For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எலும்பை உருக்கும் வெயில்.. குளுமையை அள்ளித் தரும் கோடைவாசஸ்தலங்கள்.. தேடி ஓடும் மக்கள்!

கோடைவாசஸ்தலங்களில் ஏராளமான சுற்றுலாபயணிகள் இயற்கையை கண்டு ரசித்து வருகின்றனர்.

Google Oneindia Tamil News

சென்னை: மண்டையை பிளக்கும் வெயிலிருந்து தப்பித்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கோடைவாசஸ்தலங்களை நோக்கி படையெடுத்துள்ளனர்.

தமிழகத்தில் தற்போது கோடை வெயில் தீயாய் வாரி இறைத்து வருகிறது. இதில் பல மாவட்டங்களில் வெயில் அளவு அனைவருக்கும் தினசரி பீதியை கிளப்பி கொண்டிருக்கிறது. கடந்த மாதம் முதலே, எதற்கும் அஞ்சாத சிங்கங்கள்கூட கண்ணைகூசும் வெயிலை பார்த்து பயந்து வீட்டுக்குள் முடங்கி கிடந்தனர்.

இந்நிலையில், பிள்ளைகளுக்கு கோடை விடுமுறை தொடங்கியுள்ளதையடுத்து குளு குளு இயற்கை சூழலை அனுபவிக்க கடந்த மார்ச் மாத இறுதியிலேயே பொதுமக்கள் மும்முரமாகிவிட்டனர். தமிழகத்தின் முன்னணி சுற்றுலா தளங்களான ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு மற்றும் ஏலகிரி என படையெடுத்து வரத் தொடங்கிவிட்டனர்.

உதகை

உதகை

தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை மலைகளின் ராணி வரவேற்க தொடங்கவிட்டாள். உதகையின் பசுமையும், இயற்கையின் பிரமிப்பும், வீசும் குளிர் காற்றும், மலர்ந்து சிரிக்கும் பூக்களும் சுற்றுலா பயணிகளை குதூகலத்தில் ஆழ்த்தி வருகிறது. தற்போது அங்கு சீசன் வேறு தொடங்கிவிட்டதால், அரசு தாவரவியல் பூங்காவில் காலை நேரங்களிலேயே கூட்டம் அலைமோதுகிறது.

அதேபோல், ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மலைசிகரம், பைக்காரா அணை, பைக்காரா நீர்வீழ்ச்சி உள்ளிட்ட இடங்களை கண்டு பயணிகள் கண்களை அகல விரித்து ரசிக்கின்றனர். இக்காட்சிகளை பெரும்பாலானோர் புகைப்படங்களாகவும், செல்பிகளாகவும் எடுத்தும், அதனை தங்களது வாட்ஸ்அப், பேஸ்புக் என அனைத்திலும் பகிர்ந்தும் மகிழ்கின்றனர்.

குன்னூர்

குன்னூர்

இதேபோல, குன்னுரில் உள்ள சிம்ஸ்பூங்காவில் அழகிய மலர்ப்படுகைகள், அரிய வகை மூலிகைகளின் ரம்மியமான சூழலில் மலைரயிலில் பயணித்தபடி இயற்கையை ரசிக்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் மலை ரயிலுக்கு டிக்கெட் பெற சுற்றுலா பயணிகளிடையே போட்டாபோட்டி நிலவுகிறது. இந்நிலையில் மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே கடும் வாகன போக்குவரத்து நெரிசல் தினந்தோறும் ஏற்பட்டு வருகிறது.

கொடைக்கானல்

கொடைக்கானல்

வெயில், அனல், வேர்வையிலிருந்து அவதிப்பட்டு தம்மை நாடிவந்த சுற்றுலா பயணிகளுக்கு மலைகளின் இளவரசி குளிர்ச்சியை வாரி இறைத்து மகிழ்கிறாள். பிரையண்ட் பூங்காவில் பூத்துக் குலுங்கும் வண்ண மலர்கள், வெள்ளி நீர்வீழ்ச்சி, வட்டக்கானல் நீர்வீழ்ச்சி, பாம்பாறு நீர் வீழ்ச்சிகளின் அழகில் மயங்கிய இயற்கை விரும்பிகள் விதவிதமாக புகைப்படம் எடுத்து குதூகலமடைகின்றனர். ஆனால் இங்கு வரும் பயணிகளுக்கு அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்துதர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுகிறது.

வால்பாறை

வால்பாறை

வால்பாறை மலை பகுதியில் உள்ள ரொட்டிகடை அக்காமலை, சோலையார் டேம் பகுதியில் தேயிலை தோட்டங்களின் குளிர்ச்சியில் மனதை பறி கொடுத்த சுற்றுலா பயணிகள் இயற்கையை அனுபவித்து வருகின்றனர். அவர்களுடன் சமவெளிப் பகுதியில் வறட்சியால் நீரின்றி தவித்த பறவைகள், வால்பாறையில் தஞ்சமடைகின்றன. திரும்பும் திசையெல்லாம் பறவைகளின் கிரீச் என்ற சத்தம் சுற்றுலாபயணிகளுக்கு இரட்டிப்பு சந்தோஷத்தைகொடுத்துள்ளது.

ஏலகிரி

ஏலகிரி

தமிழகத்தில் வெயிலோ, மழையோ அதிகமாக காணப்படும் மாவட்டம் வேலூர்தான். வேலூரில் சதமடித்த வெயிலால் நொந்துபோன மக்கள், வெயிலை சமாளிக்க அருகே உள்ள ஏலகிரி மலை பகுதியில் குவிகின்றனர். அழகிய ஏரி பகுதி மற்றும் மூலிகை பூங்காக்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.

இந்த பிரதேசங்களில் எல்லாம் இனிவரும் நாட்களில் இப்போதிருப்பதை விட கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் போக்குவரத்து, வாகன நிறுத்தம், குடிநீர், அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க மாவட்ட நிர்வாகம் அனைத்து முயற்சிகளையும் செய்து கொடுத்து வருகிறது. குளுமை, இனிமை, புதுமை என தம்மை தேடிவரும் அனைவருக்கும் இந்த இயற்கை சுரங்கங்கள் எப்போதும் அள்ளி கொடுக்க தயங்கியதேயில்லை. வெயிலிருந்து தப்பித்து குளுமையை அனுபவிக்க நினைப்போர் ஒருமுறை இங்கெல்லாம் போய்ட்டு வரலாமே?

English summary
In Tamilnadu, the heat of the summer comes from the fire. Children have begun their summer holidays and are going in the hills to enjoy the gloomy natural environment. Tourist places in Nilgiris, Kodaikanal, Yelagiri, Valparai and Pollachi are coming in large numbers. The landscapes of the landscapes are enjoyed by them.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X