For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சேலம்: ஸ்டாலின் கூட்டத்திற்கு அனுமதி; வீரபாண்டி ஆறுமுகம் சிலைக்கு அனுமதி மறுப்பு!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சேலம்: சேலத்தில் தி.மு.க. தலைமை அலுவலகம் முன்பு நிறுவப்பட்ட வீரபாண்டி ஆறுமுகம் சிலையை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நேற்று இரவு திடீரென நோட்டீஸ் வழங்கியது. அதேசமயம் 25ம் தேதி ஸ்டாலின் பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கு மாநகர காவல்துறை அனுமதி அளித்துள்ளது.

சேலம் மாவட்ட தி.மு.க. செயலாளராகவும், அமைச்சராகவும் பதவி வகித்த மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திற்கு, சேலம் புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள கலைஞர் மாளிகை கட்டிடம் முன்பு 6 அடி உயர வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது.

stalin

இந்த சிலை திறப்பு விழா வருகிற 25-ந் தேதி(சனிக்கிழமை) மாலை நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் தி.மு.க. மாநில பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, வீரபாண்டி ஆறுமுகம் சிலையை திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டது. சேலம் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டு வந்தனர்.

இதற்காக சேலம் மாநகரக் காவல்துறையினரிடம் கடந்த டிசம்பர் மாதம் அனுமதி கோரப்பட்டது. இந்த நிலையில், வீரபாண்டிய ஆறுமுகத்தின் உருவச் சிலையை திறக்க சேலம் மாநகராட்சி அனுமதி மறுத்துவிட்டது.

சிலையை அகற்ற நோட்டீஸ்

புதன்கிழமை இரவு 9.30 மணியளவில், சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டல உதவி ஆணையர் பிரீத்தி தலைமையிலான அதிகாரிகள், சேலம் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் வீட்டிற்கு சென்றனர். அங்கு எஸ்.ஆர்.சிவலிங்கத்தை சந்தித்த உதவி ஆணையர் பிரீத்தி, மாநகராட்சி சார்பில் ஆணையாளர் அசோகன் கையெழுத்திட்ட நோட்டீசை வழங்கினார்.

சேலம் மாநகராட்சி, அஸ்தம்பட்டி மண்டல அலுவலகத்திற்குட்பட்ட வார்டு எண்: 17-ல் சேலம்-ஓமலூர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள திராவிட முன்னேற்ற கழக கட்சி அலுவலக நுழைவு வாயில் முன்பாக, நெடுஞ்சாலையை நோக்கி அரசு அனுமதியின்றியும், மாநகராட்சி அனுமதியின்றியும் சிலை நிறுவப்பட்டுள்ளது.

சிலை அகற்றப்படும்

இந்த சிலையினை இந்த அறிவிப்பு கிடைக்க பெற்றவுடன் தாங்களாகவே அகற்றிக்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் அரசு அனுமதியின்றி அமைக்கப்பட்ட சிலை அகற்றப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோட்டீசின் நகல் கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகனுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது.

சிலையை திறக்கவில்லை

இந்த நிலையில் சிலையை திறக்கவில்லை, பொதுக்கூட்டத்தை நடத்திக் கொள்கிறோம் என்று கூறி சேலம் மாவட்ட திமுகவினர் புதன்கிழமை அனுமதி கோரியிருந்தனர்.

பொதுக்கூட்டத்திற்கு அனுமதி

இது குறித்து வியாழக்கிழமை காலை பேச்சு நடத்தலாம் என்று சேலம் மாநகர போலிஸ் ஆணையர் கே.சி. மகாலி தெரிவித்தார். இதையடுத்து, திமுக மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், முன்னாள் எம்எல்ஏ பனமரத்துப்பட்டி ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ ஆர். ராஜா உள்ளிட்டோர் ஆணையருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சிலையை உரிய அனுமதி கிடைக்காமல் திறக்கக் கூடாது. பொதுக் கூட்டத்தை நடத்திக் கொள்ளலாம் என்று காவல்துறை அனுமதி அளித்தது.

பின்னர், திட்டமிட்டபடி கோட்டை மைதானத்தில் வரும் 25ம் தேதி ஸ்டாலின் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று சிவலிங்கம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதனிடையே வீரபாண்டி ஆறுமுகம் சிலை அருகில் நேற்று இரவு முதலே தி.மு.க.வினர் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

English summary
The AIADMK-dominated Salem Corporation has asked the local DMK unit to remove a statue of former Minister Veerapandi S. Arumugam as it has been installed without permission.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X