• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கிரானைட் கொள்ளை... கொலைமிரட்டல்...நரபலி புகார்கள்... 2015ல் சகாயம் நடத்திய போராட்டங்கள்!!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: கிரானைட் குவாரிகளால் 16000 கோடி ரூபாய் இழப்பு என்று 2012ம் ஆண்டில் அறிக்கை வெளியிட்டு தமிழகத்தில் புயலை கிளப்பினார் அப்போது மதுரை ஆட்சியராக இருந்த சகாயம். மூன்று ஆண்டுகள் கழித்து உயர்நீதிமன்ற உத்தரவுபடி சட்ட ஆணையராக மாறி சகாயம், கிரானைட் குவாரிகள், மலைகள், கிராமங்களில் 11 மாதங்களாக கள ஆய்வு மூலம் விசாரணை நடத்தி கிரானைட் குவாரிகளால் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 145 கோடி கொள்ளை நடத்திருப்பதாக உயர்நீதிமன்றத்தில் அறிக்கை அளித்துள்ளார். 2015ம் ஆண்டில் தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெருமழையும், அதனால் ஏற்பட்ட வெள்ளமும் கிரானைட் குவாரி பற்றிய சகாயத்தின் அறிக்கையை மூழ்கடித்து விட்டது என்றே சொல்ல வேண்டும்.

மதுரை மாவட்டம் மேலூரை சுற்றியுள்ள கீழவளவு, கீழையூர், இ.மலம்பட்டி, செம்மினிப்பட்டி உள்பட 5 ஊர்களில் 39 லட்சத்து 30 ஆயிரத்து 931 கன மீட்டர் கிரானைட் கற்கள் அரசு அனுமதியின்றி வெட்டப்பட்டதையும், இதன் மதிப்பு ரூ.15 ஆயிரத்து 761 கோடி எனவும், இதன் மூலம் அரசுக்கு உரிமமாக கிடைக்க வேண்டிய ரூ.617 கோடியும் சேர்த்து மொத்த இழப்பீடு ரூ.16 ஆயிரத்து 338 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக, 2012ம் ஆண்டு மே மாதம்19ம் தேதி தமிழக தொழில்துறை முதன்மை செயலாளருக்கு அறிக்கை அனுப்பினார் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம். இதன்மீது அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஊடகங்கள் கிளப்பிய புயலினால் அந்த அறிக்கை மீது அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல்மிஸ்ரா தலைமையில் 16 அதிகாரிகள் குழுவினர்கள் கிரானைட் குவாரிகளில் முழுமையாக ஆய்வு மேற்கொண்டனர். முறைகேடு உண்மை என தெரியவரவே, மதுரை மாவட்டத்தில் இருந்த 97 கிரானைட் குவாரியின் உரிமத்தை மாவட்ட ஆட்சியர் ரத்து செய்தார். இதில் 86 குவாரிகளில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் குவாரிகளில் வெடிபொருட்கள் வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

முறைகேடு தொடர்பாக 180க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கிரானைட் உரிமதாரர்கள் பிஆர்.பழனிச்சாமி, செல்வராஜ், முருகேசன் மற்றும் அரசு துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரிகள் உள்பட 100க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் தமிழகத்தில் தாதுமணல், கிரானைட்டில் முறைகேடு நடந்துள்ளது. இதனை சகாயம் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதனை ஏற்ற உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர்11ம் தேதி ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் சட்ட ஆணையம் ஒன்றை அமைத்து கிரனைட் முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

டிசம்பர் 3, 2014

டிசம்பர் 3, 2014

உயர்நீதிமன்ற உத்தரவின் படி கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் தேதி முதல் விசாரணையை தொடங்கினார் சட்ட ஆணையர் சகாயம். முதல்கட்ட விசாரணையில் கிரானைட் முறைகேடுகளால் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் புகார்களைப் பெற்றார். அதில் விவசாய நிலங்கள், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு, மோசடி, கொலை மிரட்டல், நரபலி உள்ளிட்ட500க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டன.

மலைகள், நீர்நிலைகள்

மலைகள், நீர்நிலைகள்

அடுத்தகட்ட விசாரணையில் புகார்தாரர்களை சம்பந்தப்பட்ட இடங்களில் நேரடியாக சந்தித்து கள ஆய்வில் ஈடுபட்டார். அப்போது தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள புராதான சின்னங்களை பார்வையிட்ட அவர், விவசாய விளைநிலங்கள், நீர்நிலைகள், கால்நடைகள் மற்றும் சுற்றுச்சூழலில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விசாரணையில் ஈடுபட்டார். புராதன சிறப்பு வாய்ந்த மலைகள் சிதைக்கப்பட்டும், நீர்நிலைகள், விவசாய நிலங்கள் சாதாரண இடங்களாகவும் மாற்றப்பட்டிருந்தது தெரியவந்ததோடு, வருவாய் கணக்குகளும் திருத்தம் செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சகாயம் சுழற்றிய சாட்டை

சகாயம் சுழற்றிய சாட்டை

கேமரா பொருத்தப்பட்ட ஆளில்லா சிறிய ரக விமானம் மூலம் முறைகேடுகள் நடைபெற்ற குவாரியின் காட்சிகள் முழுவதையும் பதிவு செய்தார். புகார்தாரர்களை சம்பந்தப்பட்ட இடத்திற்கு வரவழைத்து அவர்கள் குற்றச்சாட்டுகளையும், வாக்குமூலங்களையும் வீடியோ பதிவாக பெற்றார்.

வருவாய்துறை, காவல்துறை, பொதுப்பணித்துறை, கனிம மற்றும் சுரங்கவியல் துறை, வணிக வரித்துறை என அரசுத்துறை அதிகாரிகளை அழைத்து கிரனைட் முறைகேடுகள், அவற்றால் ஏற்பட்ட இழப்புகள் தொடர்பான முழுவிவரங்களை அளிக்குமாறு கூறினார்.

விசாரணை அறிக்கை

விசாரணை அறிக்கை

அதனடிப்படையில் வருவாய்துறை, காவல்துறை, பொதுப்பணித்துறை, கனிம மற்றும் சுரங்கவியல் துறை, வணிக வரித்துறையினர் தங்களது தரப்புத் தகவல்களை பல்லாயிரம் பக்கங்களைக் கொண்ட அறிக்கையாக தாக்கல் செய்தனர். தொடர்ந்து பெறப்பட்ட புகார்கள் தொடர்பான விசாரணையை மேற்கொள்ளுமாறு காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது.

நரபலி புகார்

நரபலி புகார்

20ஆம் கட்ட விசாரணை நடைபெற்ற சூழலில் கீழவளவைச் சேர்ந்த சேவற்கொடியோன் என்பவர் நரபலி புகார் ஒன்றை அளித்தார். அதில், பிஆர்பி கிரனைட் நிறுவனத்தில், 1999ஆம் ஆண்டு முதல் 2003ஆம் ஆண்டு வரை வாகன ஓட்டுநராக தான் பணியாற்றியதாகவும், அப்போது, மனநலம் பாதிக்கப்பட்ட இருவரை மேலூர் அருகே இ.மலம்பட்டியில் நரபலி கொடுத்து புதைத்ததை பார்த்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

சுடுகாட்டில் உறங்கிய சகாயம்

சுடுகாட்டில் உறங்கிய சகாயம்

1999ல் நடந்ததாகக் கூறப்படும் இ. மலம்பட்டி மணிமுத்தாறு ஓடைப்பகுதிக்கு சென்ற சட்ட ஆணையர் சகாயம் தடயங்கள் அழிக்கப்பட்டு விடக்கூடாது எனும் நோக்கில் 12.09.15 அன்று இரவு முழுவதும் அங்கேயே தங்கினார். சேவற்கொடியோன் அடையாளம் காட்டிய இடத்தில் தோண்டும் பணி நடைபெற்றது. மண்டை ஓட்டுடன் கூடிய எலும்புகள் தோண்டி எடுக்கப்பட்டன.

தோண்ட தோண்ட எலும்புகள்

தோண்ட தோண்ட எலும்புகள்

அடுத்தடுத்து சில நரபலி புகார்கள் வந்தன. மொத்தம் 9 எலும்புகூடுகள் எடுக்கப்பட்டன. கடைசியாக எடுக்கப்பட்ட இரண்டு எலும்புக்கூடுகள் நரபலிக்கான தடயம் இருந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். தோண்டப்பட்ட எலும்புக்கூடுகள் அனைத்தும் டிஎன்ஏ சோதனைக்காக சென்னையில் உள்ளது.

விசாரணைக்கு தேவையான ஆவணத்தை அதிகாரிகள் சரிவர கொடுக்காதது, ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் விசாரணை காலம் ஓரு ஆண்டுக்கு நீடித்தது. மேலும் அவருக்கு 3 முறை கொலை மிரட்டல் வந்தது. பல்வேறு சோதனைக்கு இடையே விசாரணையை நடத்தினார்.

ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 145 கோடி கொள்ளை

ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 145 கோடி கொள்ளை

விசாரணையை கடந்த அக்டோபர் 9ம் தேதி முடித்துக்கொண்டு சகாயம் மதுரையில் இருந்து சென்னை சென்றார். பல்வேறு மிரட்டல்கள், சோதனைகளை தாண்டி இறுதி அறிக்கையை தயார் செய்த சகாயம் நவம்பர் மாதம் திட்டமிட்டபடி அவர் தனது அறிக்கையை தாக்கல் செய்தார். கிரானைட் குவாரிகளால் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 145 கோடி கொள்ளை நடத்திருப்பதாக சகாயம் அறிக்கையில் தெரிவித்துள்ளார். அடுத்த கட்டமாக அரசின் நடவடிக்கை எப்படி இருக்கும் என்பதை இனிமேல்தான் தெரிய வரும்.

முதல்வர் வேட்பாளரா சகாயம்

முதல்வர் வேட்பாளரா சகாயம்

மக்கள் ஆட்சியராக, நேர்மையான அரசு அதிகாரியாக அறியப்படும் சகாயம் ஐ.ஏ.எஸ். தமிழக முதல்வராக வேண்டும் என்று கடந்த வாரங்களில் சென்னையில் பேரணி நடத்தியுள்ளனர். நேர்மையான அரசு அதிகாரியான சகாயத்தை அரசியலுக்கும் அழைக்கின்றனர் தமிழகத்தில் மாற்றத்தை விரும்பும் இளைய தலைமுறையினர்.

பந்தாடப்பட்ட சகாயம்

பந்தாடப்பட்ட சகாயம்

புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுணை கிராமத்தில், 1962ம் ஆண்டு ஜூலை மாதம் 3ம் தேதி பிறந்தவர் சகாயம். பெருஞ்சுணையில் பள்ளிப்படிப்பு, புதுக்கோட்டையில் பட்டப்படிப்பு, சென்னையில் முதுநிலைப் பட்டப்படிப்பு, சட்டப்படிப்பு முடித்த சகாயம், இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாகவும் தேர்வானார். தருமபுரியில் பயிற்சி ஆட்சியர், சென்னை மாவட்ட வருவாய் அதிகாரி, நாமக்கல் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர், கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநர், அறிவியல் நகரத்தின் துணைத் தலைவர் என 24 ஆண்டு பணிக் காலத்தில் நேர்மையாக பணியாற்றியதற்காக 23 முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சகாயத்தின் சாதனைப் பட்டியல்

சகாயத்தின் சாதனைப் பட்டியல்

நாமக்கல் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, கிராமத்தில் தங்குவோம், உழவர் உணவகம், ஊன்றுகோல் திட்டம், தொடுவானம் போன்ற திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியவர். பாலாறு மணல் கொள்ளை தடுப்பு, நாமக்கல் மாவட்டத்தில் ஒரு கோடி மரக்கன்று திட்டம், கொல்லிமலை அடிவாரத்தில் தடுப்பணை திட்டம், நட்டத்தில் இயங்கிய கோ-ஆப்டெக்ஸை லாபத்திற்கு மாற்றியது என, சகாயத்தின் சாதனை பட்டியல் நீளமானது.

சகாயத்தின் சொத்துக்கள்

சகாயத்தின் சொத்துக்கள்

மதுரையில் ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்பில் எல்.ஐ.சி வீட்டுக் கடன் மூலம் கட்டப்பட்ட ஒரு வீடு, வங்கியில் 7,712 ரூபாய் சேமிப்பு எனப் பகிரங்கமாக தனது சொத்துப் பட்டியலை வெளியிட்டு ஐஏஎஸ் அதிகாரிகள் பலரது புருவங்களையும் உயர்த்தச் செய்தார் சகாயம். லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து என்ற கொள்கை முழக்கத்துடன் நேர்மையின் துணையோடு நியாயமாக செயல்படும் அதிகாரி என பாராட்டப்படும் சகாயம் குறித்து, 'சகாயம் செய்த சகாயம்' என்ற புத்தகமும் எழுதப்பட்டிருக்கிறது. சகாயத்தின் கதை திரைப்படமாகவும் உருவாகி வருகிறது.

English summary
High Court-appointed Special Commissioner U Sagayam submitted his voluminous report before the first bench of the Madras High Court on November 2015.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X