For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாஸ்போர்ட்டில் இந்தி.. இந்திய ஒருமைப்பாட்டுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்.. சீமான் வார்னிங்

பாஸ்போர்ட்டில் இந்தி திணிக்கப்பட்டுள்ளது என்பது இந்திய ஒருமைப்பாட்டுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலைத் தரும் என்று சீமான் எச்சரித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: பாஸ்போர்ட்டிலும் இந்தித் திணிக்கப்பட்டு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் இந்தியக் கட்டமைப்புக்கும், ஒருமைப்பாட்டுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலைத் தரும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடவுச்சீட்டு சட்டத்தின் ஐம்பதாமாண்டு நிறைவு விழாவையொட்டி டெல்லியில் நடைபெற்ற விழாவில் பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சிவராஜ், இனி கடவுச்சீட்டில் ஆங்கிலத்தோடு இந்தியும் கட்டாயமாக இடம்பெறும் என அறிவித்திருக்கிறார்.

இவ்வறிப்பானது நாடு முழுக்க வாழும் பல்வேறு தேசிய இன மக்களிடையே பெரும் அதிர்வலையையும், கடும் எதிர்ப்பினையும் ஏற்படுத்தியிருக்கிறது.

வேற்றுமையில் ஒற்றுமை

வேற்றுமையில் ஒற்றுமை

இந்தியா என்பது பல்வேறு மொழிவழி தேசிய இனங்கள் சங்கமித்து வாழும் ஓர் ஒன்றியமாகும். இதில் ஒவ்வொரு தேசிய இன மக்களும் தங்களது தனித்த அடையாளத்தோடும், தங்களுக்கே உரித்தான வாழ்வியலோடும், நீண்ட நெடிய பண்பாட்டுக்கூறுகளோடும், பாரம்பரிய மரபுகளோடும், முன்னோர்கள் தோற்றுவித்த தம்மின விழுமியங்களோடும் வாழ்ந்து வருகின்றனர். அவையாவற்றையும் சிதைத்து அழித்து ஒற்றை ஆட்சியை நிறுவி, அகண்ட பாரதத்தை நிறுவ நீண்ட நெடும் முயற்சிகளைப் பன்னெடுங்காலமாக இந்துத்துவா தலைமைப் பீடங்கள் முன்னெடுத்து வருகின்றன.

பாஜகவின் காட்டாட்சி

பாஜகவின் காட்டாட்சி

தற்போது அதற்குச் செயல்வடிவம் கொடுக்கக் கங்கணம் கட்டிக்கொண்டு திரியும் பாஜக அரசானது, வலுக்கட்டாயமாக இந்தியைத் திணிக்கும் கண்மூடித்தனமான காட்டாட்சி முறையைக் கடைபிடித்து வருகிறது. அதற்கான முன்முயற்சியாகவும், முன்னோட்டமாகவும் எல்லாத் துறைகளிலும் மெல்ல மெல்ல இந்தித் திணிப்பை அரங்கேற்றி வந்த பாஜக அரசானது, அதன் நீட்சியாகத் தற்போது கடவுச்சீட்டிலும் இந்தியைச் சேர்க்க இருப்பதாக அறிவித்திருக்கிறது.

முன்னேற்றத்திற்கு நன்மை தராது

முன்னேற்றத்திற்கு நன்மை தராது

பல்வேறு மொழிகள் பேசப்படும் ஒரு நாட்டில் ஒற்றை மொழிக்கு முக்கியத்துவமும், முன்னுரிமையும் அளித்து அதனை நிலைநிறுத்த முயற்சிப்பது என்பது இந்நாடு ஏற்றிருக்கிற கூட்டாட்சித் தத்துவத்திற்கும், இந்நாட்டில் நிலவுகிற பன்மைத்துவத்திற்கும் ஊறு விளைவிப்பதாகும். இந்தியைத் திணிப்பதால் அது இந்நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் துளியளவும் நன்மை பயக்காது.

இந்தியக் குடிமகன்

இந்தியக் குடிமகன்

மாறாக, தேசிய இன மக்களிடம் இந்தி மீது எதிர்ப்புணர்வையும், இந்தியா மீது வெறுப்புணர்வையும் உருவாக்க நேரிடும். கடவுச்சீட்டு என்பது இந்திய விமான நிலையங்களிலும், வெளிநாட்டு விமான நிலையங்களிலும் தங்களை இந்திய நாட்டின் குடிமகனாக அடையாளப்படுத்திக்கொள்ள ஏதுவாக உருவாக்கப்பட்டதாகும்.

ஆங்கிலம் போதும்..

ஆங்கிலம் போதும்..

அவற்றில் இடம்பெற்றிருக்கும் இணைப்பு மொழியான ஆங்கிலமே அவ்வகை அடையாளப்படுத்தலுக்குப் போதுமானதாக இருக்கிறது. அப்படியிருக்கையில், எதற்காக அவற்றில் இந்தியைச் சேர்க்க வேண்டும்? இந்தியின் தேவை அதில் எங்கு இருக்கிறது? தங்களது இந்துத்துவா ஆட்சியை உலகிற்கு வெளிக்காட்டவேயன்றி வேறு எதற்காக இந்தித்திணிப்பு அரங்கேற்றப்படுகிறது?

பிரிவினைவாதத்திற்கு வழி வகுக்கும்

பிரிவினைவாதத்திற்கு வழி வகுக்கும்

வெளிநாட்டிற்குப் பிழைக்கச் சென்று அங்குள்ள நிறுவனங்களால் ஏமாற்றப்பட்டுத் தாயகம் திரும்ப முடியாது தவிக்கும் எண்ணற்ற இந்தியக் குடிமக்களின் பிரச்சினைகளே இன்னும் தீர்க்கப்படாத சூழலில் இந்திய வெளியுறவுத்துறையானது அவற்றையெல்லாம் விட்டுவிட்டு எதற்காக இந்தித்திணிப்பில் கவனம் செலுத்துகிறது? ஏற்கனவே, நெடுஞ்சாலை மைல் கற்கள், மத்திய அரசின் விளம்பரங்கள், கல்விக்கூடங்கள் என யாவற்றிலும் இந்தியை வலுக்கட்டாயமாகத் திணித்துக் கொண்டிருக்கும் மத்திய அரசானது கடவுச்சீட்டிலும் திணிக்க முற்படுவது முற்றுமுழுதாகச் சனநாயகத்திற்கு எதிரானது; பிரிவினைவாதத்திற்கு வழிவகுப்பதாகும்.

பிரிவினை வாதம்

பிரிவினை வாதம்

ஆட்சி மொழி, அதிகார மொழி, பண்பாட்டு மொழி, பயன்பாட்டு மொழி, வழக்காட்டு மொழி என எல்லாவற்றிலும் புறக்கணிக்கப்பட்டுச் சிதைந்து அழிகிற நிலையிலிருக்கிற அன்னைத் தமிழைக் காக்க நாங்கள் முன்னெடுக்கும் முன்முயற்சிகளுக்கு ‘பிரிவினைவாதம்' எனப் பெயர் சூட்டிப் பழித்திடும் தேசப்பக்தர்களுக்கு இவ்வகை இந்தித்திணிப்பு முயற்சிகள் பிரிவினைவாதமாகப்படவில்லையா?

மொழி அரசியல்

மொழி அரசியல்

‘மொழியை வைத்து அரசியல் செய்கிறார்கள்' என எங்களைப் பார்த்து விரல்நீட்டும் பாஜகவின் தலைவர்களுக்கு இது மொழியை வைத்து அரசியல் செய்து ஆதிக்கம் செலுத்துவதாகப்படவில்லையா? மத்திய அரசின் இந்நடவடிக்கைகள் எல்லாம் தங்களது மொழி அடையாளத்தோடு நீண்ட நெடிய காலமாக நிலைத்து வாழும் இம்மண்ணின் பூர்வக்குடிகளுக்குச் செய்யும் துரோகம் என்ற உணர்வு மேலிடவில்லையா? இந்திய அரசியல் சாசனம் ஏற்றிருக்கிற கூட்டாட்சித்தத்துவத்திற்கும், சனநாயக மாண்புகளுக்கும் அவை எதிரானவை என்பது இன்னும் அறிவுக்கு எட்டவில்லையா? என நீளும் கேள்விகளுக்கான விடையை ஆட்சியாளர்கள் அறிந்திருந்தும் மௌனம் சாதிப்பதன் அரசியலை நம்மால் விளங்கிக் கொள்ள முடிகிறது.

அடிப்படை உரிமையில் தலையீடு

அடிப்படை உரிமையில் தலையீடு

இந்திய அரசியல் சாசனம் இந்நாட்டின் குடிமக்களுக்கு அளித்திருக்கும் அடிப்படை உரிமைகளில் தலையீடாது அவரவர் தன் மொழியைப் பேணிப்பாதுகாப்பதற்கும், பண்பாட்டைக் கடைப்பிடிப்பதற்கும், வாழ்வியலை விருப்பமான முறையில் அமைத்துக்கொள்வதற்கும், விருப்பமான உணவை உண்ணுவதற்கும் எவ்வித இடையூறும் அளித்திடாது மக்களின் நலனுக்குத் தேவையான ஆக்கப்பூர்வமான செயல்களிலும், நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான பணிகளிலும் மத்திய அரசு கவனத்தைச் செலுத்த வேண்டும்.

இத்தோடு நிறுத்திக் கொள்

இத்தோடு நிறுத்திக் கொள்

இத்தோடு, குடிமக்களின் உணர்வுக்கும், உரிமைக்கும் மதிப்பளித்து மத்திய அரசின் இந்தித்திணிப்பு நடவடிக்கைகளையும் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும். அதனைவிடுத்து, இந்தி மொழியை மீண்டும் மீண்டும் திணிக்க முற்படுவார்களேயானால் அது இந்திய நாட்டின் கட்டமைப்புக்கும், இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலைத் தரும் எனவும், சக தேசிய இனங்களை ஓர்மைப்படுத்தி மிகப்பெரும் போராட்டங்களை நாடு தழுவிய அளவில் முன்னெடுப்போம் எனவும் எச்சரிக்கிறேன்.

வங்கம் பிரிந்தது ஏன்?

வங்கம் பிரிந்தது ஏன்?

நமது அண்டை நாடான பாகிஸ்தான் தன் நாட்டு மக்களின் விருப்பத்திற்கு மாறாக உருது மொழியைத் திணித்ததன் விளைவாகத்தான் கிழக்குப் பாகிஸ்தான் பிரிந்து ‘வங்காளதேசம்' எனும் நாடு பிறந்தது என்பதனையும், அந்நிலை இந்நாட்டிற்கு ஏற்படாது பார்த்துக்கொள்ள வேண்டியது நாட்டை ஆளும் ஆட்சியாளர்களின் தலையாயக் கடமை என்பதனையும் நினைவூட்டுகிறேன். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

English summary
Naam Thamizhar leader Seeman has condemned Centre’s decision on hindi passport.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X