For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருமாவளவன் தலைக்கு விலையா? இந்துத்துவா வன்முறையாளர்கள் விலை கொடுக்க நேரும்: சீமான் கடும் எச்சரிக்கை

இந்துத்துவ வன்முறை வெறியாட்டங்களை தமிழ் மண்ணில் ஏற்படுத்த முயன்றால் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என சீமான் எச்சரித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    திருமாவளவன் தலைக்கு ரூ.1 கோடி.. கோபிநாத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்- வீடியோ

    சென்னை: திருமாவளவனுக்கு எதிராக மதவெறிக் கருத்துகளைப் பரப்பி வடஇந்தியாவில் நிகழ்த்தி வரும் இந்துத்துவ வன்முறை வெறியாட்டங்களை தமிழ் மண்ணில் ஏற்படுத்த முயன்றால் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என நாம் தமிழர் கட்சியின் சீமான் எச்சரித்துள்ளார்.

    இதுதொடர்பாக சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் மற்றும் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளையொட்டி விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பாகத் தலித் - இஸ்லாமியர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் திசம்பர் 6 அன்று சென்னையில் அதன் தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. இதில் உரையாற்றிய திருமாவளவன் அவர்கள் பாபர் மசூதி இடிப்பு தொடர்பாகத் தர்க்கரீதியான கருத்துகள் சிலவற்றை முன்வைத்தார். அக்கருத்துகள் யாவும் முழுமையாகத் திரிக்கப்பட்டு இந்துக் கோயில்களை இடிக்கச் சொன்னதாகத் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகிறது. இது வன்மையான கண்டனத்திற்குரியது.

    திருமாவளவனுக்கு சீமான் ஆதரவு

    திருமாவளவனுக்கு சீமான் ஆதரவு

    திருமாவளவன் பேசிய காணொளியின் முழுப் பகுதியையும் வெளியிடாமல் சில பகுதிகளை மட்டும் வெட்டி திருத்தி அதனைச் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருவதன் மூலம் மத அடிப்படைவாதிகளின் உள்நோக்கத்தையும், கயமைத்தனத்தையும் நாம் அறிந்துகொள்ளலாம். 10 ஆண்டுகளுக்கு முன்பு பெரியாரிய மேடைகளிலும், கம்யூனிச மேடைகளிலும் நான் பேசியதைக் கத்தரித்து அதனைத் தேர்தல் நேரத்தில் பரப்பி எனக்கு எதிராய் அவதூறு பரப்பியவர்கள் தற்போது திருமாவளவனுக்கும் அதனையே செய்கிறார்கள். கருத்தியலாகவும், அரசியலாகவும் வீழ்த்தத் திராணியற்றக் கோழைகள் தனது கையாலாகத்தனத்தின் விளைவாகக் கையாளும் ஆயுதம்தான் இதுபோன்ற இழிசெயல்களாகும். மதவெறிக்கு எதிராகச் சமரசமற்றுத் தொடர்ச்சியாகக் குரல்கொடுத்து வருகிற திருமாவளவனின் நற்பெயருக்குக் களங்கம் கற்பிக்க வேண்டும் என்கிற வன்மத்தோடே இவ்விதப் பரப்புரைகள் மேற்கொள்ளப்படுகிறது என்பது வெளிப்படையாகும்.

    இந்துத்துவத்தின் வேர்பரப்ப துடிப்பு

    இந்துத்துவத்தின் வேர்பரப்ப துடிப்பு

    இந்துக்கோயில்களை இடிக்க வேண்டும் என்கிற பொருள்பட எந்த இடத்திலும் அவர் பேசவில்லை. மாறாக, தர்க்கரீதியாகச் சில வாதங்களை முன்வைத்தார். ‘இராமர் கோவில் இருந்த இடத்தில்தான் பாபர் மசூதி கட்டப்பட்டது. எனவே, அதை இடித்துவிட்டு அங்கே மீண்டும் இராமர் கோயிலைக் கட்டப்போகிறோம் என வகுப்புவாதிகள் பேசுகின்றனர். இந்த வாதம் சரியென்றால் சிவன் கோயில்களையும், பெருமாள் கோயில்களையும் இடித்துவிட்டு, அங்கே மீண்டும் பவுத்த விகார்களைக் கட்டுவோம் எனக் கூறுவது சரியாக இருக்குமா?' என்கிற கேள்வியைத்தான் எழுப்பினார். இதில் எவ்வித மதவிரோதக் கருத்துகளும் இல்லை. இது ஒரு தர்க்கரீதியான, ஆய்வுக்குட்படுத்த வேண்டிய வாதம் அவ்வளவே! ஆனால் இதனை வேண்டுமென்றே ஊதிப் பெரிதாக்கி வகுப்புவாத கலவரங்களை ஏற்படுத்த முனைந்து அதன்மூலம் இந்துத்துவத்தின் வேர்பரப்பத் துடிக்கின்றன மதவாத அமைப்புகள்.

    எதிர்வினையை அறுவடை செய்வார்

    எதிர்வினையை அறுவடை செய்வார்

    இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள பாஜகவின் எச்.ராஜாவின் தேசிய செயலாளர் எச்.ராஜா அவர்கள், 'மயிலாடுதுறையிலும், கரூரிலும் விடுதலைச்சிறுத்தைகள் மேல் நிகழ்த்தப்பட்ட வன்முறையை நிகழ்த்துவோம்' என வெளிப்படையாக மிரட்டல் விடுத்திருக்கிறார். நாட்டையாளும் ஒரு கட்சியின் தேசிய செயலாளராகப் பொறுப்பு வகிக்கும் ஒருவர் மூன்றாம்தர மனிதரைப் போலத் தரம்தாழ்ந்து பேசி வருவது அவருக்கும், அவர் வகிக்கும் பொறுப்புக்கும் அழகல்ல! கருத்துகளை உதிர்க்கிறபோது பின்பற்ற வேண்டிய கண்ணியத்தையும், நாகரீகத்தையும் இனியாவது அவர் கற்றுக்கொள்ள வேண்டும் என அன்போடு அறிவுறுத்துகிறேன். மேலும், இதுபோன்ற கருத்துகளைத் தொடர்ந்து கூறி வருவாரேயானால் அதற்கான எதிர்வினையை விரைவில் அறுவடை செய்வார் என்பதனையும் இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தண்டிக்கப்பட வேண்டும்

    தண்டிக்கப்பட வேண்டும்

    திருப்பூரைச் சேர்ந்த இந்துத்துவ அமைப்பொன்று, திருமாவளவனின் தலைக்கு ஒரு கோடி ரூபாய் என அறிவித்துக் கொலைமிரட்டல் விடுத்திருக்கிறது. மதத்துவேச நஞ்சை கக்கும் இதுபோன்ற அமைப்புகள் உடனடியாகத் தடைசெய்யப்பட வேண்டும். மத நல்லிணக்கத்திற்கும், சமூக ஒற்றுமைக்கும் ஊறு விளைவிக்கும் வகையில் பிரிவினைவாதக் கருத்துகளைக் கூறும் இதுபோன்ற மத அடிப்படைவாதிகள் கடும் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும்.

    திருமாவுக்கு கண்டனம் கேலிக்கூத்து

    திருமாவுக்கு கண்டனம் கேலிக்கூத்து

    ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான கோயில்களை இடித்துத் தரைமட்டமாக்கி அங்குப் புத்த விகார்களை நிறுவிய இனப்படுகொலையாளன் ராஜபக்சேவைக் கண்டிக்கத் துப்பற்று அவனுக்குச் சிவப்புக்கம்பள வரவேற்பு அளித்து வரவேற்றவர்கள், திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்கு இருமுறை அழைத்துப் பூரணக் கும்ப மரியாதை அளித்தவர்கள், மத்திய பிரதேசத்தின் சாஞ்சியிலே புத்த விகாரைத் திறக்க சிறப்பு அழைப்பாளராக அழைத்தவர்கள் இன்றைக்குத் திருமாவளவனின் தர்க்கரீதியான வாதத்திற்குப் பொங்குவது என்பது வேடிக்கையானதாகும். தஞ்சாவூர் அருகே மானம்பாடி எனும் கிராமத்தில் இராசேந்திரசோழன் காலத்தில் திருப்பணி செய்யப்பட்ட நாகநாதசாமி கோயிலைத் தடயமே இல்லாத அளவுக்குத் தமிழக அறநிலையத்துறை அழித்தொழித்திருக்கிறது என்று யுனெஸ்கோ அண்மையில் அறிக்கை வெளியிட்டும் இன்றைக்குவரை அதுகுறித்து வாய்திறக்க மறுக்கிற பாஜக, அக்கோயில் இடிப்பினைக் கண்டித்து, அதனை மறுபுனரமைப்புச் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்த திருமாவளவனுக்குக் கண்டனம் தெரிவிப்பது கேலிக்கூத்தாகும்.

    மிகப்பெரிய விலையை கொடுக்கவேண்டும்

    மிகப்பெரிய விலையை கொடுக்கவேண்டும்

    திருமாவளவன் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மட்டும் அல்லர்! அவர் தமிழ்த்தேசிய இனத்தின் பெருமைமிகு ஆளுமைகளில் ஒருவர். ஒடுக்கப்பட்டுக் கிடக்கிற அடித்தட்டு மக்களின் உயர்வுக்காய் போராடுகிற தமிழினத் தலைவர்களில் முதன்மையானவர். அவர் மீது தொடுக்கப்படும் அவதூறுகளையும், அவருக்கு எதிரான வன்முறை பேச்சுகளையும் ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது. கருத்தியல்ரீதியிலும், அரசியல் முடிவுகளிலும் அவரோடு ஆயிரம் முரண்பாடுகள் இருக்கலாம். அதற்காக அவரோடு இருக்கிற உறவிலும், அன்பிலும் எங்களுக்கு எவ்வித மாறுபாடும் இல்லை. ஆகவே, திருமாவளவனுக்கு எதிராக மதவெறிக் கருத்துகளைப் பரப்பி வடஇந்தியாவில் நிகழ்த்தி வரும் இந்துத்துவ வன்முறை வெறியாட்டங்களைத் தமிழ் மண்ணில் செயல்படுத்த முயன்றால் அதற்கு மிகப்பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என மதத்துவேச அமைப்புகளை எச்சரிக்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    English summary
    NTK parti chief co ordinator Seeman condemns for the life threaten to Thirumavalavan. Seeman warned if the religion based violance accure in Tamil Nadu the hindu firms have to pay huge.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X