ராமேஸ்வரம்: கடல் பாசி சேகரிக்க சென்ற பெண் பலாத்காரம்- படுகொலை; வடமாநில கும்பல் வெறிச்செயல்!
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே கடல் பாசி சேகரிக்க சென்ற பெண் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 6 வடமாநில இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராமேஸ்வரம் அருகே வடகாடு மீனவ கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு மீன்பிடித்தொழில் பிரதானம் ஆகும்.
பாஜக மத்திய சென்னை எஸ்சி பிரிவு தலைவர் பாலச்சந்தர் படுகொலை! 6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்
இந்நிலையில் வடகாடு மீனவர் கிராமத்தைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க பெண் வழக்கம்போல் கடல்பாசி சேகரிப்பதற்காக நேற்று வடகாடு மீன் பிடி கடற்கரை பகுதிக்கு சென்றுள்ளார்.

அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், அப் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்துள்ளனர். நீண்ட நேரம் ஆகியும் அப் பெண் வீடு திரும்பாததால் கணவன் சந்தேகத்தின்பேரில் தேடி சென்ற போது, இறால் பண்ணை அருகே அரைகுறை ஆடையில் எரிந்த நிலையில் அந்தப் பெண் சடலம் கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசில் புகார் தெரிவித்தார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்தப் பெண்ணை இறால் பண்ணையில் வேலை செய்த வடமாநில இளைஞர்கள் கேலி கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இறால் பண்ணைக்கு சென்ற அப்பகுதி பொதுமக்கள் வடமாநில இளைஞர்களை அடித்து உதைத்து காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

ராமேஸ்வரம் அடுத்த வடகாடு பகுதியில் பெண் கூட்டு பாலியல் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தற்போது ராமேஸ்வரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட 6 வடமாநில இளைஞர்களிடம் காவல்துறை அதிகாரிகள் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இறந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.