For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொலம்பஸ்.. கொலம்பஸ்.. விட்டாச்சு லீவு.. பசங்க பின்னாடி ஓடி உடம்பெல்லாம் நோவு!

Google Oneindia Tamil News

சென்னை: காலாண்டு பரிட்சை முடிந்து லீவு விட்டுட்டாங்க... பசங்க ஒருபக்கம் சந்தோஷமாக ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள், இன்னொரு பக்கம் பெற்றோர் எப்படா இந்த லீவு முடியப் போகுது என்று இப்போதே காலண்டரை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

ஏதாவது கலவரம் பத்தின செய்தியை டிவியில் பார்த்தால், "இதனால் அந்த பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது" என்று சொல்லுவாங்க இல்லே. அந்த மாதிரி இருக்கு இப்போ பலரோட வீட்டு நிலைமை. வெச்சது வெச்ச இடத்தில் இல்லை. வீடே தலைகீழாக இருக்கிறது. கீழடி ஆய்வில் 2600 ஆண்டுகளுக்கு முந்தைய பொருட்கள் எல்லாம் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. எங்கள் வீட்டில் பல ஆண்டுகளுக்கு முன்பு திடீரென மாயமாகிப் போன பொருட்கள் எல்லாம் இப்போது கிடைக்க ஆரம்பித்திருக்கின்றன. எதையோ தேடப் போய், பரணில் இருந்தும், ஸ்டோர் ரூமில் இருந்தும் பல பொக்கிஷங்கள் எட்டிப் பார்க்கின்றன.

ஒரு குழந்தை இருக்கும் வீடுகளில் நிலைமை கொஞ்சம் கட்டுக்குள் இருப்பதாக நண்பர்கள் சொல்கிறார்கள். இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் இருக்கும் இடங்கள்தான் அதிகம் அல்லோலகல்லோலப்படுகின்றன. இதுபோதாதென்று நண்பர்களையும் வீட்டிற்கு வர வைத்துவிடுகிறார்கள். அதுக்கு அப்புறம் வீடே மினி ஸ்டேடியம் அல்லது தியேட்டர் மாதிரி மாறிவிடுகிறது. இவர்கள் போடும் கூச்சலில் கூரை பிய்த்துக்கொண்டு போய்விடும் போலிருக்கிறது.

 உச்சி வெயில் வரைக்கும்

உச்சி வெயில் வரைக்கும்

இது பரவாயில்லைங்க, நாலு பசங்களோட சேர்ந்து விளையாடி சந்தோஷமாக இருந்தா தப்பே இல்லை. நாங்க கூட அந்த காலத்துல லீவு விட்டா பேட்டை தூக்கிட்டு கிரவுண்டுக்கு போய் உச்சி வெயில் வர வரைக்கும் விளையாடுவோம். அதேபோல சாயந்திரமும் தெருவிலேயேதான் கிடப்போம். ஆனா இப்போ எங்க வீட்டுல பசங்க செல்போனே கதி என்று கிடக்கிறார்கள் என்று நிறைய பெற்றோர்கள் குறைபட்டுக் கொள்கிறார்கள். காலையில் கண்விழித்ததும் செல்போன் எனும் மாய உலகத்திற்குள் நுழையும் அவர்களை, அவ்வளவு சுலபமாக வெளியில் இழுத்து வர முடிவதில்லை. அப்படியே வெளியில் வந்தாலும், உடனே டிவி எனும் மாய உலகிற்குள் என்ட்ரி கொடுத்துவிடுகிறார்கள். ஓடி, ஆடி விளையாடுவது என்பது சுத்தமாக இல்லை.

பெற்றோர்கள் படுத்தும் பாடு

பெற்றோர்கள் படுத்தும் பாடு


இவர்களை ஆக்டிவாக வைக்கிறேன் பேர்வழி என்று நிறைய பெற்றோர்கள் ஏதாவது ஒரு விடுமுறை வகுப்பில் சேர்த்துவிடுகிறார்கள். சம்மர் கேம்ப் மாதிரி இந்த 10 நாளுக்கும் காலாண்டு கேம்ப் எல்லாம் கொண்டு வந்துவிட்டார்கள். டிராயிங் கிளாஸ், ஸ்மிங் கிளாஸ், கிராஃப்ட் கிளாஸ் என்று நீளமான பட்டியல் வாசிக்கிறார்கள். நாம இது போன்ற வகுப்புகளை தேடிப் போகாவிட்டாலும், காலையில் வரும் செய்தித்தாளுக்குள் ஒரு பிட் நோட்டீஸை சொருகி நம் கவனத்தை ஈர்த்துவிடுகிறார்கள். எனக்குத் தெரிந்த நண்பர்கள் பெரும்பாலும் ஏதாவது ஒரு வகுப்புக்கு பசங்களை அனுப்பிவிடுகிறார்கள். அந்த இரண்டு மணி நேரமாவது கொஞ்சம் நிம்மதியா இருப்போம் என்பதுதான் பலரின் பதில்.

கதையெல்லாம் போச்சு

கதையெல்லாம் போச்சு

முன்பெல்லாம் வீடுகளில் தாத்தா, பாட்டி இருப்பார்கள். லீவு விட்டால் பசங்களுக்கு உட்கார வைத்து கதை சொல்வார்கள். என் பாட்டி, எங்கள் குடும்பத்தில் நடந்த கதைகளை சுவாரஸ்யமாக சொல்வார். எங்க தாத்தா மிகப் பெரிய கஞ்சப்பிசினாரியாம். ஒருமுறை ரொம்ப தொந்தரவு பண்ணி கேட்டதால், சரி வா என்று சினிவாவுக்கு கூட்டிகிட்டு போனாராம். தியேட்டர் வரை கூட்டிகிட்டு போயிட்டு, அங்கு திரையரங்க வளாகத்தில் ஒட்டியிருந்த போஸ்டர்களை எல்லாம் காட்டிவிட்டு, இதையே தான் உள்ளேயும் காட்டுவான் அதுக்கு எதுக்கு பணத்தையும், நேரத்தையும் வீணாக செலவு செய்யனும் என்று சொல்லி திரும்ப வீட்டுக்கு கூட்டிகிட்டு வந்துட்டாராம். இப்படி மாமாவைப் பற்றி, அத்தையைப் பற்றி பாட்டி சொன்ன எங்கள் குடும்ப கதைகளே எக்கச்சக்கமாக இருக்கின்றன. நம்ம குடும்பத்தில் என்னல்லாம் நடந்திருக்கு என்பதை தெரிந்துகொள்ள இது பெரிதும் உதவியது.

டிவிதான் எல்லாமே

டிவிதான் எல்லாமே


இன்று தாத்தா, பாட்டிகள் எல்லாம் இல்லை. டிவிதான் எல்லாமே. நான் இந்த ஒரு வாரமா வீட்டில் சின்சானும், அங்கூஷும் தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ரிமோட்டை அவர்களிடம் இருந்து வாங்க, சாம, பேத, தான, தண்டம் என எதைப் பயன்படுத்தினாலும் பலன் அளிப்பதில்லை. அவர்களாக வெறுத்துப்போய் போட்டுவிட்டு போனால்தான் உண்டு. அதற்குள் நமக்கு டிவி பார்க்கும் மூடே போய்விடும்.

அரிதாகிப் போன விருந்தினர்கள்

அரிதாகிப் போன விருந்தினர்கள்

விருந்தினர்கள் வருகை என்பது இப்போதெல்லாம் அரிதாகிவிட்டது. அப்படியே யாராவது அத்திபூத்தார்போல வந்தாலும் அதிக நாட்கள் தங்குவதில்லை. அப்படி யாராவது வந்தால் குடும்பத்தோடு கூட்டமாக சினிவாவுக்கு போவது, சிட்டி மால்களில் சுற்றுவது என ஒன்றிரண்டு நாட்கள் இப்படி போய்விடும். மற்ற நாட்களில் டிவி, செல்போன், விளையாட்டு தவிர நம்ம பசங்க பெரிதாக ஒன்றும் செய்வதில்லை.

ஜப்பானிலும் இப்படித்தான்

ஜப்பானிலும் இப்படித்தான்

சரி, நம்ம ஊர்லதான் இப்படி இருக்குன்னா, மத்த இடங்களில் பசங்க என்ன பண்றாங்கன்னு தேடிப் பார்த்தேன். ஜப்பானில் விடுமுறை நாட்களை மாணவர்கள் எப்படி செலவிடனும்னு சில வழிமுறைகள் வெச்சிருக்காங்களாம். லீவு விட்டா வெயில் சுள்ளுன்னு முகத்தில் அடிக்கும் வரை, நல்லா இழுத்துப் போர்த்திக்கிட்டு தூங்குறது எல்லாம் ஜப்பானில் பண்ண முடியாதாம். காலையில் 6.30 மணிக்கு எல்லாம் அருகில் இருக்கும் பூங்காவுக்கு போய், அந்த நாட்டு ரேடியோல வர்ர காலை உடற்பயிற்சி நிகழ்ச்சிக்கு ஏற்ப கையை, காலை ஆட்டி உடற்பயிற்சி செய்யனுமாம். இப்படி வரும் சிறுவர்களுக்கு பூங்காவில் நடைபயிலும் பெரியவர்கள் சாக்லெட் கொடுத்து உற்சாகப்படுத்துவார்களாம். இதை Radio calisthenics என்று சொல்கிறார்கள். கிட்டத்தட்ட 100 வருஷமா இந்த வழக்கம் அங்கே நடைமுறையில இருக்காம்.

எத்தனை பூ பூத்தது

எத்தனை பூ பூத்தது

அதேபோல வீட்டு தோட்டத்தில் ஏதாவது ஒரு விதையை நட்டு, தினமும் தண்ணீர் ஊற்றி, அதன் வளர்ச்சியை நோட்டு பண்ணனுமாம். அது வளர்ந்து பூ பூக்கும் போது, எத்தனை பூ பூத்தது உள்பட எல்லா டீட்டெயிலையும் நோட் பண்ணி பள்ளி திறந்ததும் மிஸ் கிட்டே சொல்லணுமாம். பூக்களைப் போலவே பூச்சி வளர்க்கும் பழக்கமும் ஜப்பானில் இருக்கிறது. விடுமுறை நாட்களில் மாணவர்கள் ஏதாவது பூச்சியை பிடித்து ஜாடியில் அடைத்து அதற்கு தினமும் உணவு கொடுத்து அது எப்படி வளர்கிறது என்பதை கவனித்து வருவார்களாம். சிலர் இரண்டு, மூன்று பூச்சிகளை பிடித்து பூச்சி குடும்பத்தையே உருவாக்கிவிடுவார்களாம். வழக்கமான வீட்டுப் பாடத்திற்கு பதிலாக இதுபோன்ற விஷயங்களை ஜப்பானில் ஊக்குவிக்கிறார்கள்.

 நாமளும் செய்யலாமே

நாமளும் செய்யலாமே

நாமளும் இந்த மாதிரி எதையாவது நல்ல விஷயங்களை நம்ம பசங்களை செய்ய சொல்லலாம். சும்மா டிவி பார்த்து பொழுது போக்குவதை விட, இயற்கையோடும், பிற உயிர்களோடும் அதிகம் நெருங்கிப் பழகும்போது இந்த உலகம் எத்தனை அருமையானது என்பது அவர்களுக்கு ஆழமாகப் புரியும். வகுப்பறைகளில் கற்கும் பாடத்தை விட, விடுமுறையில் இப்படி உலகம் எனும் பரந்துபட்ட வகுப்பறையில் கற்கும் பாடம் தான் கடைசி வரைக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

- கௌதம்

English summary
School holidays are becoming big menace to parents.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X