For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மின்கம்பியை கடித்த ராம்குமார் வாயில், காலில் காயம் உள்ளதா.. பிரபல உடற்கூறு மருத்துவரின் சந்தேகம்

Google Oneindia Tamil News

சென்னை: மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததாகக் கூறப்படும் ராம்குமார் வாய் அல்லது காலில் காயம் ஏற்பட்டுள்ளதா என்பதன் மூலம் அது கொலையா அல்லது தற்கொலையா என்ற கேள்விக்கு பதில் கிடைத்து விடும் எனத் தெரிவித்துள்ளார் பிரபல உடற்கூறு மருத்துவரான டிகால்.

சுவாதி வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் கடந்த வாரம் புழல் சிறையில் மின்கம்பியைக் கடித்து தற்கொலை செய்து கொண்டார். ஆனால், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், எனவே, பிரேத பரிசோதனையின் போது தங்களது மருத்துவரும் இடம் பெற வேண்டும் எனவும் ராம்குமாரின் தந்தை வழக்குத் தொடுத்தார். இதனால் ராம்குமாரின் பிரேத பரிசோதனை தள்ளி வைக்கப்பட்டது.

Ramkumar suicide issue: Forensic expert Dr V Dikal’s interview

இந்த வழக்கில் இரண்டு நீதிபதிகளின் கருத்தில் முரண்பாடு ஏற்பட்டதால், மூன்றாவது நீதிபதியின் கருத்தை அறிவதற்காக, தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மூன்றாவது நீதிபதியாக நியமிக்கப்பட்ட கிருபாகரன் மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்தார். ஆனால், ராம்குமாரின் பிரேத பரிசோதனையில் எய்ம்ஸ் மருத்துவர் ஒருவரும் இடம் பெறுவார் என உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து ராம்குமார் தரப்பு மேல்முறையீடு செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ராம்குமாரின் உடல் ஆறாவது நாளாக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை பிணவறையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டை உலுக்கிய சாதிக் பாட்ஷாவின் சடலத்தை உடற்கூறு செய்து, அதிரடியாக பல சந்தேகங்களைக் கிளப்பியவரான பிரபல உடற்கூறு மருத்துவர் டிகால் ராம்குமார் மரணம் தொடர்பாக விகடனுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ஒருவர் இறந்து ஆறு மணி நேரத்திற்குள் மார்ச்சுவரிக்குள் கொண்டு சென்றுவிட்டால், தடயத்தைக் காப்பாற்ற முடியும். அதுவும், நான்கு டிகிரி உறைநிலையில் உடல் வைக்கப்பட்டிருந்தால், நூறு நாட்கள் ஆனாலும், புத்தம் புதிய உடலாகவே இருக்கும். இந்த உறைநிலையை சரியாக பராமரிக்காவிட்டால், ஆதாரங்களைக் காப்பாற்றுவது சிரமம். நான் பார்த்த வரையில் ஆறு மணி நேரத்திற்குள் மார்ச்சுவரிக்குள் ராம்குமார் உடலை அனுப்பிவிட்டார்கள்.

உறைநிலையை எப்படி பராமரிக்கிறார்கள் என்று தெரியவில்லை. மின் கம்பியைக் கடித்தும், அவரது வாயில் எரிந்ததற்கான காயம் இல்லை என்கின்றனர். நீர் பதம் இருக்கும் சமயத்தில் காயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவுதான். வாயின் உள்பகுதிக்குள் மின் கம்பியை அழுத்திக் கடித்திருந்தாலும், கால் வழியாக மின்சாரம் கடத்தப்பட்டிருக்க வேண்டும். அந்த இடத்தில் காயம் கட்டாயம் ஏற்படும். மின் கம்பியைக் கடிக்கும்போது புண் ஏற்படுவதற்குக் காரணம், உடலின் உள் மின்சாரம் பாயும்போது, தோல் அதைத் தடுக்கும் வேலையில் ஈடுபடும்.

ஒருமுறை அண்ணா நகரைச் சேர்ந்த ரேவதி என்பவர், மின்சாரத்தை உடலில் பாய்ச்சிக் கொண்டு இறந்துவிட்டதாகக் கூறி, பிரேத பரிசோதனைக்காக கொண்டு வந்திருந்தனர். ' அவர் தற்கொலை செய்து கொண்டார்' என உடற்கூறு மருத்துவர் தெரிவித்தார். நான் ஆய்வு செய்தபோது, அந்தப் பெண்மணியின் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, அதன்பிறகு உடலில் மின்சாரம் பாய்ச்சப்பட்டிருப்பதை கண்டறிந்தேன். இதன்பின்னரே கொலை வழக்காக மாற்றப்பட்டது. ரேவதி வழக்கில் தற்கொலை என்று முதலில் சான்று கொடுத்தவரும் அரசு மருத்துவர்தான். எனவே, ராம்குமார் மரணத்தில் தனியார் மருத்துவர் உடனிருக்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானதுதான். அதற்கு ஏன் அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது என்பதுதான் மர்மமாக இருக்கிறது.

தர்மபுரி இளவரசன் மரணத்திலும் எனக்குப் பல சந்தேகங்கள் இருந்தன. அவரது மரணத்தில் தலை மற்றும் கைகளில் காயங்கள் இருந்தன. அவரது கை மற்றும் காலில் உள்ள காயத்தின் அடிப்படையில், எந்தக் காயம் முதலில் ஏற்பட்டது? இரண்டு ஒரே நேரத்தில் நிகழ்ந்தவையா என்பதைக் கண்டுபிடித்திருந்தால் கொலையா? தற்கொலையா? என்பதை எளிதாகச் சொல்லியிருக்க முடியும். ஆனால், இளவரசன் மரணத்தில் தனியார் மருத்துவர் உடனிருக்க அரசுத் தரப்பு அனுமதிக்கவில்லை. ராம்குமாருக்கும் இளவரசனுக்கும் மட்டும் ஏன் பாகுபாடு காட்டப்படுகிறது? அரசிடம் வெளிப்படைத்தன்மை இருந்தால்தான், பொதுமக்களுக்கு அதன்மேல் நம்பிக்கை வரும்" எனத் தெரிவித்துள்ளார்.

டிகால் இதுவரையில், இரண்டாயிரம் உடல்களுக்கும் மேல் பிரேதப் பரிசோதனை செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Forensic expert Dr V Dikal has said that if a person is current shock then definitely will get injury.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X