For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நவ. 10 வரவேற்பு.. 11 கல்யாணம்.. தாலி வாங்கல.. ரூ.1000 செல்லாது.. பெரும் குழப்பத்தில் கல்யாண வீடுகள்!

500 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பால் நாளை மறுநாள் கல்யாணத்தை நடத்த திட்டமிட்டிருந்த கல்யாண வீட்டார் கடைசி நேர செலவுகளை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

Google Oneindia Tamil News

சென்னை: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததையடுத்து, நாளை மறுநாள் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்ட பல திருமணங்களின் இறுதி கட்ட செலவுகளை செய்ய முடியாமல் பெற்றோர்கள் தவித்து வருகின்றனர்.

நள்ளிரவு 12 மணி முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்தியில் ஆளும் பாஜக அரசு அறிவித்தது. இதனால் சாதாரண பொதுமக்கள், சிறு வணிகர்கள், கடைக்காரர்கள், உணவகங்களை நடத்துவோர், காய்கறி வியாபாரிகள், பூ வியாபாரிகள் என பலரும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Rs. 500 notes abolished: affected marriage events

இந்நிலையில், நவம்பர் 11ம் தேதி முகூர்த்த நாள் என்பதால் அன்றைய தினத்தில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளோரும் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 11ம் தேதி திருமணம் என்றால் 10ம் தேதி அதாவது நாளை வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும். இன்று பந்தகால், நலங்கு வைப்பது என்று திருமணம் தொடர்பான பல்வேறு சடங்குகள் செய்வார்கள். அதற்கான செலவுகள் அப்போதைக்குதான் செய்ய முடியும். குறிப்பாக பூ, பழம், காய்கறிகள், மஞ்சள், குங்குமம் என அப்போதைக்கு பயன்படும் பொருட்கள் அதிகம். இதை எல்லாம் வாங்கி திருப்தியாக திருமண சடங்குகளை செய்ய முடியாமல் திருமண வீட்டார் அவதிக்குள்ளாகியுள்ளார்.

இதுகுறித்து, நாளை மறுநாள் தனது மகளுக்கு திருமணம் செய்ய உள்ள சேகர், "இன்றைக்கும் நாளைக்கும் நிறைய செலவுகள் இருக்கு. என்ன செய்வது என்றே தெரியல. அரசின் இந்த அறிவிப்பால் நான் நெருக்கடியில் இருப்பதை தெரிந்து கொண்ட நண்பர்கள், உறவினர்கள், என்னிடம் தைகுவான் தோ பயிற்சி எடுக்கும் மாணவர்கள் அனைவரும் அவர்களிடம் உள்ள 100 ரூபாய் நோட்டுகளை எனக்கு கொடுத்து உதவியுள்ளார்கள். அவர்கள் கொடுத்த பணத்தை வைத்துத்தான் இப்போது கடைசி நேர திருமண செலவுகளை செய்து வருகிறேன்" என்றார்.

இதுபோன்று திருமண ஏற்பாட்டில் இருந்த மணமகனின் தந்தை சந்திரசேகர், "கல்யாணத்திற்கு தேவையான தாலியை முன் கூட்டியே வாங்கும் வழக்கம் எங்களுக்கு இல்லை. நாளை மறுநாள் கல்யாணம் என்பதால் இன்றுதான் வாங்கலாம் என்று நினைத்திருந்தோம். அதற்குள் இப்படி ஆகிவிட்டது. என்ன செய்வது என்று தெரியவில்லை. நகையை எடுக்க கடைக்குச் சென்றால் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வாங்க மாட்டோம் என்கிறார்கள். அதற்கு பதிலாக எங்களிடம் இருக்கும் தங்க ஆபரண நகைகளை கேட்கிறார்கள். ஒரு சவரன் நகை வாங்க எங்களிடம் உள்ள 2 சவரன் நகையை கேட்கிறார்கள். பணப்பிரச்சனை முடிவுக்கு வந்த பிறகு திருப்பி அளித்துவிடுவதாகவும் அருகில் உள்ள நகைக் கடைக்காரர்கள் கூறுகிறார்கள். பெரிய கடைகளை பற்றி சொல்ல வேண்டியதில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறோம்" என்றார் மிகவும் சோகமாக.

இந்தப் பிரச்சனை குறித்து, திருமண மண்டபங்களிடம் விசாரித்தால், அவர்கள் நிலைமையும் பாவமாகத்தான் இருக்கிறது. புனித பிரகாச மாதா சமூக நலக் கூடத்தின் நிர்வாகி, "கல்யாண மண்டபத்துக்கான அட்வான்ஸ் எல்லோரும் முன் கூட்டியே கொடுத்துவிடுவார்கள். ஆனால் கல்யாண நேரத்தில் தான் மீதி தொகையை கொடுப்பார்கள். நாளை மறு நாள் முகூர்த்த நாள் என்பதால் பலருக்கு திண்டாட்டமாகத்தான் இருக்கிறது. வாடிக்கையாளர்கள் எங்களிடம் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை கொடுத்தால் நாங்கள் வாங்கத் தயாராக இருக்கிறோம். இதனை அப்படியே வங்கியில் கொடுத்து மாற்றிவிடுவோம். ஆனால் திருமண வீட்டாரால் பணமே எடுக்க முடியாத சூழல் இருப்பதுதான் பிரச்சனைக்கு காரணமாக இருக்கிறது. கல்யாணம் என்பது நல்ல காரியம். அதனால் பணம் கொடுக்காவிட்டால் திருமணத்தை நடத்த ஒத்துழைக்காமல் இருப்பது அநியாயம். அதனால் இந்த முறை சூழல் எப்படி இருக்கிறது என்று பார்த்து நடந்து கொள்வதுதான் நல்லது" என்று தெரிவித்தார்.

யாருக்கு என்ன சிக்கல் ஏற்பட்டாலும் மறந்துவிடுவார்கள். ஆனால் திருமணத்தின் போது ஏற்படும் ஒவ்வொரு சம்பவமும் திருமண வீட்டாருக்கும் மணமகள் மற்றும் மணமகளுக்கும் நீங்காத நினைவுகளாய் இருக்கும். அந்த வகையில் இந்த அதிரடி 500 ரூபாய் நோட்டு செல்லாது சம்பவமும் மலரும் நினைவுகளாய் அடுத்த ஆண்டு நாளை மறுநாள் திருமணம் செய்வோருக்கு அமையும்.

English summary
So many marriage events will be held day after tomorrow, but there no money to buy things for marriage due to 500 note abolition decision of Central government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X