For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

10 அமைச்சர்களும், பகீர் குற்றச்சாட்டுகளும்..! சீட் தராமல் ஜெ. கல்தா கொடுத்த பரபரப்பு பின்னணி

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: நேற்று வெளியிடப்பட்ட அதிமுக வேட்பாளர் பட்டியலில், 10 அமைச்சர்களுக்கு, மீண்டும் தேர்தலில் போட்டியிட தொகுதி வழங்கப்படவில்லை. இதற்கான காரணம் என்ன என்பது குறித்து பரபரப்பான பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒவ்வொரு அமைச்சர்களுமே ஒவ்வொரு வகையான குற்றச்சாட்டின்பேரில் ஜெயலலிதா கோபத்துக்கு ஆளாகி சீட் பெற முடியாமல் போயுள்ளனர் என்பது தெரியவருகிறது.

அதேநேரம், ஜெயலலிதாவின் கோபத்துக்கு ஆளாகி அமைச்சர் பதவி, மாவட்ட செயலாளர் பதவிகளை இழந்த செந்தில் பாலாஜி போன்ற சிலருக்கு எதற்காக மீண்டும் சீட் வழங்கப்பட்டுள்ளது என்பது மில்லியன் டாலர் கேள்வியாக தொக்கி நிற்கிறது.

ஐவர் அணி பழனிப்பன்

ஐவர் அணி பழனிப்பன்

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் வெற்றி பெற்று, உயர் கல்வித்துறை அமைச்சராக வலம் வந்தவர் பழனியப்பன். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார். இதனால், தலைமை நிலையச் செயலர், ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர், ஐவர் அணியில் இடம் என, அடுத்தடுத்து முக்கிய பொறுப்புகள் கிடைத்தன. இதையடுத்து, கட்சியில் தனக்கென ஒரு வட்டத்தை உருவாக்கியது தான் தலைமையின் கோபத்திற்கு காரணம்.

குற்றச்சாட்டுகள்

குற்றச்சாட்டுகள்

லோக்சபா தேர்தலில் தர்மபுரியில், அ.தி.மு.க., தோற்றபோதே இவரது பதவி பறிபோயிருக்க வேண்டியது. ஆனால், அந்த பழி கே.பி.முனுசாமி மீது போடப்பட்டதால் அவரது பதவி பறிபோனது. கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட கான்ட்ராக்ட் பணிகளை, தன் குடும்பத்தார் மூலம் செய்தார் என்பதும் குற்றச்சாட்டு. துணைவேந்தர் நியமனம் உட்பட துறை சார்ந்த நியமனங்களில் நடந்த முறைகேடுகள், பினாமி பெயரில் சொத்து குவிப்பு, சீட் வாங்கி தருவதாக வசூல் போன்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன.

சுந்தர்ராஜன்

சுந்தர்ராஜன்

கடந்த தேர்தலில், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தனி தொகுதியில் வெற்றி பெற்று, விளையாட்டு துறை அமைச்சரானார் சுந்தர்ராஜன். இத்தொகுதியில், இரண்டு முறை தோல்வியும், மூன்று முறை வெற்றியும் பெற்றுள்ளார். புதுக்கோட்டை மாணவியர் விளையாட்டு விடுதியில், இரவு நேரத்தில் அவர் நடத்திய திடீர் ஆய்வின்போது, மாணவியரை தொட்டு பேசிய விதம் சமூக வலைத்தளத்தில் பரவியதால், கட்சித் தலைமையின் கடும் கோபத்திற்கு ஆளான அவருக்கு, கல்தா தரப்பட்டுள்ளது.

சண்முகநாதன்

சண்முகநாதன்

துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிட்டு, ஜவுளி மற்றும் சுற்றுலா துறை அமைச்சரானார், எஸ்.பி.சண்முகநாதன். தேர்தல் அறிவிக்கப்பட்டதும் நடந்த, சீட் பேர வசூல் ஆடியோ வெளியானது. அதில், சண்முகநாதன் சிக்கி கொண்டார். முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியன் இதன் பின்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது. சீட் பேரத்தில் சண்முகநாதனின், உதவியாளர் கைது செய்யப்பட்டபோதே, அவருக்கு சீட் கிடைக்காது என்பது உறுதியானது.

பூனாட்சி

பூனாட்சி

மண்ணச்சநல்லுார் தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த பூனாட்சி, முத்தரையர் ஜாதி பின்புலத்தால் கதர் மற்றும் கிராமத் தொழில் அமைச்சரானார். ஆனால், அமைச்சர் பதவியை பயன்படுத்தி, சகோதரரின் சொத்தை அபகரிக்க முயன்றதாகவும், ஆட்சிக்கு எதிராக நடந்த முத்தரையர் போராட்டத்துக்கு பின்னணியாக இருந்தார் என்ற தகவலும் இவருக்கு சீட் தரவிடாமல் செய்துவிட்டதாம்.

அப்துல் ரஹீம்

அப்துல் ரஹீம்

ஆவடி தொகுதியில் 42 ஆயிரத்து, 173 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அப்துல் ரஹீம், கடந்த 2 ஆண்டுகளாக சிறுபான்மை நலத்துறை அமைச்சராக இருக்கிறார். ஆனால் ஆவடி நகரசபை தலைவர் தேர்தலில், திமுகவை சேர்ந்த நாசர் வெற்றி பெற்றார். ஒரே மதம் என்பதால், நாசர் வெற்றி பெற, அப்துல் ரஹீம் பாடுபட்டார் என்பது குற்றச்சாட்டு. எனவே ரஹீமின் நகர செயலாளர்ர் பதவி பறிக்கப்பட்டது. பினாமிகள் பெயரில் நில ஆக்கிரமிப்பு செய்ததாக புகார்கள், போயஸ் கார்டனுக்கு சென்றன. இதெல்லாம் தான் இவருக்கு சீட் வழங்கப்படாததற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

சுப்பிரமணியன்

சுப்பிரமணியன்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை தனித்தொகுதியில் இருந்து, எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டு, ஆதிதிராவிடர் நல அமைச்சரான சுப்பிரமணியன். தொகுதி பக்கமே சென்றதில்லையாம். கந்தர்வகோட்டை பேருந்து நிலைய இடம் தேர்வு செய்த விஷயத்தில், மக்களிடம் மோதியதால், நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது, பொது மக்கள் அவரை விரட்டியடித்தனர். எனவே, இந்த தேர்தலில் வாய்ப்பை இழந்துள்ளார்.

ஜெயபால்

ஜெயபால்

மீன்வளத் துறை அமைச்சருக்கும், தன்னை வளர்த்து விட்ட மணியனுக்கும் மோதல் இருந்தது. மணியனை பற்றி மேலிடத்தில் வத்தி வைத்து, அவரிடமிருந்த மாவட்ட செயலர் பதவியை பறிக்க காரணமாக இருந்தாராம். லோக்சபா தேர்தலிலும், மணியனுக்கு சீட் கிடைக்காமல் செய்துள்ளார். இதனால் மணியன் தரப்பு, ஜெயபாலுக்கு மீண்டும் சீட் கிடைக்காமல் தடுக்க, சென்னையில் முகாமிட்டு சமூக வலைத்தளங்களில் ஜெயபால் குறித்து தாறுமாறாக தகவல் பரப்பியதால் ஜெயபாலுக்கு சீட் தரப்படவில்லையாம்.

மோகன்

மோகன்

விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் தொகுதியில் வெற்றி பெற்று, ஊரக தொழில் துறை அமைச்சரானார், மோகன். அதிமுக அமைப்பு செயலராகவும் இருக்கிறார். கூட்டுறவு தேர்தல்களில், கட்சியினரை புறக்கணித்து, தன் உறவினர்களுக்கு மட்டும், 'சீட்' பெற்று தந்ததாக, முதல் புகார் அவர் மீது தலைமைக்கு போனது. பசுமை வீடுகள் ஒதுக்கீட்டில் பண வசூல் விவகாரம், கார்டன் கோபத்திற்கு காரணமானது. ஆந்திர சிறையில் அடைபட்டிருந்த தமிழர்களை மீட்க முதல்வர் ஜெயலலிதா எடுத்த முயற்சிகளை மோகன் இருட்டடிப்பு செய்ததும் சீட் தரப்படாததற்கு காரணம்.

முக்கூர் சுப்பிரமணியன்

முக்கூர் சுப்பிரமணியன்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதியைச் சேர்ந்த முக்கூர் சுப்பிரமணியன், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருக்கிறார். இவர், பள்ளி மாணவர்களுக்கு, 'லேப்டாப்' வாங்கியதில், கட்சி தலைமைக்கு தெரியாமல் கமிஷன் தொகை கறந்ததாகவும், அதில் கோவில் கட்டி, வெள்ளி தேர் செய்ததாகவும் புகார் எழுந்தது. அவரது நடவடிக்கைகளை, தலைமை ஆய்வு செய்த போது அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதும், பா.ம.க.வினரிடம் ரகசிய தொடர்பில் உள்ளதும் தெரியவந்தது.

ஆனந்தன்

ஆனந்தன்

வனத்துறை அமைச்சர் ஆனந்தன் மீதும் இதுபோன்ற பல்வேறு புகார்கள் கார்டனுக்கு சென்றன. இதன் காரணமாக ஆனந்தனுக்கும் மீண்டும் போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

English summary
These are the reasons why 10 ministers from the Jayalalitha cabinet denied seats to condest in the upcoming assembly election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X