For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட மாவோயிஸ்டுகள் … எல்லை பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

கோவை: தமிழகத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டடிருந்ததாக கோவையில் கைதான மாவோயிஸ்ட் கும்பலின் தலைவன் அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியலைகளை உருவாக்கியுள்ளது.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி-அன்னூர் சாலையில் சதாசிவம் என்பவருக்கு சொந்தமான பேக்கரிக்கு நேற்று முன்தினம் மாலை ஒரு பெண் உட்பட 5 பேர் வந்து டீ குடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஆந்திர மாநில நக்சல் தடுப்பு பிரிவு எஸ்.பி தலைமையிலான போலீசார், கோவை கியூ பிரிவு போலீசார், மத்திய உளவுப்பிரிவு போலீசார் துப்பாக்கி முனையில் 5 பேரையும் சுற்றி வளைத்துப் பிடித்தனர். உடனடியாக போலீஸ் வாகனத்தில் அவர்களை ஏற்றி பீளமேட்டில் உள்ள கியூ பிராஞ்ச் போலீஸ் பிரிவு அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

ஆந்திர மாநில நக்சல் தடுப்பு பிரிவு எஸ்பி, கோவை மாவட்ட எஸ்.பி சுதாகர், துணை கமிஷனர் பிரவேஷ்குமார், கேரளா உளவுத்துறை அதிகாரிகள் சதானந்தா, வாகேஷ், தமிழக கியூ பிரிவு டிஐஜி ஈஸ்வரமூர்த்தி, எஸ்.பி. பவானீஸ்வரி, மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார் கைதான மாவோயிஸ்டுகளிடம் விசாரித்தனர். அதில் பிடிபட்டவர்கள் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த ரூபேஸ் (40), அவரது மனைவி சைனா(35), அவர்களது கூட்டாளி திருச்சூரை சேர்ந்த அனூப்(40), மதுரையை சேர்ந்த கார்த்திக் என்ற கண்ணன்(39), கடலூரை சேர்ந்த ஈஸ்வரன் என்ற வீரமணி(42) என்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் கும்பலிடம் போலீசார் விசாரித்தனர்.

ரூபேஸ் வாக்குமூலம்

ரூபேஸ் வாக்குமூலம்

அதில், ‘தென்னிந்தியாவில் மாவோயிஸ்ட் இயக்கத்தை வலுப்படுத்துவது, உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசிக்க கோவை வந்தோம். மேலும், தமிழகத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளோம். அதற்காக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பயிற்சி எடுக்கவும், அங்கு பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டிருந்தோம்'' என்று தெரிவித்தனர்.

மாவோயிஸ்டுகள் ஆலோசனை கூட்டம்

மாவோயிஸ்டுகள் ஆலோசனை கூட்டம்

ஆந்திர மாநில நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த சில தினங்களுக்குமுன் அங்குள்ள வனப்பகுதியில் தேடப்பட்டுவரும் மாவோயிஸ்ட் மேசாலி ராஜரெட்டி என்பவரை கைது செய்தனர். மேசாலி ராஜரெட்டியிடம் போலீசார் விசாரித்தபோது, ஆந்திர மாநிலத்தில் போலீசாரை தாக்க மாவோயிஸ்டுகள் திட்டமிட்டுள்ளதாகவும், அதுகுறித்து ஆலோசிப்பதற்காக தென்மாநில மாவோயிஸ்ட் தலைவன் தலைமையில் 4 மாநில மாவோயிஸ்ட் பொறுப்பாளர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் நடக்க இருந்ததாகவும் தெரிவித்துள்ளான்.

கைது செய்தது எப்படி

கைது செய்தது எப்படி

இத்தகவலை உறுதி செய்த ஆந்திர நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் தமிழக போலீஸ் உயரதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்தனர். கோவை மாநகர மற்றும் மாவட்ட போலீசாரும் உஷார்படுத்தப்பட்டனர். அதன்பின், மாவோயிஸ்ட் கும்பலின் செல்போன் எண்னை வைத்து நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் ஐந்து பேரையும் கண்காணித்தபோது அவர்கள் திருப்பூரில் இருந்து பஸ்மூலம் கோவைக்கு வருவது தெரியவந்தது. அவர்களை பின்தொடர்ந்து வந்த போலீசார் ஐந்து பேரையும் கருமத்தம்பட்டி பேக்கரியில் வைத்து பிடித்தனர்.

தருமபுரி டூ திருப்பூர்

தருமபுரி டூ திருப்பூர்

ரூபேஸ் உள்ளிட்ட ஐந்து பேரும் தர்மபுரியில் இருந்து பஸ்மூலம் திருப்பூருக்கு வந்துள்ளனர். அங்கிருந்து பஸ்மூலம் கோவைக்கு புறப்பட்டு கருமத்தம்பட்டியில் இறங்கியுள்ளனர். அவர்களிடம் இருந்து ஐந்து பஸ் டிக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கருமத்தம்பட்டியில் இறங்கி பேக்கரிக்கு சென்று ரூ.150க்கு டீ, திண்பண்டங்கள வாங்கி சாப்பிட்டுள்ளனர். அதன்பின், அங்கிருந்து புறப்பட்டு செல்ல ஆயத்தமாகியபோது போலீசாரிடம் சிக்கினர் என்பதும் தெரியவந்தது.

ஓடிசாவில் ஆயுதப்பயிற்சி

ஓடிசாவில் ஆயுதப்பயிற்சி

பிடிபட்ட மாவோயிஸ்ட் தென்மாநில தலைவன் ரூபேஸ் ஒடிசா மாநிலத்திற்கு சென்று ஆயுதப்பயிற்சி பெற்று வந்துள்ளான். இவரது கட்டுப்பாட்டின் கீழ் 195 மலை கிராமங்கள் உள்ளது. இங்குள்ள மக்களை மிரட்டியும், அவர்களை மூளைச்சலவை செய்தும் அரசுக்கு எதிரான போராட்டங்கள், கிளர்ச்சிகளில் ரூபேஸ் மற்றும் அவரது கும்பலை சேர்ந்தவர்கள் ஈடுபடுத்தி வந்துள்ளனர். ரூபேசின் மனைவியும் ஒடிசா மாவோயிஸ்ட்களிடம் கொரில்லா பயிற்சி பெற்றவர். துணிச்சல் மிக்கவர். அதனால் தமிழகம், கர்நாடகா, கேரளா அடங்கிய கிழக்கு மண்டலத்துக்கு பெண்கள் படைக்கு தலைவராக நியமிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.

ரூ. ஐந்து லட்சம் பரிசு

ரூ. ஐந்து லட்சம் பரிசு

கடந்த 2008ஆம் ஆண்டு சொர்னூர் ரயில் நிலையத்தில் வைத்து சொர்னூர்-வயநாடு ரயிலை தடுத்து நிறுத்தி தாக்குலில் ஈடுபட்டுள்ளான். அந்த வழக்கு தொடர்பாக ரூபேஸை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து கேரள போலீசார் தேடி வந்தனர். 2014ம் ஆண்டு வயநாடு பகுதியில் வனத்துறை அலுவலகத்தை தாக்கிய சம்பவம், கடந்த டிசம்பர் மாதம் பாலக்காட்டில் தனியார் ரெஸ்டாரெண்ட் தாக்கப்பட்ட சம்பவம், அதே சமயம் அகழியில் வனத்துறை அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம், மலப்புரம் பகுதியில் நிலம்பூர் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் பைப் வெடிகுண்டு வைத்த வழக்கு, நோட்டீஸ் விநியோகித்த வழக்கு, வடமாநில மாவோயிஸ்ட் தலைவனுக்கு அடைக்கலம் தந்த வழக்கு போன்ற பல வழக்குகளில் ரூபேசுக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது. இதனால் ரூபேஷ் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று கேரளா அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜூன் 3 வரை காவல்

ஜூன் 3 வரை காவல்

கேரள மாநிலத்தில் ரூபேஸ் மீது மொத்தம் 20 வழக்குகள் உள்ளது. தற்போது, 7 வருடங்களுக்கு பிறகு ரூபேஸ் போலீசாரிடம் சிக்கியுள்ளான். கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட்கள் ஐந்து பேரும் கோவை மகிளா நீதிமன்றத்தில் நேற்று மாலை ஆஜர்படுத்தப்பட்டனர். மாவோயிஸ்ட்களை ஜூன் 3ம் தேதி வரை கோவை மத்திய சிறையில் அடைக்க நீதிபதி சுப்ரமணியன் உத்தரவிட்டார்.

சைனா வாக்குமூலம்

சைனா வாக்குமூலம்

கோவை நீதிமன்றத்தில் நேற்று மாலை ஆஜர்படுத்தப்பட்ட போது பெண் மாவோயிஸ்ட் சைனா நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்தார். அப்போது என்னுடைய பெயர் சைனாதான். சைனி என்பது போலீசாரால் புனையப்பட்டது. ஆண்காவலரே என்னை கைது செய்தார். அப்போது பெண் காவலர் இல்லை. எனக்கு பல்வலி மற்றும் வயிற்று வலி போன்ற பாதிப்பும், என்னுடைய கணவர் ரூபேசுக்கு மூட்டு வலியும் உள்ளது. அதனால், எனக்கும் கணவருக்கும் மருத்துவ உதவி தேவை என சைனா நீதிபதியிடம் கூறினார். கோவை மத்திய சிறையில் உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என நீதிபதி சுப்ரமணியன் தெரிவித்தார்.

என்கவுன்டர் அச்சம்

என்கவுன்டர் அச்சம்

மாவோயிஸ்ட் தரப்பில் வழக்கறிஞர் பாலமுருகன் நீதிபதியிடம், ‘இதற்கு முன்பு கோவையில் ஒரு வழக்கு தொடர்பாக நீதிமன்ற காவலில் எடுத்துச் சென்றவர்களில் ஒருவரை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். அதேபோன்று தற்போது நீதிமன்ற காவலில் செல்லும் 5 பேரின் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்படலாம் என்றார். இதற்கு பதிலளித்த நீதிபதி சுப்ரமணியன், ‘என் முன்னிலையில் 5 பேரும் ஆஜரானதால், அவர்களின் உயிருக்கு நான் பொறுப்பு. ஏற்கனவே நடந்த சம்பவம் போன்று நடக்காது' என்றார்.

திருப்பூரில் விசாரணை

திருப்பூரில் விசாரணை

கோவையில் பிடிபட்ட மாவோயிஸ்ட்களுக்கு, திருப்பூரில் ஆதரவாளர்கள் உள்ளனரா என, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மாவோயிஸ்டுகளிடமிருந்து, 27 மொபைல் போன்கள், 'லேப்-டாப்', இரண்டு பென் டிரைவ், 30 ஆயிரம் ரூபாய் மற்றும் மாவோயிஸ்ட் இயக்கங்கள் குறித்த தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கில பிரதிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தங்கியது எங்கே?

தங்கியது எங்கே?

திருப்பூர் மாவட்டம், காங்கயத்தில் உள்ள மில்லில் சில நாட்களுக்கு முன் அரிசி வாங்கிய ரசீது, காங்கயம் அரிசி ஆலை பெயர் கொண்ட சாக்கு பை மற்றும் திருப்பூர் ஜவுளிக் கடையின் முகவரி கொண்ட பிளாஸ்டிக் கேரி பேக் இருந்தன. கேரளா மாவோயிஸ்ட் ரூபேசுக்கு பிரவீன், பிரகாஷ், பிரசாந்த் என பல பெயர்களும், அவரது மனைவி ஷைனிக்கு, ஷியானா என்பது உள்ளிட்ட வேறு பெயர்களும் இருப்பது, விசாரணையில் தெரியவந்துள்ளது.

எல்லைகளில் பாதுகாப்பு

எல்லைகளில் பாதுகாப்பு

மாவோயிஸ்ட் தலைவன் உட்பட முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டதால், பதிலடியாக, போலீஸ் ஸ்டேஷன்கள் மீது மாவோயிஸ்ட்கள் தாக்குதல் நடத்தலாம் என தகவல் பரவியது. இதையடுத்து, கோவை மாவட்ட எல்லை மற்றும் வனப்பகுதியில் அமைந்துள்ள, போலீஸ் ஸ்டேஷன்களில், 300க்கும் மேற்பட்ட ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சி.சி.டிவி கேமரா

சி.சி.டிவி கேமரா

மாங்கரை செக் போஸ்ட்டில் ஏற்கனவே சி.சி.டிவி.கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இது தவிர, ஆனைகட்டி வட்டாரத்தில் உள்ள தூமனூர், சேம்புக்கரை, பனப்பள்ளி, ஜம்புண்டி உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் புதிய நபர்களின் நடமாட்டம் குறித்து ரகசிய போலீசார் கண்காணித்து வருகின்றனர்.மலை கிராமங்களில் வசிக்கும் பழங்குடி மக்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில்

நீலகிரி மாவட்டத்தில்

மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள, கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தை ஒட்டிய நீலகிரி மாவட்டத்தின் தேவாலா, சேரம்பாடி, எருமாடு, அம்பலமூலா, நெலாக்கோட்டை போலீஸ் நிலையங்களில், துப்பாக்கி ஏந்திய சிறப்பு போலீஸ் படையினர், 20 பேர் துப்பாக்கி ஏந்திய நிலையில் நேற்று காலை முதல், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வனப்பகுதிகளில் ரோந்து

வனப்பகுதிகளில் ரோந்து

மாநில எல்லையோர சோதனை சாவடிகளான கீழ்நாடுகாணி, சோலாடி, தாளூர், நம்பியார்க்குன்னு, பாட்டவயல் சோதனை சாவடிகளில், தலா ஒரு சப்--இன்ஸ்பெக்டர் தலைமையில், போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதிரடிப்படையினரும் மாநில எல்லையோர கிராம வனப்பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

English summary
Roopesh, leader of the Western Ghats Special Zonal Committee, had convened a meeting in Karumanthampatti in Coimbatore to review plans for Maoists operations in the tri-junction area, police sources said on Tuesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X