For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. விடுதலையை எதிர்த்த கர்நாடகாவின் அப்பீல் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் வரும் 27-ல் விசாரணை

By Madhivanan
Google Oneindia Tamil News

டெல்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து கர்நாடகா அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் வரும் 27-ந் தேதி விசாரணைக்கு நடைபெற உள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூரு தனிநீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்கா கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி தீர்ப்பு அளித்தார். இந்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறைத்தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.

supreme court jayalalithaa

இந்த தீர்ப்பினால் முதல்வர் பதவியையும், சட்டசபை உறுப்பினர் பதவியையும் ஜெயலலிதா இழக்க நேர்ந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதாவும், மற்றவர்களும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி கடந்த மே மாதம் 11-ந் தேதி தனிநீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்தும், ஜெயலலிதாவையும், மற்றவர்களையும் விடுதலை செய்தும் தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பை தொடர்ந்து ஜெயலலிதா கடந்த மே மாதம் 23-ந் தேதி முதல்வராக மீண்டும் பதவி ஏற்றார்.

மேலும் கடந்த 27-ந் தேதி சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்று கடந்த 4-ந் தேதி சட்டசபை உறுப்பினராக பதவியேற்றார். இந்நிலையில் இதைத் தொடர்ந்து ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தது.

இதில் உச்சநீதிமன்றம் சில திருத்தங்களை செய்யக் கோரியது. இதனைத் தொடர்ந்து கர்நாடக அரசு தாக்கல் செய்த திருத்தப்பட்ட மனுவை கடந்த 16-ந் தேதி உச்சநீதிமன்ற பதிவாளர் ஏற்றார்.

இந்த மேல்முறையீட்டு மனு மீது வரும் 27-ந் தேதி விசாரணை நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனும் இதேபோல் ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து அப்பீல் மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதிலும் சில திருத்தங்களை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. இதன் பின்னர் அன்பழகன் சார்பில் திருத்தபட்ட மேல்முறையீட்டு மனுவும் தாக்கல் செய்யப்பட்டு அதையும் உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.

இந்நிலையில் பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமியும் ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்யப் போவதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
SC will hear the Karnataka's Appeal against Tamilnadu CM Jayalalithaa's acquittal on July 27.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X