For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நடுத்தர மக்களின் பட்ஜெட்டை பதம் பார்க்கும் பருப்புகளின் விலை உயர்வு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: பருப்புகளின் விலை உயர்வு நாடுமுழுவதும் சூறாவளியாய் வீசி சுனாமியாய் சுழன்றடித்து ஏழை, நடுத்த மக்களை கபலீகரம் செய்து வருகிறது. முந்திரி, பாதம், பிஸ்தா பருப்பு போல சாம்பாருக்குப் போடும் துவரம் பருப்பும் மாறி வருகிறது. இந்த விலை உயர்வுக்கு அடிப்படை காரணம் பற்றி ஆராயாமல் அரசியல் கட்சியினர் மாறி மாறி குற்றம் சாட்டிவருகின்றனர். தீபாவளி நெருங்கி வரும் நிலையில் பருப்புகளின் விலை உயர்வு நடுத்தர, ஏழை மக்களின் வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

dal

அதிமுக ஆட்சியில் பருப்பு விலை 4 மடங்கு உயர்ந்துவிட்டது என்கிறார் திமுக தலைவர் கருணாநிதி. இது உண்மைக்குப் புறம்பான கருத்து என்கிறார் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ். பருப்புக்களின் உற்பத்தி குறைவே விலைவாசி உயர்வுக்கு காரணமாகிவிட்டது. தவிர, ஆன்லைன் வர்ததகம், பதுக்கல் போன்றவையும் ஏழை, நடுத்தரமக்களின் தலையில் விலை உயர்வாக இடியாக இறங்கியிருக்கிறது.

4 மடங்கு விலை உயர்வு

கடந்த 2011ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு உள்ளிட்ட பருப்புகளின் விலைகள், 52 ரூபாயாக இருந்தன. கடந்த ஆண்டு 100 ரூபாயாக உயர்ந்தது. அதைப்பற்றி யாரும் கவலைப்படவில்லை. அதே துவரம் பருப்பு 220 ரூபாயை எட்டவே, நடுத்தர மக்களின் பட்ஜெட்டில் கூடுதல் சுமையை ஏற்படுத்திவிட்டது. 5000 ரூபாய் மளிகை சாமானுக்கு ஒதுக்கிய மக்கள் இனி ஆயிரம் ரூபாயை கூடுதலாக ஒதுக்க வேண்டியிருக்கிறது.

உற்பத்தி குறைவு

இந்தியாவில் ஓர் ஆண்டுக்கு 2.10 கோடி டன் துவரம் பருப்பு தேவை. ஆனால், இந்த ஆண்டு உற்பத்தியாகி இருக்கும் துவரம் பரப்பு 1.70 கோடி டன் மட்டுமே. மும்பையில் சில இடைத்தரகர்களின் பதுக்கல், தொடர் வணிக பேரங்காடிகளை நடத்திவரும் பெரும் முதலாளிகள், விவசாயிகளுடன் ஏகபோகமாக முன்கூட்டியே ஒப்பந்தம் போட்டு கொள்முதல் செய்ததாலும் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு விலைகள் உயர்ந்துள்ளன.

உளுந்து விலை உயர்வு

உளுந்து விலை உயர்வால் இட்லியும் இனி மாதம் ஒருமுறைதான் பலகாரம் போல கண்ணில் காட்டுவார்கள் போலிருக்கிறது. உளுந்து விலை உயர்வு அப்பளத் தொழிலை பதம் பார்த்துள்ளது. நவம்பர் 1ம் தேதியில் இருந்து சென்னை, திருச்சி, மதுரை என பெருநகரங்களில் 91 கூட்டுறவுக் கடைகள் மூலம் துவரம் பருப்பு கிலோ 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இந்த நான்கு நகரங்களில் வசிப்பவர்கள் தவில பிற ஊர்களில் இருப்பவர்கள் துவரம் பருப்பு, உளுந்தப்பருப்பு வாங்க எங்கே செல்வது என்று கேட்கின்றனர் எதிர்கட்சியினர்.

ரேசன்கடைகளில் கிடைப்பதில்லை

ரேசன் கடைகளில் பருப்புகள் ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்ய அரசு உத்தரவிட்டிருந்தாலும், எப்போது கேட்டாலும் இந்த மாதம் ஸ்டாக் இல்லை என்ற பதிலே வருகிறது. ஒவ்வொரு ரேஷன் கடையிலும் வழங்கப்பட வேண்டிய துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பின் அளவில் 40 முதல் 50 விழுக்காடு மட்டுமே அரசு ஒதுக்கீடு செய்கிறது.

கள்ளச்சந்தையில் விற்பனை

ஒதுக்கப்படும் பருப்புகளும் சில நூறு கார்டுகளுக்குக்கூட போதவில்லை. அதே நேரத்தில ரேசன் கடை பருப்புகள் தனியார் கடைகளுக்கு கடத்தப்படுகிறதோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ரேசன் கடைகளில் பருப்பு வகைகள் தாராளமாக விநியோகிக்கப்பட்டால்தான் வெளிச்சந்தையில் பருப்புக்கான தேவை குறைந்து விலையும் குறையும் என்கின்றனர் பொதுமக்கள்.

ஆயிரம் உயர்ந்தால் நூறு குறைவு

இதனிடையே டெல்லியில் துவரம் பருப்பின் விலை 100 கிலோ கொண்ட ஒரு குவின்டாலுக்கு 200 ரூபாய் குறைந்தது. நேற்று அது ஒரு மூட்டைக்கு 500 ரூபாய் வீழ்ச்சி கண்டிருந்தது. குறைந்த விலையில் விற்பனை செய்ய தினமும் ஒரு லட்சம் கிலோ பருப்பை வழங்க இறக்குமதியாளர்கள் முன்வந்திருக்கும் தகவலையடுத்து, விலை குறைந்ததாக வணிகர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

மாற்றம் ஏமாற்றமே

உளுத்தம் பருப்பின் விலை குவின்டாலுக்கு 200 ரூபாயும், பாசிப் பயறின் விலை 100 ரூபாயும் குறைந்தன. இதனால், சில்லறை விற்பனையிலும் அவற்றின் விலை குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஒரு மூட்டைக்கு 5000 வரை திடீரென உயர்ந்த பருப்பு விலை 500 ரூபாய் குறைந்திருப்பது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பது பொதுமக்களின் கருத்து.

எப்போ குறையுமோ?

தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் நிலையில், துவரம் பருப்பு விலை குறையுமா என்று எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர் மக்கள். தீபாவளிக்குள் பருப்பு விலையைக் கட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம் என்று அரசுத் தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது. ஆனால், ஜனவரி வரைக்கும் பருப்புக்களின் விலை குறைய வாய்ப்பு இல்லை என்று ஒரு தரப்பு அச்சுறுத்தி வருகிறது. கடைகளுக்குப் போய் லிஸ்ட் போட்டு வாங்கும் போது விலைகளைப் பார்த்தால் இன்னமும் மயக்கம்தான் வருகிறது. பருப்பு விலை எப்போது குறையுமோ என்று ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.

விவசாயத்திற்கு மாறுங்கள்

விவசாயத்தை கைவிட்டு வேறு வேலைக்கு மாறியதன் விளைவை நாமே அனுபவித்துக்கொண்டிருக்கின்றோம். கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு 100 கிலோ கொண்ட ஒரு மூட்டை துவரம் பருப்பு 3000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே இப்போது 20000 ரூபாயாக உயர்ந்து விட்டது. ஆன்லைன் வர்த்தகம், பதுக்கல் என்பது ஒருபக்கம் இருக்க தொடர் அங்காடிகளின் முதலாளிகளின் கைங்கரியமும் இதில் இருக்கிறது. இனியும் விழித்துக்கொள்ளாவிட்டால் எதிர்கால தலைமுறையினர் பருப்பு என்ற வார்த்தையை பாடங்களில் மட்டுமே படிக்கவேண்டியிருக்கும் என்று
அச்சுறுத்துகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

English summary
Rise in prices of dal and onion had affected the common man and in effect their business.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X