For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தாய்மொழியைக் காக்க மீண்டும் ஒரு மொழிப்போருக்குத் தமிழகம் தயாராக வேண்டும் – சீமான்

Google Oneindia Tamil News

சென்னை: தாய்மொழி தமிழை பாதுகாக்க மீண்டும் ஒரு மொழிப்போருக்கு தமிழகம் தயாராக இருக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் இந்தி ஆதிக்கத்துக்கு எதிராக தமிழ் மொழியை பாதுகாக்க நடைபெற்ற போராட்டங்களில் இன்னுயிர் நீத்தவர்களை நினைவு கூறும் வகையில் மொழிப்போர் தியாகிகள் நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. இந்நாளையொட்டி சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:

மொழி என்பது வெறும் தகவல் பரிமாற்றக்கருவி அல்ல. மொழி என்பது ஒரு தேசிய இனத்தின் அடையாளம். ஒரு தேசிய இனத்தின் இயல்புகளை வரையறுக்கும் ரசியப் புரட்சியாளர் ஸ்டாலின், மொழி என்கின்ற காரணியைத்தான் முதன்மையானக் குணாதிசயமாகக் கொண்டு தேசிய இனத்தை வரையறுத்தார்.

உலகில் பல மொழிகள் உண்டு. ஆனால், மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியாக தமிழ்மொழி மட்டுமே உண்டு. அதனாலேயே, உலகத்தவர் யாவரும் தாய்மொழியில் பேசுகிறார்கள்; தமிழர்கள் நாங்கள் மொழிகளின் தாய்மொழியில் பேசுகிறோம் எனப் பெருமையோடு உலகத்தவருக்குப் பறைசாற்றுகிறோம்.

உலகின் முதல் மொழி

உலகின் முதல் மொழி

உலகின் முதல் மாந்தன் நாவை அசைத்து முதன் முதலாய் உச்சரித்த ஒலியில் பிறந்த மொழி தமிழ். தமிழ் மொழியில் இருந்துதான் உலகத்தின் அனைத்து சொற்களும், மொழிகளும் தோன்றின என்பது மிகைக்கூற்று அன்று; அது நிரூபிக்கப்பட்ட உண்மை. தமிழ்மொழியே நம் இனத்தின் முகமாக, முகவரியாக, அடையாளமாக திகழ்கிறது. உலகத்தின் எந்த மூலைக்கு சென்றாலும் தமிழன், தான் பேசக்கூடிய தாய்மொழியான தமிழ் மொழி மூலமாகவே அடையாளப்படுகிறான். அதனாலேயே, புரட்சிப் பாவலர் பாரதிதாசன் அவர்கள், ‘தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' என்று முழங்கினார்.

ஐநா உலக தாய்மொழி நாள்

ஐநா உலக தாய்மொழி நாள்

வேறு எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு நமது தமிழ் மொழிக்கு மட்டுமே உண்டு. தமிழர்கள் மட்டும்தான் தன் தாய்மொழியின் மீது கொண்டிருக்கின்ற அளவற்றப் பற்றினால் தங்கள் பெயரைக்கூட தமிழழகன், தமிழரசன், தமிழ்வேந்தன், தமிழ்ச்செல்வன் என மொழியின் பெயரையே தங்கள் பெயரோடு இணைத்து தங்கள் தாய்மொழியைப் போற்றுகிறோம். கடந்த 1957 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21 ஆம் நாள் வங்க மொழியை காப்பதற்காக 4 வங்காளிகள் உயிர் துறந்தார்கள். அந்த நாளைத்தான் ‘உலகத்தாய்மொழி நாள்' என ஐ.நா. மன்றம் அறிவித்து உலக நாடுகள் அனுசரித்து வருகின்றன.

1937 முதல் இந்தி எதிர்ப்பு போர்

1937 முதல் இந்தி எதிர்ப்பு போர்

ஆனால், நம் தாய் மொழியான தமிழ் மொழி காக்க முதல் மொழிப்போரில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தன்னுயிர் தந்து போராடினார்கள். கடந்த 1938ம் ஆண்டு பள்ளி பாடத்திட்டத்தில் இந்திக் கட்டாய பாடமாக்கப்பட்டு சட்டம் இயற்றப்பட்டது. தமிழகம்தான் முதன் முதலாக இந்தித் திணிப்பை எதிர்த்து குரல் கொடுத்தது. 1937 ஆண்டிலேயே நடராசன், தாளமுத்து ஆகியோர் இந்தி எதிர்ப்புப் போரில் களப்பலியானார்கள். தமிழர்களின் கடுமையான எதிர்ப்பு நிகண்டு 1940இல் மேற்கண்ட சட்டத்தை பிரிட்டிசு காலத்து இந்திய அரசாங்கம் திரும்பப்பெற்றுக்கொண்டது

அலுவல் மொழிச் சட்டம்

அலுவல் மொழிச் சட்டம்

இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு ஜவஹர்லால் நேரு ஆட்சிக்காலத்தில் அலுவல் மொழிச்சட்டம் என்ற பெயரில் 1963 ஆம் ஆண்டு இந்தி மொழித் திணிப்பு நடந்தபோது ஒட்டு மொத்தத் தமிழகமே கொதித்தெழுந்து, இந்தித் திணிப்புக்கு எதிராக ஒன்று சேர்ந்தது. 07.03.1964 அன்று அன்றைய தமிழக முதலமைச்சர் பக்தவத்சலம் இந்தித் திணிப்பிற்கு ஆதரவாக அலுவல் மொழிச் சட்டத்தை தமிழகத்திலும் அமல்படுத்த முனைந்த போது அதை எதிர்த்து கடுமையானப் போராட்டங்கள் தமிழக மண்ணில் எழுந்தன.

கீழப்பழுவூர் சின்னசாமி முதலான இளைஞர்கள்

கீழப்பழுவூர் சின்னசாமி முதலான இளைஞர்கள்

திருச்சியை சேர்ந்த 27 வயதே நிரம்பிய கீழப்பழுவூர் சின்னசாமி 25.01.1964 அன்று தன் உடலில் தீ வைத்து தன் உயிரை தாய்மொழி காக்க ஈகம் செய்தார். அவரது வழிநின்று சிவலிங்கம், அரங்கநாதன், வீரப்பன், முத்து, சாரங்கபாணி, தண்டாயுதபாணி முத்து, சண்முகம் உள்ளிட்ட எண்ணற்ற தமிழின இளைஞர்கள் தங்கள் உயிரை துறந்தனர். தொடர்ச்சியாக நடந்த போராட்டங்களில் 800க்கும் மேற்பட்ட தமிழர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்தார்கள். தமிழர்களின் வீரியமிக்கப் போராட்டத்தை கண்டு அஞ்சிய அன்றைய மத்திய அரசும், மாநில அரசும் இந்தித் திணிப்பு சட்டங்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டன.

சிதையும் நிலையில் தமிழ்

சிதையும் நிலையில் தமிழ்

மொழிப்போர் போராட்டங்களை மூலமாக வைத்து ஆட்சிக்கு வந்த திராவிடக் கட்சிகள் தங்கள் ஆட்சியில் தமிழ் மொழி காக்க எவ்விதமானத் திட்டங்களையும் நிறைவேற்றவில்லை. பெயர்தான் தமிழ்நாடு. ஆனால், தமிழக வீதிகளில் நீதிமன்றங்களில், கோயில்களில், அரசு அலுவலகங்களில் என எந்த நிலையிலும் தமிழ் இல்லை. ஏன்? தமிழன் நாவிலேயே தமிழ் இல்லை. ஏறக்குறைய அழிந்து சிதைந்துகொண்டிருக்கும் மொழியாக இன்பத்தமிழ் மொழி மாறிவிட்டது.

தஞ்சை குடமுழுக்கு

தஞ்சை குடமுழுக்கு

இன்றைக்கு தஞ்சை பெரிய கோயிலில் நடக்கும் குடமுழுக்கு தமிழில் நடக்க வேண்டும் என்று போராடுகின்ற நிலையில்தான் திராவிடக்கட்சிகள் தமிழர்களை வைத்திருக்கின்றன. மொழிப் போராட்டத்தை மூலமாக வைத்துக்கொண்டு ஆட்சிக்கு வந்த திராவிடக்கட்சிகள் தமிழ்மொழியை தமிழ்நாட்டில் காக்க தவறிவிட்டன. மத்தியில் ஆட்சி செய்து கொண்டிருக்கின்ற தேசியக்கட்சிகள் தமிழ் மொழியை அழித்தொழிக்கும் வேலையை திட்டமிட்டு செய்துவருகின்றன. இந்தித்திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு ஆகியவற்றை நிகழ்த்தி எதிர்காலத் தலைமுறையிடமிருந்து தமிழ் மொழியை நகர்த்த முயற்சித்து வருகின்றன.

‘மொழிப்போர் ஈகிகள்’ நாள்

‘மொழிப்போர் ஈகிகள்’ நாள்

"இந்திக்கு இங்கே ஆதிக்கமா? எல்லோரும் வாருங்கள் நாட்டினரே! செந்தமிழுக்கு தீமை வந்தப் பின்னும் இந்தத் தேகம் இருந்தொரு லாபம் உண்டோ?" என்று முழங்கினார் நம் புரட்சிப் பாவலர். இன்றைக்கும் மத்திய, மாநில அரசுகள் இந்தி மொழித்திணிப்பை நேரிடையாகவும், மறைமுகமாவும் செய்து கொண்டிருக்கின்றன. ஏறு தழுவுதல் எனும் மரபுரிமைக்காக ‘தைப்புரட்சி' எனும் பண்பாட்டுப்போர் தமிழகத்தில் வெடித்தது போல, மொழியைக் காக்கத் தமிழர்கள் வீதியில் அணிதிரள வேண்டும். இரத்தம் சிந்தாத ஒரு மொழிப்போரை தமிழகத்திலே நடத்த வேண்டும். நம் மொழிக்காக தன் உடலில் தீ பற்ற வைத்து உயிர்துறந்த கீழப்பழுவூர் சின்னச்சாமி நினைவு நாளான சனவரி 25ஆம் நாளை உலகத்தமிழினம் ‘மொழிப்போர் ஈகிகள்' நாளாகக் கடைபிடித்து வருகிறது. புனிதமான இந்நாளில் நம் மொழி காக்க, நம் இனம் காக்க, நம் மண் காக்க ,நம் மானம் காக்க, நம் தமிழ்மொழி மீட்க நாம் உறுதி ஏற்போம். தமிழ் மொழி காக்க தன்னுயிர் தந்த மொழிப்போர் ஈகிகளுக்கு எனது வீரவணக்கத்தை நெஞ்சார்ந்து செலுத்துகிறேன். இவ்வாறு சீமான் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

English summary
Naam Tamilar Chief Co-ordinator Seema has urged Tamils should protect Tamil language.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X