For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாஜகவின் மதவெறி அரசியலால் இந்திய கட்டமைப்புக்கே பேராபத்து- சீமான் எச்சரிக்கை

பாஜக செய்து வரும் மதவெறி அரசியல் இந்திய கட்டமைப்புக்கே பேராபத்தானது என்று சீமான் தெரிவித்து உள்ளார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

சென்னை : ஹஜ் மானியம், முத்தலாக் விவகாரம் என இஸ்லாமியர்களின் மத உணர்வுகளில் தொடர்ந்து தலையிடுவதன் மூலம் பாஜக மத உணர்வு அரசியலை தூண்டி வருகிறது; இது இந்திய கட்டமைப்புக்கே எதிரானது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முஸ்லீம்களுக்கு இதுவரை அரசு சார்பில் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள அளிக்கப்பட்டு வந்த மானியம் ரத்து செய்யப்பட்டு இருப்பதாகவும், இனி மேல் அந்த தொகை அவர்களின் நல்வாழ்வுக்கு செலவிடப்படும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.

மத்திய அரசின் இந்த் அறிவிப்பு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

 மக்களை பிரித்தாளும் முயற்சி

மக்களை பிரித்தாளும் முயற்சி

அந்த அறிக்கையில், இசுலாமியர்கள் தங்களது மார்க்கத்தின்பால் பற்றுகொண்டு மேற்கொள்ளும் ஹஜ் புனிதப்பயணத்துக்கான மானியத்தை ரத்துச் செய்வதாக முடிவெடுத்திருக்கும் மத்திய அரசின் செயல் வன்மையானக் கண்டனத்திற்குரியதாகும். இது இந்திய நாட்டின் இறையாண்மைக்கும், தேசிய ஒருமைப்பாட்டுக்கும் கேடு விளைவிப்பதாகும். ஏற்கனவே, முத்தலாக் விவகாரத்தைக் கையிலெடுத்து மதவெறி அரசியல் செய்து வரும் பாஜக அரசானது தற்போது அதன் தொடர்ச்சியாக ஹஜ் மானியத்தை ரத்து செய்து மதவுணர்வைத் தூண்டுவதன் மூலம் மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு இரையாக்கத் துடிக்கிறது.

 பாஜக சொன்ன வளர்ச்சி எங்கே ?

பாஜக சொன்ன வளர்ச்சி எங்கே ?

பொருளாதாரச்சரிவிலும், விலைவாசி உயர்விலும் நாடு முற்றுமுழுதாய் தத்தளித்துக் கொண்டிருக்கிற இவ்வேளையில் மத்தியில் ஆளும் மோடி அரசானது மக்களின் உணர்வலைகளை திசைதிருப்பி விடுவதற்கே இதுபோன்ற மதரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடுவோம் என்று பேசி ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பாஜக அரசானது, இப்போது முன்னெடுத்து வரும் மதத்துவேச நடவடிக்கைகள் மூலம் தனது கோர முகத்தை அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறது.

 குடியுரிமையும் ரத்து செய்யப்படலாம்

குடியுரிமையும் ரத்து செய்யப்படலாம்

இசுலாமியர்களை அந்நியராக் காட்டி மக்களிடம் மதப்பிரிவினையை ஏற்படுத்தி அதன்மூலம் வாக்குவேட்டையாடத் துடிக்கும் மதவாத பாஜக அரசானது, இசுலாமிய மக்களின் இந்தியக் குடியுரிமையை ரத்து செய்வதாக அறிவித்தாலும் வியப்பேதுமில்லை. மதிப்பிற்குரிய அண்ணன் பழனிபாபா அவர்கள் குறிப்பிட்டது போல, இசுலாம் என்கிற மதம்தான் இங்கு இறக்குமதி செய்யப்பட்டதே ஒழிய, இங்கிருக்கும் இசுலாமியர்கள் அல்லர்! அவர்கள் இம்மண்ணின் பூர்வக்குடி மக்கள்; எம் உறவுகள். அவர்களை அந்நியராகச் சித்தரிக்கும் இப்போக்கினை வன்மையாக எதிர்க்கிறோம்.

 உச்சநீதிமன்ற தீர்ப்பு

உச்சநீதிமன்ற தீர்ப்பு

ஹஜ் பயணத்திற்காகக் கடல்வழியே சென்றவர்களின் வசதிக்காக வானூர்தி சேவைகள் தொடங்கப்பட்டபிறகு ஏற்படும் கூடுதல் செலவினங்களை ஈடுகட்ட மத்திய அரசால் வழங்கப்படும் மானியத்தையே ஹஜ் மானியம் என்கிறோம். முன்னாள் பிரதமர் அம்மையார் இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் தொடங்கி வைக்கப்பட்ட இத்திட்டத்தைப் பயன்படுத்தி ஆண்டுதோறும் 70 ஆயிரம் இசுலாமியர்கள் ஹஜ் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2012ஆம் ஆண்டுத் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றமானது, ஹஜ் மானியத்தை வரும் 2022க்குள் படிப்படியாகக் குறைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

 ஹஜ் மானிய ரத்து அறிவிப்பு

ஹஜ் மானிய ரத்து அறிவிப்பு

இதனைத்தொடர்ந்து, ஹஜ் பயணம் தொடர்பாகப் புதிய கொள்கையை உருவாக்க முன்னாள் செயலாளர் அப்சல் அமானுல்லா தலைமையிலான ஒரு குழுவை மத்திய அரசு அமைத்தது. அக்குழுவின் பரிந்துரையின்படி, வரும் 2018ம் ஆண்டுக்குள் ஹஜ் பயணத்திற்கான மானியத்தை ரத்து செய்வதாய் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் அதனை தற்போது அமலுக்குக் கொண்டு வந்திருக்கிறார்.இம்முடிவானது இந்தியாவின் பன்மைத்துவத்திற்கும், மதச்சார்பற்ற தன்மைக்கும் எதிரான பாசிச நடவடிக்கையாகும். இந்நாட்டின் சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும், சமூக நல்லிணக்கத்தையும் குழிதோண்டிப் புதைக்கும் படுபாதகச்செயலாகும்.

 இந்திய கட்டமைப்புக்கே பேராபத்து

இந்திய கட்டமைப்புக்கே பேராபத்து

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி உச்ச நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை ஏற்க மறுத்த மத்திய அரசானது ஹஜ் மானியம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பையே முதன்மையாகக் காட்டி ஆலோசனைக் குழுவை அமைத்து அதன் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த முற்படுவது மதரீதியிலான உள்நோக்கம் கொண்டது என்பது வெளிப்படையாகிறது. இம்முடிவானது சனநாயக வழியில் மேற்கொள்ளப்படும் ஓர் சர்வாதிகாரமாகும். ஆகவே, ஹஜ் பயணம் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசானது மேல்முறையீடு செய்ய வேண்டும் எனவும், இசுலாமியர்களின் ஹஜ் பயணத்தைத் தொடர வழிவகைகளை ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். அதனை செய்யத்தவறும் பட்சத்தில் அது இந்தியா எனும் கட்டமைப்புக்கே பேராபத்தாய் முடியும் என எச்சரிக்கிறேன் என்று அந்த அறிக்கையில் சீமான் குறிப்பிட்டு உள்ளார்.

English summary
Naam Tamilar Katchi Coordinator Seeman Warns BJP Government for Ending Haj Subsidy leads to Big Problems in India. He also added that this all the BJP hatred againstMuslim people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X