For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உயிரோடு இருப்பதற்காக வெட்கப்படுகிறேன்! - எஸ்.ராமகிருஷ்ணன்

By Shankar
Google Oneindia Tamil News

ஒரு மீள்பதிவு...

இறுதிப் போரின் பின்பு மீளாத துயரமும் அழிவுமாக ஈழம் சிதைந்து போயிருக்கிறது. மின் ஊடகங்கள் அவற்றைத் திரும்பத் திரும்ப காட்சிப் பொருளாக காட்டிக் கொண்டேயிருக்கின்றன. மனித உயிரிழப்பு தரும் வேதனை வெற்று காட்சிகளாக கடந்து போவது தாங்க முடியாத வலி தருவதாக உள்ளது.

குறிப்பாக ஆங்கில ஊடகங்கள் ஈழப்போரினை தங்களது அற்ப அரிப்புகளும் தீனி கொடுப்பதற்கே அதிகம் பயன்படுத்திக் கொள்கின்றன. தமிழ் ஊடகங்களில் பெரும்பான்மை இதையே நகலெடுக்கின்றன. இறந்து போன பல்லாயிரம் மனிதர்களுக்கான துக்கத்தையோ உயிர் பிழைத்தவர்களின் சொல்லவொண்ணாத துயரத்தையோ எந்த ஊடகமும் பகிர்ந்து கொள்ளவில்லை.

S Ramakrishnan's article on Genocide in Tamil Eelam

நண்பர் நாகர்ஜுனன் தனது வலைப்பக்கத்தில் இன்றைய ஈழத்தின் அவலநிலை பற்றிய சில இணைப்புகளை வழங்கியிருந்தார். டைம்ஸ் இதழ் ஈழப் படுகொலைகள் பற்றி என்ன தகவல்களை தருகின்றன. என்ற இணைப்புகள் அவை.

அத்துடன் அவரே மேரி கொல்வின் கட்டுரையை மொழியாக்கம் செய்து போட்டிருந்தார். அந்த கட்டுரையின் சாரம் தரும் அதிர்ச்சியும் மனித நம்பிக்கை மோசடியும் நாம் வாழும் காலம் குறித்த மிகுந்த குற்றவுணர்வை, பயத்தை, அசிங்கத்தையே தருகின்றன.

கடந்த சில ஆண்டுகளாகவே ஈழத்திலிருந்து அவ்வப்போது சில நண்பர்கள் மின்னஞ்சல்கள் அனுப்பிக் கொண்டிருப்பார்கள். தங்கள் நம்பிக்கைகளை, வலியை, துயரை வார்த்தைகளால் பகிர்ந்து கொள்வதைத் வேறு வழியில்லை என்ற சூழலில் எழுதப்படும் கடிதங்கள் அவை.

வலி மிகுந்த அந்த மின்னஞ்சல்களை திறந்து படிக்கவே தயங்குவேன். அவை பெயர் தெரியாத உறவுகளின் மரணசாட்சியங்களை அல்லவா சுமந்து வந்திருக்கிறது. எல்லா மின்னஞ்சலிலும் சாவிற்கு கூட அழமுடியாத உடைந்த மனது பீறிட்டுக் கொண்டிருக்கும்.

என்ன பதில் அனுப்புவது. அவர்கள் எந்த பதிலையும் கேட்கவில்லை. அந்த கடிதங்கள் தங்களை சுற்றிய உலகின் கருணையற்ற தன்மையை சுட்டிக் காட்டுகின்றன. மனிதர்கள் விலங்குகளை விடவும் கீழாக நடந்து கொள்கிறார்கள் என்பதை அடையாளம் காட்டும் வரிகள். சொந்த துயரங்களை விடவும் தன் நிலத்தையும் நிலம் சார்ந்த விடுதலையை. அதன் இழப்புதுயரங்களையும் முன் வைத்த கடிதங்கள்.

யோ என்ற ஒற்றை எழுத்துடன் ஒரு நண்பர் இரண்டு ஆண்டுகாலமாக அடிக்கடி மின்னஞ்சல் அனுப்பிக் கொண்டிருந்தார்.

தமிழ் ஈழ விடுதலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை அவருக்கு உறுதியாக இருந்தது. அவரது மின்னஞ்சல்களில் சோர்வுறாத நம்பிக்கை இருப்பதைக் கண்டிருக்கிறேன். யுத்தசாவுகள் அவரது நம்பிக்கைகளை தகர்க்கவில்லை. ஆனால் இரண்டு மாதங்களுக்கு முன்பாக அவர் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார் அதில் நான் உயிரோடு இருக்கிறேன் என்பதை தவிர வேறு வாசகமே இல்லை.

படித்து முடித்த இரவெல்லாம் கணிணியை அணைத்துவிட்டு இருளில் அமர்ந்தபடியே செயலற்று இருந்தேன். அது ஒரு மனிதனின் வெளிப்பாடு அல்ல. மீதமிருக்கும் நம்பிக்கைகளை கூட கைவிட வேண்டிய சூழல் உருவாகிவிட்டதே என்ற ஒரு இனத்தின் அவலக் குரல். அது என்னை துவளச் செய்துவிட்டது.

பகலிரவாக கரையான் அரிப்பதை போல அந்த சொற்கள் என்னை அரித்துக் கொண்டேயிருந்தது. அந்த மின்னஞ்சலுக்கு என்ன பதில் அனுப்புவது. பதில் தேவையற்ற அந்த மின்னஞ்சல் தரும் வலி ரணமாக கொப்பளிக்க துவங்கியிருந்தது. அவரிடமிருந்து இன்னொரு மின்னஞ்சல் வராதா என்று நினைத்துக் கொண்டிருந்தேன். வரவேயில்லை.

பேரழிவின் இரண்டு தினங்களுக்கு பிறகு அவரிடமிருந்து இன்னொரு மின்னஞ்சல் வந்தது. திறந்து பார்த்தேன். மூன்றே வார்த்தைகள்.

உயிரோடு இருப்பதற்காக வெட்கப்படுகிறேன்.

எவ்வளவு இழப்புகள். எவ்வளவு குருதிப்பெருக்கு. யாவும் ஒடுக்கபட்ட சொல்லமுடியாத துயரம் இந்த ஒரு வரியில் வெளிப்படுகிறது.

நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை நமது எதிரியே முடிவு செய்கிறான் என்று சொன்ன புரட்சி கருத்துகளை நேற்று வரை கொண்டாடி வந்த பலரும் இன்று வன்முறை பாதை தவறானது. வன்முறையில்லாமல் நாம் அமைதியாக போராடி வெற்றி பெற வேண்டும் என்ற யோசனைகளை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ரத்தம் சிந்தாமல் எந்த சமூகமும் மாறியதில்லை என்பதே வரலாறு திரும்ப திரும்ப சொல்லும் உண்மை. காந்தி வழியில்தான் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது என்ற பள்ளிப்பாட சரித்திரம் உண்மையில்லை என்பதை இந்த சுதந்திர போரில் வெள்ளையர்களால் அடிபட்டும் வன்கொலைக்கு உள்ளாகியும் இறந்தவர்களின் எலும்புகள் என்றும் சொல்லும்.

நான் வன்முறையை வளர்க்கச் சொல்லவில்லை. ஆனால் வன்முறை என்பது ஆயுதங்கள் ஏந்திப் போரிடுவது மட்டுமில்லை. அதிகாரம் மேற்கொள்ளும் அத்தனை செயல்களிலும் வன்முறை பீறிட்டுக் கொண்டுதானே இருக்கிறது.

ஆயிரமாயிரம் மக்கள் கொட்டடிகளில் நிராதரவாக அடைக்கபட்டிருக்கிறார்கள். வதை முகாம் போல அகதிமுகாம்கள் உள்ளன என்ற கண்கூடான உண்மைகள் வெளிவந்த பிறகும் அதைபற்றிய எவ்விதமான கலக்கமும் இன்றி இனி ஈழம் செய்ய வேண்டியது என்னவென்று இலவச புத்திமதிகளை ஈழத்திற்கு வாரிவழங்கும் அறிவுவேசைத்தனம் வன்முறையில்லையா?

ஈழப்போரின் வழிமுறைகளை தமிழகத்தில் உட்கார்ந்து கொண்டு சொந்த வாழ்வின் சொகுசு கலையாமல் யோசிப்பதும் புத்திமதி வழங்குவதும் போன்ற மோசடிகளை வேறு எந்த சமூகத்திலும் காணமுடியாது.

எது சரி, யார் செய்தது தவறு? ஈழப் போராட்டம் முடிந்து விட்டது என்பது போன்ற உப்புசப்பில்லாத மயிர்பிளக்கும் விவாதங்கள் எப்போதும் போலவே காணும் எல்லா ஊடகங்களிலும் நிரம்பி வழிகிறது.

தொலைவில் குருதி குடித்த மண் அறுபட்ட குரல்வளையோடு கிடக்கிறது. சவஅமைதி எளிதானதில்லை. அதன் வலிமை அடங்காதது. சாவின் துர்மணம் கொண்ட மண். பித்தேறிய மத்தகத்தின் கண்களை போல நம்மை வெறித்துக் கொண்டிருக்கிறது.

பிரபாகரன் உயிரோடு இல்லை. அவர் கொல்லபட்டுவிட்டார் என்ற செய்தியை (வதந்தியை) எதற்காக இத்தனை உற்சாகமாக ஊடகங்கள் கொண்டாடுகின்றன. என்ன வெறுப்பு அது. ஈழமக்களின் கடைசி யுத்தம் முறியடிக்கபட்டுவிட்டது என்பதை பொதுவெளிகள் ஏன் களிப்போடு பேசி கதைக்கின்றன.

ஒரு இனம் தன் வாழ்வுரிமை மறுக்கபட்டு ஒடுக்கபட்டதை கொண்டாட முடியும் மனிதர்களோடு எதற்காக எழுத்து படிப்பு இலக்கியம் என்று வீணடிக்கிறோம் என்று ஆத்திரம் வருகிறது.

நான் ஆழ்ந்த அரசியல் அறிவு கொண்டவன் இல்லை. ஈழப் போராட்டத்தின் வரலாற்றை முழுமையாக கற்றுத் தேர்ந்து சரி தவறுகளை நிறுத்துப் பார்த்து எனது நிலைப்பாட்டை எடுப்பவனுமில்லை.

வரலாற்றில் இத்தனை பெரிய இனப்படுக்கொலையை நிகழ்த்திவிட்டு அதை மூடிமறைத்து கொண்டாடும் தேசத்தை, அதை நியாயப்படுத்தும் மனிதர்களை காணும் போது அரசியல் அறிவை மீறி உணர்ச்சிவசப்பட வேண்டியிருக்கிறது. கோபமும் இயலாமையும் எழுகின்றது.

யோவின் மின்னஞ்சல் நினைவில் உறுத்திக் கொண்டேயிருக்கிறது உயிரோடு இருப்பதற்காக வெட்கப்படுகிறேன்.

இது சொற்கள் அல்ல. ஒடுங்கி நிற்கும் இனத்தின் மனசாட்சியின் முணுமுணுப்பு. என்மீது படிந்த அழியாக்கறை.

English summary
S Ramakrishnan's article on Genocide in Tamil Eelam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X