For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாயோன்தான் மாயாண்டி ஆனது... நானும் மாயாண்டி குடும்பத்து மகனே: சீமான் விளக்கம்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: முப்பாட்டன் முருகனைத் தொடர்ந்து கிருஷ்ணஜெயந்திக்காக முப்பாட்டன் மாயோன் பெருவிழா என நாம் தமிழர் கட்சியினர் சுவரொட்டிகள் ஒட்டியிருப்பது குறிப்பது அக்கட்சித் தலைவர் சீமான் விளக்கம் அளித்துள்ளார்.

சீமான் அளித்துள்ள விளக்கம்:

கிருஷ்ணரும் நம்முடைய மூதாதையர்தான். கண்ணன் என்ற பெயரே கிருஷ்ணராக மருவிவிட்டது. குறிஞ்சி நிலத் தலைவனாக முருகன் போற்றப்படுவது போல, முல்லை நிலத் தலைவனாக கண்ணன் போற்றப்படுகிறார்.

Seeman speaks on "Mayoon Peruvizha"

மாயோன் மேய காடுறை உலகு என்று தொல்காப்பியம் போற்றுகிறது. மருத நிலத் தலைவனாக இந்திரனும் நெய்தல் நிலத் தலைவனாக வருணனும் பாலை நிலத் தலைவியாக கொற்றவையும் போற்றப்படுகிறார்கள்.

ஐந்து நிலங்களில் பரவி வாழ்ந்த மக்கள் நாம். குறிஞ்சி நிலத் தலைவனைப் போற்றுவது போலத்தான், முல்லை நிலத் தலைவனையும் போற்றுகிறோம்.

மால் என்றால் கருப்பு. அது மரியாதைக்காக திருமால் என்று அழைக்கப்படுகிறது. பெரிய கருப்பன் என்று நாம் சொல்வதை அவர்கள் பெருமாள் என்கிறார்கள். முல்லை நில மக்கள் ஆடு, மாடு வளர்ப்போடு வேளாண்மையை முக்கியத் தொழிலாகக் கொண்டவர்கள். மழைதான் அவர்களுக்கு அடிப்படையாக இருந்தது. எனவே, கருப்பு மேகத்தை மாயோன் என்று அழைத்தார்கள். இதில் கருப்பு என்பது கண்ணன் என்று மாறிவிட்டது. கண்ணன் என்ற பெயரே காலப் போக்கில் கிருஷ்ணராக மாறியது.

ஆரிய பிராமணர்கள் இங்கு வரும்போது அவர்களுக்கு என எந்தக் கடவுளுமே இல்லை. இந்த நிலத்தில் இருந்துதான் அவர்களுக்கான கடவுள்களை எடுத்துக் கொண்டார்கள். விருமாண்டி படத்தைப் பற்றி தனியார் தொலைக்காட்சியில் பேசிய கமல்ஹாசன், ' தமிழ்க் கடவுள்கள் ஆரியமயமாக்கப்பட்டுவிட்டார்கள்' என்கிறார். அதுதான் உண்மை.

சிவன் கைலாய நாதர் ஆனதும் கொற்றவை பார்வதி ஆனதும் முருகன் சிவனுக்கு மகன் ஆனதும் இப்படித்தான். 'மாயோன் பெருவிழா' என்ற பெயரில் செஞ்சியில் கடந்த ஆண்டு விழா நடத்தினோம். பண்பாட்டை மீட்கும் போராட்டங்களை முன்னெடுக்கும்போது, இந்தப் பாதையில்தான் பயணித்துத் தீர வேண்டியிருக்கிறது.

தொல்குடி சமூகம் வணங்கிய தலைவனுக்கு நாங்கள் விழாவாகக் கொண்டாடுகிறோம். வழிவழியாக போற்றப்பட்டு வந்த ஒரு மரபைக் கொண்டாடாமல் இருந்தால்தான் தவறு. கிருஷ்ணர் என்று சமஸ்கிருதமாகப் பேசாமல், மாயோன் என்று தமிழில் சொல்லுங்கள். மாயாண்டி என்ற பெயர் மாயோன் என்ற வார்த்தையில் இருந்துதான் வருகிறது. நானும் மாயாண்டி குடும்பத்து மகன்தான்.

நம்முடைய முன்னோர்கள் முழுமையாக ஆய்வு செய்துவிட்டுத்தான் இதைக் குறிப்பிடுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட சாதி சமூகத்திற்கானவர் அல்ல மாயோன். அப்படித்தான் நம்முடைய தொல்குடிகளால் போற்றப்பட்டு வந்திருக்கிறார்.

கிருஷ்ண ஜெயந்தியாக பார்க்காமல் மாயோனாகப் பார்க்கிறோம். திருமுருகப் பெருவிழா நடத்துவது போலவே, மாயோன் பெருவிழாவை நடத்தி வருகிறோம். இதன்பின்னர், இந்திரன் பெருவிழா, கொற்றவையைக் கொண்டாடுவோம் என வரிசையாக நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம்.

கொற்றவையும் நம்முடைய பாட்டிதான். பாட்டி கொற்றவையையும் வேலுநாச்சியாரையும் மறந்துவிட்டு ஜான்சிராணியைப் பிடித்துக் கொண்டு சுற்றுகிறார்கள்.

திலகரைப் படித்துவிட்டு வ.உ.சியை மறந்துவிட்டோம். பண்பாட்டுத் தளத்திலும் தமிழனை மீட்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. ' தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை அளிக்கப்பட வேண்டும்' என்று நான் சொன்னபோது, ' திருமலை நாயக்கரும் அதேநாளில்தான் பிறந்தார்' என்றார் ஜெயலலிதா. ' சரி... கொண்டாடிவிட்டுப் போங்கள்' என்று சொல்லிவிட்டோம்.

முருகன் நம் முப்பாட்டன் என்று நான் சொன்னபோது கேலி செய்தார்கள். அதுவே, ' கொஞ்சம் தேநீர் நிறைய வானம்' கவிதைத் தொகுதியில் முருகனை முப்பாட்டனாகச் சொல்கிறார் வைரமுத்து. அவரை யாரும் கேலி செய்யவில்லையே? எல்லாவற்றையும் வேண்டாம் என்று விட்டுவிட்டால் நான் யார் என்பதே தெரியாமல் போய்விடும்.

வேரை இழந்த மரமும் வரலாற்றை மறந்த இனமும் வாழாது என்பதுதான் எதார்த்தமான உண்மை.

இவ்வாறு சீமான் விளக்கம் அளித்துள்ளார்.

English summary
Naam Thamizhar Party leader Seeman explain why his party celebrating Maayoon Peruvizha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X