For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பொறையாறு பேருந்து பணிமனை விபத்துக்கு பொறுப்பற்ற ஆட்சியாளர்களே காரணம்- சீமான் சுளீர்

பொறையாறில் பேருந்து பணி மனை விபத்துக்குள்ளானதற்கு பொறுப்பற்ற ஆட்சியாளர்களே காரணம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: நாகை மாவட்டம் பொறையாறில் அரசு பணிமனை இடிந்து விழுந்து 8 பேர் பலியானதற்கு தமிழக அரசின் பொறுப்பற்ற செயலே காரணம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாகப்பட்டினம் மாவட்டம், பொறையாறிலுள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனை இடிந்து விழுந்து 8 பேர் உடல் நசுங்கி உயிரிழந்த செய்தியானது பெரும் அதிர்ச்சியினையும், ஆழ்ந்த மனவேதனையையும் அளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அவர்களது பெருந்துயரில் நானும் பங்கெடுக்கிறேன்.

 உயிரை பறிப்பது வெட்கக் கேடு

உயிரை பறிப்பது வெட்கக் கேடு

அரசுப்பேருந்துகளில் பணிபுரிகிற அரசாங்க ஊழியர்களான ஓட்டுனர்களும், நடத்துனர்களும் ஓய்வெடுக்கிற அரசுப்பணிமனையே இடிந்து விழுந்து ஊழியர்களின் உயிரைப் பறிக்கிறது என்பது எவ்வளவு பெரிய வெட்கக்கேடு என்பதை ஆளும் ஆட்சியாளர்கள் உணர வேண்டும். உலகெங்கும் அரசாங்கங்கள் நிர்வகிப்பவைதான் உயர் தரத்தோடும், அதிகப்படியான பாதுகாப்போடும் மேம்பட்டு விளங்குகிறது.

 ஆக்சிஜன் குடுவைகள்

ஆக்சிஜன் குடுவைகள்

ஆனால், இங்கு அரசுப்பள்ளிக்கூடம், அரசு மருத்துவமனை, அரசுப்பேருந்து, அரசுப் பணிமனை என அரசின் நிர்வாகத்தின் கீழ் வருகிற அத்தனையும் தரமிழந்து நிற்கிறது. அரசுப்பேருந்தின் ஓட்டை வழியே குழந்தை விழுந்து இறப்பதும், அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் குடுவைகள் இல்லாது நோயாளிகள் இறந்துபோவதும், அரசுப்பேருந்து நிலையம் இடிந்து விழுந்து உயிர்களைப் பறிப்பதும் மிகச் சாதாரணமாக நடக்கிறது. அதன் நீட்சியாகவே தற்போது பொறையாறில் அரசுப்பணிமனை இடிந்து விழுந்த கோரச்சம்பவம் நடந்தேறியிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

 பச்சைப் படுகொலை

பச்சைப் படுகொலை

ஒரே நேரத்தில் 8 உயிர்களைப் பலிகொண்ட இக்கொடுந்துயரினை வெறுமனே விபத்து எனக்கூறி கடந்து செல்ல முயன்றால் அது வன்மையானக் கண்டனத்திற்குரியது. இச்சம்பவமானது முழுக்க முழுக்க ஆட்சியாளர்களின் பொறுப்பற்றத்தன்மையினாலும், மக்கள் நலமின்மையினாலும் நிகழ்ந்த பச்சைப்படுகொலையாகும். அக்கட்டடமானது மோசமான நிலையில் இருக்கிறது எனப் பலமுறை புகாரளிக்கப்பட்டும் அவற்றின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத ஆளும் வர்க்கத்தின் அலட்சியமே 8 உயிர்களையும் காவு வாங்கியிருக்கிறது.

 பாதுகாப்பான நிலை

பாதுகாப்பான நிலை

ஒரு கட்டிடம் பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருக்கிறதென்றால் அவற்றினை ஆய்வு செய்து அதன் உறுதித்தன்மையையும், பாதுகாப்பான நிலையினையும் உத்திரவாதப்படுத்த வேண்டும். ஆனால், இப்பணிமனையானது கட்டப்பட்டு ஏறக்குறைய 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் அக்கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்து ஆராய்வதற்கோ, பழுதுகளை சீர்செய்வதற்கோ எவ்வித முன்முயற்சியையும் அரசு தரப்பிலிருந்து எடுக்கவில்லை. பலமுறை அதுகுறித்த புகார் மனுக்களும், கோரிக்கை மனுக்களும் அதுதொடர்புடைய அதிகாரிகளுக்கு அனுப்பட்டப்பட்டபோதிலும் ஆளும் வர்க்கமானது அவர்களின் கோரிக்கையை செவிசாய்க்காது விட்டதே இன்றைக்குக் இக்கோரச் சம்பவம் நடந்தேறுவதற்குக் மிக முக்கியக் காரணமாகியிருக்கிறது.

 5 பேர் உயிரிழப்பு

5 பேர் உயிரிழப்பு

இதேபோன்ற ஒரு சம்பவம் கடந்த மாதம் கோயம்புத்தூரில் நடந்தது. கோயம்புத்தூர் சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்துவிழுந்து பொதுமக்களில் 5 பேர் உயிரிழந்தனர். அச்சம்பவத்திற்குப் பிறகு அரசு விழித்திருந்தால்கூட இன்றைக்கு 8 உயிர்கள் அநியாயமாகப் பறிபோயிருக்காது.

 கொடுங்கோல் ஆட்சி

கொடுங்கோல் ஆட்சி

ஆனால், அதிகாரப்போதை தலைக்கேறிப்போன இக்கொடுங்கோல் ஆட்சியாளர்களுக்கு மக்களின் உயிரைப் பற்றி சிந்திக்கவெல்லாம் நேரம் எங்கிருக்கிறது? டெங்கு காய்ச்சல் சாவுகள் பெருகி மக்கள் திண்டாடிக்கொண்டிருக்கிற இவ்வேளையிலும் ஊர் ஊராய் சென்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடுகிற மகத்தான மக்கள் சேவகர்களாயிற்றே? பணத்தாசையும், பதவிவெறியும் பிடித்து மக்கள் நலனை மழித்துவிட்ட இவ்வாட்சியாளர்கள் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளவும், கட்சியினைக் காப்பாற்றவும்தான் துடிக்கிறார்களே ஒழிய, மக்களைப் பற்றியெல்லாம் மறந்தும்கூட சிந்திப்பதில்லை என்பதே தற்கால அரசியல் நிலையாகும்.

 ஏழைகளின் கண்ணீர்

ஏழைகளின் கண்ணீர்

ஆகவே, தரமற்றவர்களிடம் ஆட்சி அதிகாரத்தை அளித்துவிட்டு யாவும் தரமற்று இருக்கிறது என அழுது புலம்பிப்பயனில்லை என்பதை மக்கள் உணர்ந்து மாற்று அரசியலுக்கான தொடக்கத்திற்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என அறைகூவல் விடுக்கிறேன். ஏழைகளின் கண்ணீர் கூரிய வாளுக்கு ஒப்பாகும் எனும் பெருமகனார் நபிகள் நாயகம் அவர்களின் கூற்றுக்கிணங்க, மக்களை கண்ணீரும், செந்நீரும் சிந்தவிடும் இவ்வாட்சியும், அதிகாரமும் வீழ்ந்தொழிந்து மக்களுக்கான அதிகாரம் பிறக்கிற நாள் வெகுதொலைவில் இல்லை என்பதை ஆளும் ஆட்சியாளர்களுக்குக் காலம் உணர்த்தும் என்பதில் ஐயமில்லை.

 இழப்பீடு வழங்க வேண்டும்

இழப்பீடு வழங்க வேண்டும்

பொறையாறு அரசுப்பேருந்து பணிமனை விபத்திற்கு தகுதியற்ற கட்டிடத்தை மராமத்து செய்து பராமரிக்காது இவ்வளவு ஆண்டுகளாக விட்ட திமுக, அதிமுக எனும் இரு ஊழல் கட்சிகளின் அலட்சியமும், அக்கறையின்மையே காரணம் என்பதை மறைப்பதற்கில்லை. ஆகவே, இனியாவது அரசானது தமிழகம் முழுக்க இருக்கும் அரசாங்கக் கட்டிடங்களை ஆய்வுசெய்ய வல்லுநர் குழுவினை அமைத்து அதன் உறுதித்தன்மையை உத்திரவாதப்படுத்த வேண்டும் எனவும், இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்குத் தலா 50 இலட்சம் வீதம் இழப்பீடு வழங்கி, அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்கிட வேண்டும் எனவும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25 இலட்சம் வீதம் இழப்பீடு வழங்கி அவர்களின் மருத்துவச்செலவை அரசே ஏற்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

English summary
Naam Tamilar Movement leader Seeman condemns the ADMK goverment for Poraiyar Bus depot collapsing incident.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X