For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிரானைட் குவாரியில் நரபலி தடயத்தை அழிக்க சதியா? இரவுமுழுதும் இடுகாட்டிலேயே காத்திருக்க சகாயம் முடிவு

Google Oneindia Tamil News

மதுரை : கிரானைட் குவாரியில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த மனநலம் பாதித்தவர்கள் நரபலி கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்ததையடுத்து, மாலை ஆகிவிட்டதால் அந்த இடத்தில் உடல்களை தோண்டி எடுக்க போலீசார் மறுத்து விட்டனர்.

இதையடுத்து தடயங்களை அழித்துவிட வாய்ப்புள்ளதாகக் கூறி கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை நடத்தி வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம், இடுகாட்டிலேயே இரவு முழுவதும் காத்திருக்க முடிவு செய்துள்ளார்.

sagayam

மதுரை மாவட்டம் கிரானைட் குவாரிகளில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தலைமையிலான குழுவினர் விசாரணையை கடந்த 10 மாதகாலமாக நடத்தி வருகின்றனர்.

20 வது கட்ட விசாரணையும் கள ஆய்வும் நடத்தி வருகிறார் சகாயம். வரும் 5 ஆம் தேதி விசாரணைக் காலம் முடிவதால், நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்காக அறிக்கை தயாரிக்கும் பணியில் சகாயம் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மேலூர் அருகே இ.மலம்பட்டியில் ஆய்வு செய்த சகாயம், மணிமுத்தாறு நடுவில் பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டு, ஆற்றின் குறுக்கே கரை போடப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியுற்றார். இதுகுறித்து பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கார்த்திக்கேயனிடம் ஆற்றை ஆக்கிரமித்தது குறித்து கேள்வி எழுப்பினார்.

மணிமுத்தாறு அருகே மக்கள் இடுகாடாக பயன்படுத்தி வந்த இடத்தை பார்வையிட்ட சகாயம், வருவாய்துறை ஆவணங்களில் அந்த இடம் ஆறாக உள்ளதா அல்லது சுடுகாடாக உள்ளதா என்றார்.

அப்போது அங்கு வந்த சேவற்கொடியோன் என்ற பிரபு பி.ஆர்.பி., கிரானைட் நிறுவத்தினர் நரபலி கொடுத்திருப்பதாக சகாயத்திடம் குற்றம் சாட்டினார்.

சகாயத்திடம் சேவற்கொடியோன் கூறியதாவது...
1999 முதல் 2003 வரை பி.ஆர்.பி., நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்தேன். அப்போது மேலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து வந்து சாப்பாடு கொடுத்தனர். நான் வேலை பார்த்த காலங்களில் 11 ஆண்கள் மற்றும் ஒரு பெண்னை அழைத்து வந்துள்ளேன்.

இ.மலம்பட்டி குவாரியில் பழுதான ஆயில் மோட்டாரை எடுத்து கொண்டு சில ஆண்டுகளுக்கு முன்பு கம்பெனி நோக்கி ஜோதிபாசு என்பவருடன் சென்றேன். எதிரில் மற்றொரு வண்டியில் மேலாளர் அய்யப்பன் சென்றார்.

அதில் பார்த்த போது நான் அழைத்து வந்ததில் இருவர் கழுத்தறுபட்டு இறந்து கிடந்தனர். இதனால் ஜோதிபாசு என்னை சத்தமிட்டார். இ.மலம்பட்டி அருகே மணல் அள்ளும் இயந்திரத்தை கொண்டு குழி தோண்டி இருவரையும் புதைத்து விட்டனர். மேலாளர் அய்யப்பனிடம் சம்பவத்தை நான் பார்த்ததாக என்னுடன் வந்த ஜோதிபாசு கூறிவிட்டார். இதனால் என்னையும் அய்யப்பன் மிரட்டினார். இவ்வாறு சேவற்கொடியோன் கூறினார்.

சேவற்கொடியோன் குறிப்பிட்ட இடத்தில் சகாயம் குழுவைச் சேர்ந்த அலுவலர்கள் ராஜாராம், தேவசேனாதிபதி, கீர்த்தி பிரியதர்ஷினி, ஓய்வு பெற்ற ஏ.டி.எஸ்.பி., வேலு, தனி உதவியாளர் ஆல்பர்ட், மற்றும் ஆர்.டி.ஒ., செந்தில்குமாரி, தாசில்தார் கிருஷ்ணன், டி.எஸ்.பி., மங்களேஸ்வரன், இன்ஸ்பெக்டர் நாகராஜ், துணை தாசில்தார் விஜயலெட்சுமி, ஆர்.ஐ., லட்சுமி பிரியா, வி.ஏ.ஒ.,க்கள் ரவிச்சந்திரன், அழகுபாண்டி ஆகியோர் முன்னிலையில் மணல் அள்ளும் இயந்திரத்தை கொண்டு தோண்டப்பட்டது.

அப்போது போலீசாருக்கு உயர் அதிகாரிகளிடமிருந்து மணல் அள்ளும் இயந்திரத்தை கொண்டு தோண்டினால் தடயங்கள் சேதமாகிவிடும் என தகவல் வரவே தோண்டும் பணி நிறுத்தப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த சகாயம் குழுவினர் நரபலி கொடுக்கப்பட்டதாக கூறப்படும் இடங்களை தோண்ட போலீசார் ஒத்துழைப்பு தரவில்லை என குற்றம் சாட்டினர். மேலும் அந்த இடங்களை தோண்டும் வரை அங்கிருந்து செல்ல மாட்டேன் என சகாயம் தெரிவித்தார். இதனால் மதுரையிலிருந்து டாக்டர்கள் குழுவை வரவழைத்து தோண்டுவதற்கான நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டனர்.

அப்போது சகாயம் விசாரணை குழுவைச் சேர்ந்த ஏ.டி.எஸ்.பி., வேலு, தனி உதவியாளர் ஆல்பர்ட் கூறியதாவது...

சேவற்கொடியோன் குற்றம்சாட்டிய இ.மலம்பட்டி மணிமுத்தாறு பின்புறம் நரபலி கொடுக்கப்பட்ட இடத்திற்கு காலை 10 மணிக்கு வந்தோம். போலீசார் மணல் அள்ளும் இயந்திரம் மூலம் தோண்ட முயற்சித்த போது, எஸ்.பி., தடயங்கள் அழிந்து போவதாக தெரிவித்ததால் பணி நிறுத்தப்பட்டது.

பிறகு ஆட்கள் மூலம் தோண்ட ஏற்பாடு நடந்தது. திடீரென புகார் கொடுத்தால் மட்டுமே தோண்ட முடியும் என போலீசார் தெரிவித்ததால், வி.ஏ.ஒ., அழகு புகார் கொடுத்தார். சம்பவம் நடந்து பல மாதங்களானதால் எலும்புகள் கிடைக்கலாம் என கருதி டாக்டர் குழு வரவழைக்கவும் நடவடிக்கை எடுத்தோம். ஆனால் மதுரை டீன், போலீசார் கடிதம் கொடுத்தால் மட்டுமே, டாக்டர் குழுவை அனுப்ப முடியும் என்றார். கீழவளவு இன்ஸ்பெக்டர் நாகராஜை அனுப்பி கடிதம் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் ஏ.டி.எஸ்.பி., மாரியப்பன், ''மாலை 5 மணியை கடந்து விட்டதால் தோண்ட முடியாது,'' என தெரிவித்தார். போலீசார் ஒத்துழைக்க மறுக்கின்றனர், இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மருத்துவ குழுவினர் கூறும்போது... மாலை 4 மணிக்கு கடிதம் கிடைத்து, சம்பவ இடத்திற்கு புறப்பட்டோம். ஆனால் கீழவளவு காவல் நிலையத்திற்கு போலீசார் எங்களை அழைத்து சென்று விட்டனர். அரசு விதிப்படி மாலை 5 மணிக்கு பிறகு பிரேத பரிசோதனை செய்ய முடியாது என்பதால் நரபலி கொடுக்கப்பட்ட இடத்திற்கு செல்லவில்லை என்றனர்.

நரபலி புகார் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், இறந்தவரின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றும் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதரி செய்தியாளர்களிடம் கூறினார். நரபலி கொடுத்ததாக கூறப்படும் இடத்தில் பகலில் மட்டுமே தோண்ட முடியும் எனவும் அவர் கூறினார்.

இதனிடையே, அங்கிருந்து சென்றுவிட்டால், தடயத்தை அழித்து விட வாய்ப்பு உள்ளதாகக் கூறி அங்கேயே இரவு முழுவதும் காத்திருக்க சகாயம் குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இதற்கு ஏதுவாக ஜெனரேட்டர் வசதியையும் ஏற்பாடு அவர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், சகாயம் குழுவினரின் நடவடிக்கையை போன் மூலம் கிரானைட் நிறுவனத்தினருக்கு தகவல் தெரிவித்த முருகானந்தம் என்பவரை போலீசார் கைது செய்து கீழவளவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

English summary
Sagayam team decided to wait till morning in cremation ground where humen sacrificed
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X