For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாதவிடாய் குறித்து ஆசிரியை கடிந்ததால் மாணவி தற்கொலை?

By BBC News தமிழ்
|

திருநெல்வேலி மாவட்டத்தில் மாதவிடாய் உதிரப்போக்கினால் ஏற்பட்ட கறை குறித்து ஆசிரியை கடிந்துகொண்டதால் 12 வயது மாணவி தற்கொலை செய்துகொண்டதாக அவரது பெற்றோர் கூறுகின்றனர்.

மாதவிடாய் குறித்து ஆசிரியை கடிந்ததால் மாணவி தற்கொலை?
Getty Images
மாதவிடாய் குறித்து ஆசிரியை கடிந்ததால் மாணவி தற்கொலை?

பாளயங்கோட்டையில் வசிக்கும் சையது அகமது - ரசவம்மாள் பானு தம்பதியின் 12 வயது மகள், செந்தில் நகரில் உள்ள ஜோசப் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 7-ஆம் வகுப்புப் படித்துவந்தார்.

இவர் கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி அதிகாலை இரண்டு மணியளவில் தனது வீட்டிற்கு அருகில் உள்ள கட்டடத்திலிருந்து கீழே குதித்தார். மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியில் அந்தச் சிறுமி உயிரிழந்தார்.

'12 வயதுக் குழந்தை இதை எப்படித் தாங்கும்?'

தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக அந்த மாணவி எழுதிய கடிதத்தில், "எனக்கு வேறு வழி தெரியவில்லை. செத்துத்தான் ஆகனும். நான் ஆறாம் வகுப்புப் படிக்கும்போது என் மீது எந்தப் புகாராவது வந்ததா? ஆனால், ஏழாம் வகுப்புப் படிக்கும்போது என் மிஸ் ஏன் இப்படி புகார் சொல்கிறார்கள்? நான் என்ன தவறு செய்தேன்? என்னை ஏன் இப்படி பாடாய் படுத்துகிறார்கள்? அந்த மிஸ் நல்லா இருக்க மாட்டாங்க. எனக்கு வேறு வழி தெரியவில்லை. அதனால் தற்கொலை செய்துகொள்கிறேன்" என்று கூறப்பட்டிருந்தது.

மாணவி எழுதிய தற்கொலை குறிப்பு
BBC
மாணவி எழுதிய தற்கொலை குறிப்பு

இது குறித்து பிபிசியிடம் பேசிய ரசவம்மாள், "இந்த ஆசிரியை பல நாட்களாகவே என் குழந்தையை துன்புறுத்திவந்திருக்கிறார். இரண்டு மாதங்களுக்கு முன்புதான் இந்தக் குழந்தை வயதுக்குவந்தது. அதற்காக ஒரு வாரம் பள்ளிக்கூடத்தில் சொல்லிவிட்டுத்தான் விடுமுறை எடுத்தோம். பள்ளிக்கூடத்திற்கு குழந்தை திரும்பிச் செல்லும்போது, ஏன் வீட்டுப்பாடம் செய்யவில்லையெனக் கேட்டு அடித்திருக்கிறார்கள்" என்றார்.

மேலும், "கடந்த சனிக்கிழமை பள்ளிக்கூடத்திற்குப் போனவுடன் மூன்றாவது முறையாக என் மகளுக்கு மாதவிடாய் வந்திருக்கிறது. இது குறித்து ஆசிரியையிடம் சொன்னவுடன், வகுப்பு மாணவர்கள் முன்பாகவே ஒரு குச்சியால் சுடிதாரைத் தூக்கிப் பார்த்திருக்கிறார். மேலும் கரும்பலகையைத் துடைக்கும் துணியைக் கொடுத்து பயன்படுத்திக்கொள்ளச் சொல்லியிருக்கிறார். மேலும் வகுப்புக்கு வெளியேயே நிற்கவைத்திருக்கிறார். 12 வயதுக் குழந்தை இதை எப்படித் தாங்கும்?" என்கிறார் ரசவம்மாள்.

வீட்டில் பெற்றோரிடம் இது குறித்து சொன்ன அந்த மாணவி, ஞாயிற்றுக் கிழமை அருகிலிருந்த கட்டடத்திலிருந்து குதித்து தற்கொலைசெய்துகொண்டார்.

மாதவிடாய் குறித்து ஆசிரியை கடிந்ததால் மாணவி தற்கொலை?
BBC
மாதவிடாய் குறித்து ஆசிரியை கடிந்ததால் மாணவி தற்கொலை?

மாணவியின் பள்ளி என்ன கூறுகிறது?

தனியார் பள்ளிக்கூடமான ஜோசப் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 3ஆம் வகுப்பு முதலே ஆங்கில வழிப் பிரிவில் இந்த மாணவி படித்துவந்துள்ளார். மாணவியின் தந்தை சையது அகமது ஆட்டோ ஓட்டுனராக வேலைபார்த்துவருகிறார்.

இது குறித்து ஜோசப் மெட்ரிக்குலேஷன் பள்ளியின் தலைமை ஆசிரியை கலாவதியிடம் கேட்டபோது, "காவல்துறை விசாரித்தது. மாவட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் விசாரித்தார்கள். அவர்களிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டோம். அதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாது. ஆசிரியை திட்டியது குறித்து எனக்கு எதுவும் தெரியாது" என்று கூறினார்.

இது தொடர்பாக மாவட்ட வருவாய்த் துறை அதிகாரி பள்ளிக்கூடத்திலும் வகுப்பில் இருந்த 16 மாணவர்களிடமும் விசாரணை நடத்தியுள்ளார். விரைவில் அந்த அறிக்கை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

இன்று திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்த காவல்துறை ஆணையர் கபில் சரத்கர், இந்த விவகாரத்தில் தற்கொலை என்று மட்டும் வழக்குப் பதிவுசெய்யப்பட்டு, மாணவியின் கடிதத்தின் அடிப்படையில் விசாரணை நடந்துவருவதாகத் தெரிவித்தார்.

மேலும், மாதவிடாய் குறித்த ஆசிரியர் திட்டியதாக கூறப்படும் தகவலை உறுதிப்படுத்த முடியவில்லையென்றும் அவர் கூறினார்.

பிற செய்திகள்:

BBC Tamil
English summary
A 12-year-old school girl has committed suicide after her teacher scolded her over periods issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X