For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டாஸ்மாக் வசூல் ரூ. 40 லட்சம் கொள்ளை முயற்சி... பாதுகாவலர் கொடூரமாக வெட்டிக் கொலை

Google Oneindia Tamil News

சென்னை: டாஸ்மாக் பணத்தை கொள்ளையடிக்க நடந்த முயற்சியில் பாதுகாவலர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு மதுபானக் கடைகளில் வசூலாகும் பணம், முன்பு டாஸ்மாக் விற்பனையாளர்கள் மூலமாகவே வங்கியில் செலுத்தப்பட்டு வந்தது. ஆனால், அவ்வாறு கொண்டு செல்லும்போது, அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெற்றதால், வசூல் பணத்தை வங்கியில் செலுத்தும் பணி ரேடியல் கேஷ் மேனேஜ்மெண்ட்' என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணி புரிந்து வருகின்றனர்.

Security murdered in Sengundram

இந்நிலையில், அந்நிறுவன ஊழியர்களான அனகாபுத்தூர் தேவராஜ் நகரை சேர்ந்த மோகன்பாபு, ஆவடி மிட்னமல்லி எம்.ஆர்.நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ராஜேந்திரன் (54), அண்ணாநகர் நடுவாங்கரையை சேர்ந்த டிரைவர் வினேத்குமார் (32) ஆகியோர் நேற்று முன்தினம் காலை ஆவடி, அம்பத்தூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் வசூலான ரூ.40 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு, கொளத்தூர் செந்தில்நகரில் உள்ள மதுக்கடைக்கு சென்றனர்.

வசூல் பணத்தை பெறுவதற்காக மோகன்பாபு கடைக்குள் சென்றுவிட, பாதுகாவலர் ராஜேந்திரனும், டிரைவர் வினோத்குமாரும் காரில் இருந்துள்ளது.

அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத 3 பேர் கொண்ட கும்பல், ராஜேந்திரன் மீது மிளகாய்ப்பொடியைத் தூவியுள்ளனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த டிரைவர் வினோத்குமர் காரில் இருந்து இறங்கி ஓடியுள்ளார்.

பின்னர், மிளகாய்ப்பொடி கண்களில் பட்டதால், ராஜேந்திரனால் துப்பாக்கியை எடுத்து சுட முடியவில்லை. இதனை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அந்தக் கும்பல், அவரை தோள்பட்டை, கழுத்து, கை, மார்பு என பல்வேறு இடங்களில் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளனர். இதில், பலத்த காயமடைந்தார் ராஜேந்திரன்.

அதற்குள்ளாக அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் கார் அருகே கூடினர். இதனால், காரில் இருந்த ரூ. 40 லட்சத்தை எடுக்க முடியாமல் திருட்டு கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.

பின்னர் உடனடியாக படுகாயம் அடைந்த ராஜேந்திரனை, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து ராஜமங்களம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளைத் தேடி வருகின்றனர். போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் உத்தரவின் பேரில் அண்ணாநகர் போலீஸ் துணை கமிஷனர் ரூபேஸ்குமார் மீனா, வில்லிவாக்கம் உதவி கமிஷனர் தா.தனவேல் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

இந்தக் கொள்ளைக் கும்பலை பிடிப்பதற்காக இன்ஸ்பெக்டர்கள் கோபிநாத், சுந்தர், சண்முகம் ஆகியோர் தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகள் குறித்த முக்கிய துப்பு துலங்கி உள்ளதாக கூறியுள்ள போலீசார், விரைவில் அவர்களைக் கைது செய்வோம் எனத் தெரிவித்துள்ளனர்.

பரபரப்பான சாலையில் நடந்த கொள்ளை முயற்சியில் பாதுகாவலர் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் உறையச் செய்துள்ளது.

English summary
Near Red hills in Chennai, a security was brutally murdered by some unknown persons, when he tried to stop money loot.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X