For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யானைகள் புத்துணர்வு முகாம்: ஸ்ரீ ரங்கம் ஆண்டாளுக்கு முதல்மரியாதை!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

கோவை: கோயில் மற்றும் மடங்களில் உள்ள யானைகளுக்கான புத்துணர்வு முகாம் மேட்டுப்பாளையத்தில் இன்று துவங்கியது. ஸ்ரீரங்கம் கோவில் யானை ஆண்டாளுக்கு உணவு வழங்கி, முகாமினை அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்.

அ.தி.மு.க. ஆட்சியில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோயில்கள் மற்றும் மடங்களில் உள்ள யானைகளுக்கு ஆண்டுதோறும் சிறப்பு நலவாழ்வு முகாம் நடைபெற்று வருகிறது.

Rejuvenation camp for jumbos begins near Mettupalayam

அதன்படி இந்தாண்டுக்கான் யானைகள் முகாம் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி, பவானி ஆற்றங்கரையில் இன்று துவங்கியது.

இந்த முகாமில் 45 யானைகள் பங்கேற்கும் என கூறப்பட்டது. இதற்காக அரசு ரூ.90 லட்சத்தை ஒதுக்கீடு செய்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் 15 யானைகள் பங்கேற்கவில்லை. 30 யானைகள் மட்டுமே மேட்டுப்பாளையம் முகாமில் பங்கேற்றன. முதல்வராக ஜெயலலிதா இல்லாத நிலையில் நடைபெறும் இந்த யானைகள் முகாமினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் வேலுமணி ஆகியோர் துவக்கி வைத்தனர்.

Rejuvenation camp for jumbos begins near Mettupalayam

கணபதி ஹோமம்

இதற்காக அதிகாலையில் கணபதி ஹோமத்துடன் யானைகள் புத்துணர்வு முகாம் தொடங்கி எல்லா யானைகளும் குளிப்பாட்டப்பட்டு, அலங்கரிக்கப்பட்டு, வரிசையாக நிறுத்தப்பட்டன.

ஆண்டாளுக்கு முதல் மரியாதை

யானைகளுக்கான சிறப்பு பூஜையில் பங்கேற்ற அமைச்சர்கள், ஸ்ரீரங்கம் கோயில் யானை ஆண்டாளுக்கு முதலில் பழங்களை வழங்கி முகாமினை துவக்கி வைத்தனர். தொடர்ந்து மற்ற யானைகளுக்கும் உணவு வழங்கப்பட்டது.

Rejuvenation camp for jumbos begins near Mettupalayam

காட்டு யானைகளுக்கு தனி

வனத்துறையினருக்கு சொந்தமான காட்டு யானைகளுக்கு 5 இடங்களில் 48 நாட்களுக்கு இந்த புத்துணர்வு முகாம் நடைபெறுகிறது. மொத்தம் 6 இடங்களில் 53 யானைகளுக்கு இந்த புத்துணர்வு முகாம் நடக்கிறது.

53 யானைகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள 26 யானைகளும், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள 22 யானைகளுக்கும், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள 3 யானைகளுக்கும், சேலம் மாவட்டம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் உள்ள 1 யானை, கோவை மாவட்டம் சாடிவயல் உயிரியல் பூங்காவைச் சேர்ந்த 1 யானை என மொத்தமுள்ள 53 யானைகள் இந்த புத்துணர்வு முகாமில் பங்கேற்கின்றன.

யானை சவாரி ரத்து

48 நாட்களுக்கு நடைபெறும் முகாமையொட்டி முதுமலை புலிகள் காப்பகத்தில் செயல்படுத்தப்பட்டு வந்த யானை சவாரி ரத்து செய்யப்பட்டுள்ளது.முகாமில் பங்கேற்கத் தேவையான மருத்துவ சிகிச்சை மற்றும் சிறப்பு உணவுகள் அளிக்கப்படும்.

Rejuvenation camp for jumbos begins near Mettupalayam

காட்டுயானைகளால் அச்சம்

இதனிடையே மேட்டுப்பாளையம் முகாம் நடைபெறும் பகுதி வனப்பகுதியாகும். இந்த முகாமில் உள்ள யானைகள் அனைத்தும் பெண் யானைகள் எனவே இவ்வழியாக செல்லும் யானைகள், முகாமில் உள்ள யானைகளின் வாசத்தால் ஈர்க்கப்பட்டு எப்போது வேண்டுமானால் முகாமினுள் நுழையும் ஆபத்து உள்ளது.

அச்சம் தேவையில்லை

தற்போது இந்த பகுதியில் யானைகள் அதிகளவில் முகாமிட்டுள்ளதால், வன யானைகளால் கோயில் யானைகளுக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த அச்சம் அவசியமில்லாதது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முகாம் நடைபெறும் பகுதியை சுற்றிலும் கண்காணிப்பு விளக்கு கோபுரம் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. முகாமினை சுற்றி சூரிய ஒளி சக்தி மூலம் இயங்கும் மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது என்கின்றனர் அதிகாரிகள்.

ஆயுர்வேத சிகிச்சை

முகாமில் யானைகளுக்கு ஆரோக்கியமான உணவு, ஆயுர்வேத சிகிச்சை என உணவும், மருந்தும் கொடுக்கப்பட்டு வருகிறது. இது தவிர பல்வேறு சிகிச்சைகளும், பயிற்சிகளும் யானைகளுக்கு வழங்கப்படுகிறது.

ஆற்றில் குளியல்

தினமும் பவானியாற்றில் இருவேளை குளியல், தினமும் 5 கி.மீட்டர் நடை பயிற்சி, பசுந்தீவன உணவு, ஆரோக்கியத்தை காக்க மருந்துகள் போன்றவை வழங்கப்படுகின்றன. "யானைகளுக்கு அதன் எடை, வயதின் அடிப்படையில் தீவனம் கொடுக்கப்படும். முகாமில் பங்கேற்கும் ஒரு யானைக்கு சராசரியாக ரூ.2 லட்சம் செலவழிக்கப்படவுள்ளது" என்கின்றனர் அதிகாரிகள்.

அனுமதியில்லை

பவானி ஆற்றில் வெள்ளம் அதிகளவில் செல்வதால் வழக்கமாக கரையோரம் நடக்கும் முகாம், மேல் பகுதியில் நடத்தப்படுகிறது எனவே பார்வையாளர்களை அனுமதிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

முகாமில் இருந்து நடைபயிற்சி செல்லும் யானைகளை பார்வையிடலாம்" என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பாகன்களுக்கும் தனி கவனிப்பு

யானைகளுக்கு மட்டுமல்ல பாகன்களுக்கும் இது புத்துணர்வு முகாம்தானம். அவர்களுக்கு தனி கவனிப்பு உண்டாம். பாகன்களுக்கு மதுப்பழக்கம் இருந்தாலும் அவர்களுக்கு அதற்கான சிகிச்சை அளிப்பார்களாம்.

மகிழ்ச்சியில் யானைகள்

தஞ்சை மாவட்ட திருவையாறு - தருமபுர ஆதினத்திற்கு சொந்தமான தர்மாம்பாள் யானை, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான 4ஆயிரத்து 700 கிலோ எடைக் கொண்ட ருக்குவும் புத்துணர்வு முகாமிற்கு வந்துள்ளது.

வள்ளி - தெய்வானையும் வந்திருக்கா

திருச்செந்தூர் கோயிலுக்கு சொந்தமான 17 வயது பெண் யானை தெய்வானை, இலஞ்சி குமாரர் கோயில் யானை வள்ளி, ராமேஸ்வரம், பழனி கோவில்களுக்கு சொந்தமான யானைகளும் புத்துணர்வு முகாமில் பங்கேற்றுள்ளன. இன்று தொடங்கியுள்ள இந்த முகாம் வரும் ஜனவரி 27ஆம் தேதி வரை 48 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

வனப்பகுதியில் உற்சாகம்

கோயிலில் கான்கிரீட் தரையில் நின்றும் , பக்தர்களுக்கு ஆசீர்வாதம் செய்தும் அலுத்துப்போன இந்த யானைகள், ஆற்றங்கரையோரம், வனத்தையொட்டிய பகுதியில் நடக்கும் இந்த முகாமில், ஜில்லென்று பெய்யும் மழையில் உற்சாகமாய் சுற்றி வருகின்றன. இன்றுமுதல் 48 நாட்கள், ஆட்டமும், பாட்டமுமாக நேர நேரத்திற்கு சத்தான உணவுமாக யானைகளுக்கு கொண்டாட்ட நாட்களாக இருக்கப்போகிறது.

English summary
Jumbos lazed around on the nine-acre site along river Bhavani at Thekampatti near Mettupalayam where the annual 48-day rejuvenation camp for mutt and temple elephants began on Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X