, உங்களுடைய இந்தக் கேள்விக்கு விடை கிடைக்கும்.

இந்து மத விமர்சனம்

கேள்வி: தி.மு.க. பிற மதங்களைக் காட்டிலும் இந்து மதத்தைப் பற்றி அதிகமான விமர்சனங்கள் வைக்கும் கட்சி என்ற ஒரு பரவலான கருத்து உண்டு. இந்தக் கருத்தை நீங்கள் எழுதும் இந்தத் தொலைக்காட்சி தொடர் தகர்க்குமா?.

பதில்: தி.மு.க.வைப் பற்றி நீங்கள் கூறும் பரவலான கருத்து உண்மையானதல்ல; எல்லா மதங்களையும் சமமாகப் பார்க்க வேண்டும் என்பது தான் எங்களுடைய கருத்து. இன்னும் சொல்லப் போனால், தி.மு.க.விலே உள்ள 90 சதவீதம் பேர் நீங்கள் கூறுகின்ற மதத்தைச் சேர்ந்தவர்கள் தான். ஆனால் இந்து மதத்திற்கே தாங்கள் தான் பாதுகாவலர்கள் என்பதைப் போலச் சொல்லிக் கொள்ளும் ஒரு சிலரின் தீவிரவாதச் செயல்பாடுகளைத் தான் நாங்கள் ஏற்றுக் கொள்வதில்லை.

சில ஐயங்கள்...

கேள்வி: நீங்கள் இறை மறுப்பாளராக இருப்பதனால், உங்கள் படைப்பு ராமானுஜர் வாழ்க்கை நிகழ்வுகளை திரித்துக் காட்டிவிடுமோ என்ற ஐயங்கள் எழுப்புவர்களுக்கு உங்கள் பதில் என்ன?.

பதில்: என்னைப் போன்றோர் இறை மறுப்பாளர்களாக இருந்தாலும், என்னைச் சுற்றியிருப்போரில் சிலரும், எங்கள் இயக்கத்திலே உள்ளவர்களில் சிலரும் அதிலே முழு ஈடுபாட்டோடு இல்லை என்பதை நான் நன்றாகவே அறிவேன். என்னுடைய இந்தத் தொடர் வெளி வந்த பிறகு, ராமானுஜரின் வாழ்க்கை நிகழ்வுகளை நான் திரித்துக் காட்டியிருக்கிறேனா என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். எங்கள் இயக்கக் கருத்துகளை, குறிப்பாக இறை பற்றிய எண்ணங்களை நாங்கள் யார் மீதும், ஏன் எங்கள் குடும்பத்தினர் மீதும் கூடத் திணித்துப் பழக்கப்பட்டவர்கள் அல்ல. எனவே என்னைப் பொறுத்தவரையில், நான் இறை மறுப்பாளனாக இருப்பதால், ராமானுஜருடைய வாழ்க்கை வரலாற்றில் ஒரு சில சம்பவங்களைத் தொடாமல் விட்டாலும் விடுவேனே தவிர, எதையும் திரித்தோ, இட்டுக்கட்டியோ எழுத மாட்டேன் என்பது மட்டும் உறுதி.

தி.மு.க. ஆட்சியில்..

கேள்வி: தி.மு.க. ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, ராமானுஜரையும், அவரது சமூகச் சீர்திருத்தங்களையும் அரசாங்கம் பெரிதாக அங்கீகரித்ததாகத் தெரியவில்லையே; எடுத்துக்காட்டாக அவர் கோவில் வழிபாட்டில் தமிழை அறிமுகம் செய்தது பற்றி?.

பதில்: தி.மு.க. ஆட்சிப் பொறுப்பிலே இருந்தபோது, ராமானுஜரைத் தனிப்பட்ட முறையில் பெரிதாக அங்கீகரிக்காவிட்டாலும், அவருடைய சமூகச் சீர்திருத்தங்களை எல்லாம் அங்கீகரிக்கும் வகையில் செயல்பட்டது என்பது தான் உண்மை. உதாரணத்திற்குச் சொல்லவேண்டுமேயானால், "அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக ஆணை" - "தமிழில் ஆகம நூல்கள்" - "தமிழில் வழிபாடு" - "தமிழில் வேள்வி" - "தமிழ் போற்றி" புத்தகங்கள் வெளியீடு" - ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் வாழும் பகுதியில் உள்ள திருக்கோவில் திருப்பணி - சைவத் திருமுறை ஆகமங்கள், வைணவ திவ்வியப் பிரபந்த பயிற்சி மையங்கள் என்று தி.மு.க. ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளைப் பற்றிய நீண்ட பட்டியலே உண்டு.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

English summary
DMK president M. Karunanidhi said the Dravidian movement accepted the ideas of Vaishnavite philosopher-saint Ramanuja because he transcended religion and caste, and wanted all communities to be treated equally.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X