For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குட்டீஸ்களுக்கு விட்டாச்சு லீவு.. 'செல்'லை விட்டு வெளியே வாங்க.. உலகம் சுற்றிப் பாருங்க.. !

பள்ளி மாணவர்கள் இரு சக்கர வாகனங்களை ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.

Google Oneindia Tamil News

சென்னை: பள்ளி மாணவர்கள் தங்களது கோடைவிடுமுறையை மகிழ்ச்சியாகவும், உபயோகமாகவும் அதே சமயம் பாதுகாப்பாகவும் கழிக்க திட்டமிட வேண்டும்.

பள்ளி விடுமுறை அறிவித்த உடனேயே இருக்கும் மகிழ்ச்சியும் பரபரப்பும், நாட்கள் செல்ல செல்ல மெல்ல மாணவர்களுக்கு குறைகிறதோ இல்லையோ, அவர்களை கட்டி மேய்க்கும் சில பெற்றோர்களின் திணறலை பார்க்கவே பாவமே இருக்கிறது.

அதேபோல, வீட்டில் வயதான பெரியவர்களின் குறைகள், அறிவுரைகளை கேட்க மனமில்லாத
மாணவர்கள் சில நேரங்களில் திடீர் என வீட்டிலிருந்து "எஸ்" ஆகி வெளியே செல்வதும் உண்டு. அதற்காக விடுமுறை கழிக்கிறேன் என்ற பெயரில் விளையாட சென்று பல்வேறு விபத்துகளில் உயிரிழந்து வருவதை ஜீரணிக்கவே முடியவில்லை. இது கடந்த சில தினங்களாகவே தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.

ஹீரோயிசம் காட்டும் வயதா?

ஹீரோயிசம் காட்டும் வயதா?

முதலில் பிள்ளைகளுக்கு எதற்கு பெற்றோர்கள் பைக் ஓட்ட அனுமதி தரவேண்டும்? சிறுவர்கள் ஓட்டி பழகும் பைக் என்று ஒன்று தனியாக நம் நாட்டில் கிடையாது. எல்லாமே 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கையாளக்கூடிய வாகனங்களே வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே பள்ளி மாணவர்களுக்கு பைக் வாங்கி தருவதையோ, அல்லது வீட்டிலுள்ள பைக்கை எடுத்து ஓட்டுவதற்கோ தடை போட வேண்டும். கால் ஊன்றமுடியாத சிறுவர்கள் எல்லாம் பைக் ஓட்டிக்கொண்டும் ஹீரோயிசத்தை காட்டிக் கொண்டும் இருந்தால் உங்கள் வீட்டுக்கு விபத்து அழையா விருந்தாளியாகதான் வந்து சேரும். அதிலும் பைக்கின் பின்புறத்தில் சம வயதுடைய பிள்ளைகளை வைத்துக் கொண்டு காட்டும் டபுள்ஸ் திறமையை பார்த்தால் வயிற்றில் புளியை கரைக்கிறது. சில பெற்றோர்கள் பிள்ளைகளின் வண்டி ஓட்டும் அழகை பார்த்து ரசித்து புளங்காகிதம் அடைவது வேதனையிலும் வேதனை. சிறுவர்கள் சைக்கிள் மட்டும் ஓட்டினால் போதுமானது-உடலுக்கும் பயிற்சி என்பதால் அதனை பெற்றோர் ஊக்குவிக்க வேண்டும்.

நீரில் மூழ்கும் மரணங்கள்

நீரில் மூழ்கும் மரணங்கள்

அதேபோல, வெயிலின் தாக்கம் காரணமாக, அல்லது நண்பர்களுடன் என்ஜாய் என்ற பெயரில் கடல், குளம், குட்டை, கண்மாய்களில் பள்ளி மாணவர்கள் குளிக்க செல்கின்றனர். இதனால் ஆழமான பகுதிகளில் அல்லது சேற்று பகுதிகளில் மாட்டிக்கொண்டு உயிரிழக்க நேரிடுகிறது.
துணையின்றி பிள்ளைகளை பெற்றோர் எந்த தைரியத்தில் குளிக்க அனுப்புகிறார்கள் என்று தெரியவில்லை. பெரும்பாலும் கிராமப்புற பகுதிகளில்தான் இதுபோன்ற உயிரிழப்புகள் நடைபெறுகிறது. நண்பர்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து குளிக்க செல்கிறார்கள் என்றே வைத்துக்
கொள்வோம். அதில் கண்ணெதிரே ஒருவன் நீரில் சிக்கி உயிருக்கு போராடும்போது, சக வயதுள்ளவர்களின் மனநிலைமை என்னவாக இருக்கும்? பதட்டம், பயம், தவிப்பு, இதெல்லாம் ஏற்படாதா? சேற்றிலோ அலையிலோ சிக்கி தவிப்பனை தன் பிஞ்சு கைகளால் எப்படி எதிர்கொண்டு போராடி அவனை மீட்டு வர முடியும்? எனவே மாணவர்கள் கூடுமானவரை பெரியவர்களின் துணையோடு குளிக்கவோ அல்லது நீச்சல் பழகவோ செல்வது நல்லது.

செல்போனே கதியா?

செல்போனே கதியா?

ஆபத்தான வழிகளில் பொழுதை கழிக்காமல் பயனள்ள வழியில் கழிக்க வழிகளை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். எப்போது பார்த்தாலும் கையில் பின்னி பிணைந்திருக்கும் செல்போனுடனே ஒன்றிக்கொண்டிருப்பதை தவிர்க்க வேண்டும். காலையில் தூங்கி எழுந்ததிலிருந்து உறங்கும்வரை கண்ணெதிரிலேயே, கையிடுக்கின் உணர்விலிலேயே செல்போன் பட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்று நினைப்பது தவறானது. எனவே கூடுமானவரை தெருவில் இறங்கி, கிரிக்கெட், வாலிபால் போன்ற விளையாட்டுக்களை விளையாடினால் உடம்புக்கு புத்துணர்ச்சி தரும். ஏதாவது ஒரு பயிற்சி வகுப்பு அதாவது இசை கருவிகள் வாசிப்பது, படங்கள் வரைவது என ஏதாவது ஒன்றில் சேர்ந்து திறமையை வளர்த்துக் கொள்ளலாம்.

வெளிஉலகமே ஆசிரியர்கள்

வெளிஉலகமே ஆசிரியர்கள்

அதேபோல, தனிமனித ஆளுமை வளர்த்து கொள்ள வேண்டும். தன்னந்தனியாகவே பக்கத்து தெரு, பக்கத்து கிராமம், கடைகள் என போக பழக வேண்டும். சில பெற்றோர்கள், "என் பிள்ளை வீடு விட்டால் பள்ளி, பள்ளி விட்டால் வீடு என்றிருப்பான்" என்பார்கள். இவர்களுக்கு பரிதாபத்தை தவிரவேறெதுவும் உதிர்ப்பதற்கில்லை. வெளி உலகம்தான் பிள்ளைகளின் ஆசிரியர்கள். நடப்புகள், செயல்பாடுகள், இயற்கையின் அழகு, எல்லாமே தெரிந்துகொள்வதுடன் அரிய தகவல்களையும் பெற மாணவர்கள் தனித்துவமாக சென்று வர பயில வேண்டும். வகுப்பறை கல்வியையும் தாண்டி வெளி உலகை உணர்ந்து அறிந்து கொள்வது அவசியம்.

வெள்ளைக்காரனே பயந்தான்

வெள்ளைக்காரனே பயந்தான்

பூமிப்பரப்பின் நிலநடுக்கோட்டிற்கு அருகில் வாழ்கிறோம் என்பதால் வெயிலின் தாக்கம் நம்மை கோடை காலங்களில் அதிகமாகவே பாதிக்கிறது. இதனால், அம்மை, மஞ்சள் காமாலை போன்ற கொடிய நோய்கள் வரக்கூடும் என்பதால்தான் ஆங்கிலேயர் காலத்திலிருந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்தியர்களிடம் எதைக்கண்டும் அஞ்சி ஓடாத வெள்ளைக்காரன்கூட, நமது நாட்டில் பரவியிருந்த அம்மை நோயை கண்டு நடுங்கிப் போனானாம். தகிக்கும் கோடையில் குழந்தைகளுக்கு அம்மையும், உடற்சூடும், கொப்புளங்களும் வந்து அவதிப்படுவதை தடுக்கவே இந்த விடுமுறை திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே வெயிலில் அதிக நேரம் விளையாடாமல் உடல் நலனை பார்த்துக் கொண்டால்தான் அடுத்த கல்வியாண்டில் புத்துணர்வுடன் அடியெடுத்து வைக்க முடியும்.

உறவுகளின் வேர் தாத்தா-பாட்டி

உறவுகளின் வேர் தாத்தா-பாட்டி

இயந்திரத்தனத்தமான வாழ்க்கையில் நாம் தொலைத்து கொண்டிருக்கும் பொக்கிஷமான உறவு தாத்தாவும்-பாட்டியும். பாசம், பரிவு, அக்கறை, கலாச்சாரம், ஆரோக்கியம், வாழ்வியல் முறை என்று வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் செயல்முறை கற்பிக்கும் பல்கலைக்கழகம்தான் இவர்கள் இருவரும். இவர்களுடனான உறவு கோடை விடுமுறையிலேயேதான் வளரும் - தழைக்கும். குடும்ப உறவுகளை மேம்படுத்திக்கொள்ள தாத்தா-பாட்டி மற்றும் உறவினர்களுடன் இனிமையான நெருக்கத்தை மாணவர்கள் ஏற்படுத்தி கொண்டால் பந்தத்தின் அருமை உங்களுக்கு தெரிவதுடன், வாழ்க்கையின் உயிர்ப்பின் வலிமையும் உங்களுக்கு அப்போது புரியும்.

English summary
School students should not be wandering in the sun since the summer season. Likewise, driving the bike and not going to bathe in the ponds. Useful procedures should be selected for the holiday season. Spending time with grandparents in the home and joining in a training class should develop skills. It's good to play sports like cricket.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X