For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக ஆட்சியாளர்கள் ஜனநாயகத்தை துகிலுரிக்கும் துச்சாதனர்கள்.. சீமான் கைதுக்கு பெ. மணியரசன் கண்டனம்

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கைதுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை; நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கைதுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.

சென்னை-சேலம் இடையே அமைக்கபட உள்ள 8 வழி பசுமை சாலை திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதுகுறித்து கருத்து கேட்பதற்காக கூமாங்காடு என்ற இடத்திற்கு சீமான் சென்றபோது, அவரை போலீசார் கைது செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Seeman Arrest: Pe Maniyarasan condemns TN government act on this issue

இந்த நிலையில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் இதற்கு கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மற்றும் அக்கட்சித் தோழர்கள் இன்று (18.07.2018) சேலம் மாவட்டம் பாரப்பட்டி ஊராட்சி - கூமாங்காடு கிராமத்தில் கைது செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. கூச்ச நாச்சமின்றி ஆட்சியாளர்களும் காவல்துறையினரும் சனநாயகத்தின் துகிலுரிந்து நவீன துச்சாதனர்கள் ஆகியுள்ளார்கள்.

ஏற்கெனவே ஒரு வழக்கில் மதுரையில் காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு அது முடிந்த நிலையில் அடுத்த வழக்கில் சேலத்தில் கையொப்பமிட்டு நிபந்தனை பிணையில் உள்ள சீமான், தம் இயக்கத் தோழர்களுடன் ஒரு கிராமத்திற்கு சென்று அம்மக்களின் துன்ப துயரங்கள் பற்றி விசாரித்துக் கொண்டிருந்த போது காவல்துறை அவர்களைத் தளைப்படுத்தியிருக்கிறார்கள்.

30/2 என்ற ஒழுங்குமுறைச் சட்டம் செயல்பாட்டில் இருப்பதாகவும் அதனால் அக்கிராமத்தில் சிலருடன் கூடிப் பேசிக் கொண்டிருந்தது குற்றம் என்றும் கூறி காவல்துறையினர் சீமான் அவர்களையும் மற்ற தோழர்களையும் தளைப்படுத்தியுள்ளார்கள்.

ஒலிப்பெருக்கி வைத்துப் பொதுக் கூட்டம் நடத்தவும் ஊர்வலம் நடத்தவும் முன் கூட்டியே காவல் துறையிடம் அனுமதி பெற்று நடத்த வேண்டும் என்று நிபந்தனை விதிக்கும் ஒழுங்குமுறைச் சட்டம் தான் 30/2 சட்டம்! அது தடைச்சட்டம் அன்று! சேலம் மாவட்டத்தில் 144 தடைச்சட்டமும் பிறப்பிக்கப்படவில்லை. இந்நிலையில் கிராம மக்கள் சிலருடன் சீமான் கலந்துரையாடியதற்காக அவரைத் தளைப்படுத்தியது சட்ட விரோதச் செயலாகும்.

சேலம் எட்டு வழிச் சாலையால் பாதிக்கப்பட்ட மக்கள் சிலரிடம் திரு. சீமான் கலந்துரையாடியிருந்தால் அது ஒன்றும் குற்றச் செயல் அல்ல. அது சட்டபடியான செயலே!

மக்கள் உரிமைகளைக் காக்க சனநாயக வழியில் போராடுவோர்க்கு எதிராக பழிவாங்கும் நோக்கில், ஒரு நபர் மீது 80 வழக்கு - 90 வழக்கு என்று போடுவது, கண்மூடித்தனமாகக் குண்டர் சட்டம் போடுவது, தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை ஏவுவது போன்ற நடவடிக்கைகளைத் தமிழ்நாடு ஆட்சியாளர்கள் கையில் எடுத்துள்ளார்கள். இவை அனைத்தும் இந்திய அரசமைப்புச் சட்ட உறுப்பு 19 வழங்கும் அடிப்படைக் கருத்துரிமைகள், கூட்டம் கூடும் உரிமைகள், சனநாயக வழியில் போராட்டம் நடத்தும் உரிமைகள் ஆகியவற்றைப் பறிக்கின்ற செயல்களாகும்.

அரசமைப்புச் சட்டம் வழங்கும் இந்த உரிமைகளைப் பறிக்க ஆட்சியாளர்களுக்கு அதிகாரம் இல்லை. சட்டத்திற்குப் புறம்பான ஓர் ஏதேச்சாதிகார ஆட்சியை இந்திய ஆட்சியாளர்களும் தமிழ்நாட்டு ஆட்சியாளர்களும் இணைந்து நடத்தி கொண்டிருக்கிறார்கள். நீதித்துறை இவர்களின் சட்டவிரோதச் செயல்களை அங்கீகரிப்பது அதிர்ச்சியாக இருக்கிறது.

சனநாயக நிறுவனங்களை அதிகாரத்தில் உள்ள தனிநபர்களின் சேவை மையங்களாக மாற்றக் கூடாது. காவல்துறையை அதிகாரத்தில் உள்ளவர்களின் விருப்பு வெறுப்புக்கேற்ற கைத்தடி அமைப்பாக மாற்றக் கூடாது.

தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் தனிநபர் சார்ந்த விருப்பு வெறுப்பு அடிப்படையில் அதிகாரத்தைப் பயன்படுத்துவதைக் கைவிடவேண்டும். எட்டுவழிச் சாலை உட்பட அரசின் எந்தத் திட்டத்தையும் விமர்சிக்க - சனநாயக வழியில் எதிர்க்க - அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமையைப் பறிக்கக் கூடாது. அவ்வாறு ஆட்சியாளர்கள் பறித்தால் - சனநாயகம் காக்க மக்கள் அறப்போராட்டம் நடத்தித் தான் உரிமைகளை மீட்க வேண்டும்!

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் உள்ளிட்டவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும் பழிவாங்குவதற்காகப் பலர் மீது போடப்பட்டுள்ள பலப்பல வழக்குகளையும் கைவிட வேண்டும் என்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன், இவ்வாறு அறிக்கையில் பெ. மணியரசன் குறிப்பிட்டுள்ளார்.

English summary
Seeman Arrest: Pe Maniyarasan condemns TN government act on this issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X