மத்திய மாநில அரசுகளை எதிர்த்தால் வஞ்சம் தீர்க்க வழக்குகளைப் பாய்ச்சி அடக்குமுறையை ஏவுவதா? சீமான்
சென்னை அரசை விமர்சித்த திருமுருகன் காந்தி மற்றும் கருணாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய மாநில அரசுகளை எதிர்த்தால் வஞ்சம் தீர்க்க வழக்குகளைப் பாய்ச்சி அடக்குமுறையை ஏவுவதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டுக்கு நீதி கேட்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் திருமுருகன் காந்தி பதிவு செய்துவிட்டு கடந்த மாதம் நாடு திரும்பிய போது பெங்களூரில் கைது செய்யப்பட்டார். ஒன்றைரை மாதத்திற்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல் முதல்வர் மற்றும் காவல்துறை அதிகாரிகளை விமர்சித்த கருணாஸ் எம்எல்ஏவும் சிறையில் அடைக்கப்பட்டு தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனால் உயர்நீதிமன்றத்தையும் காவல்துறை அதிகாரிகளையும் விமர்சித்த எச் ராஜா இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் அரசின் இந்த நடவடிக்கைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
அரசுக்கு எதிராகப் போராடும் பேசும் அரசியல் பிரமுகர்கள் மீது வழக்குகள் தொடுக்கப்படுவது ஒன்றும் புதிதல்ல என்றாலும்கூட, தனிமனித வஞ்சம் தீர்க்கம் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்திச் சனநாயகத்தின் மூலமே அடக்குமுறைகளை ஏவுகிற அரசப்பயங்கரவாதப்போக்கினை நாம் ஒருபோதும் ஏற்க முடியாது. மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தம்பி திருமுருகன் காந்தியின் மீது பல்வேறு வழக்குகள் வேண்டுமென்றே தொடுக்கப்பட்டுச் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார்.
[சிவாஜி மணிமண்டபத்தில் கருணாநிதியின் பெயரும் இடம்பெறும்.. நடிகர் பிரபு நம்பிக்கை]

பாதகச் செயலில்லையா?
திருமுருகன் காந்தியின் மீது அடுக்கடுக்காக வழக்குகளைப் பாய்ச்ச வேண்டியதன் அவசியமென்ன? இவ்வளவு நாட்கள் இந்த வழக்கினைத் தொடுக்காது என்ன செய்துகொண்டிருந்தார்கள்? ஒவ்வொரு வழக்காகத் தொடுக்கப்பட்டுத் திட்டமிட்டு அலைக்கழித்து உடல் நலிந்த நிலையிலும் சரியான சிகிக்சை அளிக்காமல் பழிவாங்கும் நடவடிக்கை எதற்கு? அரசுக்கு எதிரான போக்கினைக் கையாண்டால் வழக்கினைத் தொடுப்பார்கள் என்றால் இது சட்டத்தினைத் தனது அரசியல் பகைமைக்காகப் பயன்படுத்துகிற பாதகச் செயலில்லையா?

வருத்தம் தெரிவித்தும்
நேற்று விடுதலையான கருணாசு மீது ஐ.பி.எல். முற்றுகைப்போராட்டத்தின்போது பங்கேற்றதற்காக மேலும் இரு வழக்குகள் தற்போது தொடுக்கப்பட்டிருக்கிறது. கருணாஸ் பேசியவற்றை ஒருபோதும் ஏற்க முடியாது. அக்கருத்துக்களில் நாங்களும் முழுமையாக முரண்படுகிறோம். மக்களின் பிரதிநிதித்துவத்தைப் பெற்று தமிழகத்தின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிற தம்பி கருணாஸ் இவ்வாறு பொறுப்புணர்வற்றுப் பேசியிருப்பது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல! இதனையுணர்ந்தே தனது பேச்சுக்கு மனம்வருந்தி கருணாஸ் வருத்தம் தெரிவித்திருக்கிறார். இருந்தபோதிலும், அவர் கைது செய்யப்படுகிறார், பழைய வழக்குகள் தோண்டி எடுக்கப்பட்டு அதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தயக்கம் காட்டுவது ஏன்?
தம்பி திருமுருகன் காந்தியைச் சிறைப்படுத்தியிருக்கிற தமிழக அரசு, தம்பி கருணாசின் பேச்சை முன்வைத்து அவரைக் கைது செய்த தமிழக அரசு, காவல்துறையினரையும், உயர் நீதிமன்றத்தையும் கொச்சையான சொற்களில் இழித்துரைத்த எச்.ராஜாவைக் கைதுசெய்யாதது ஏன்? அவரைக் கைதுசெய்வதற்கென அமைக்கப்பட்ட தனிப்படை என்னவானது? எட்டுவழிச் சாலைக்கெதிராக முகநூலில் கருத்துத் தெரிவித்தவர்களையும், அதற்கெதிராய் சென்னை காந்தி மண்டபத்தில் பட்டினிப்போராட்டம் நடத்த முற்பட்டவர்களையும்கூடக் கைதுசெய்து சிறைப்படுத்துகிற தமிழக அரசு, இவ்விவகாரத்தில் தயக்கம் காட்டுவது ஏன்?

ஜனநாயகம் துரோகம் இல்லையா?
முதல்வரை அவதூறாகப் பேசினாரெனக் கருணாஸ் மீது தொடுக்கப்பட்ட வழக்கு, முதல்வரையும், துணை முதல்வரையும் ‘ஆண்மையற்றவர்கள்' என விமர்சித்த துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி மீது ஏன் தொடுக்கப்படவில்லை.? ஒட்டுமொத்த ஊடகவியலாளர்களையும் மிகத் தரக்குறைவாக முகநூலில் விமர்சித்த எஸ்.வி.சேகர் காவல்துறையின் பாதுகாப்போடு பொதுவெளியில் உலா வந்தாரே அவரைக் கைதுசெய்ய மறுத்த மர்மம் என்ன? தங்கை சோபியா விமானத்திற்குள் முழக்கமிட்டதற்குக் கைது நடவடிக்கையைப் பாய்ச்சியவர்கள், சேலத்தில் பொதுமக்களைச் சந்தித்துக் கருத்துக் கேட்டதற்கு எங்களைக் கைதுசெய்தவர்கள், கரூரில் எமது கட்சிப் பிள்ளைகள் ஆற்றைத் தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றியதற்குக் கைது நடவடிக்கையை மேற்கொண்டவர்கள் எஸ்.வி.சேகர், எச்.ராஜா, குருமூர்த்திப் போன்றோருக்கு விதிவிலக்குத் தந்து பாதுகாப்பது என்பது சனநாயகத் துரோகம் இல்லையா?

முடிவு கட்டுவார்கள்
மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகப் போராடுபவர்கள், பேசுபவர்கள் மீது பொய் வழக்குகள் போடுவதை நிறுத்தி தம்பி திருமுருகன் காந்தியை உடனடியாக விடுதலை செய்யவேண்டும். தமிழக அரசின் ஒருதலைபட்சமான, பாரபட்சமுள்ள இந்நடவடிக்கைகள் யாவும் மக்களுக்குச் சட்டத்தின் மீது நம்பிக்கையைக் குலைக்கும் கொடுஞ்செயலாகும். இவையாவற்றையும் தமிழக மக்களும், படித்த ஒரு இளந்தலைமுறை கூட்டமும் மிக உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஆளும் அரசின் அத்துமீறல் போக்குகளுக்கும், அடிமை ஆட்சிமுறைக்கும் வருங்காலத்தில் முடிவுகட்டுவார்கள் என எச்சரிக்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.