Englishবাংলাગુજરાતીहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు
Filmibeat

தீவிரவாதிகள், ரவுடிகளுக்கு போலி சான்றிதழ்... கோடிக்கணக்கில் சம்பாதித்த சண்முகசுந்தரி

Posted by:
Published: Monday, April 13, 2015, 18:15 [IST]
 

கோவை: போலி சான்றிதழ் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பாமக மகளிர் அணி நிர்வாகி சண்முக சுந்தரி, ரவுடிகள், தீவிரவாதிகள் உள்ளிட்ட 1000 பேருக்கு சான்றிதழ் தயாரித்து கொடுத்துள்ளது போலீசாரின் தொடர் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. மூணு மாசத்தில் வக்கீல், என்ஜீனியர் சர்டிபிகேட் கொடுக்கப்படும் என விளம்பரம் கொடுத்து வாடிக்கையாளர்களைக் கவர்ந்த சண்முக சுந்தரி இதன்மூலம் கோடிக்கணக்கான பணம் சம்பாதித்துள்ளது தெரியவந்துள்ளது.

கோவையைச் சேர்ந்த சண்முகசுந்தரி, கணேஷ் பிரபு, அருண்குமார் ஆகிய 3 பேரும் சேர்ந்து சட்டம், பொறியியல், பி.எஸ்சி., பி.ஏ., பி.காம்., டிப்ளமோ என பல போலி சான்றிதழ்களை தயாரித்து அதன் தகுதிக்கு ஏற்ப ரூ.50 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை விற்பனை செய்து உள்ளனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போலி சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை செய்த விவகாரத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

வக்கீல் படிப்புக்கான எல்.எல்.பி. சான்றிதழ்கள், பொறியியல் படிப்புக்கான சான்றிதழ்கள் பாராமெடிக்கல் கோர்ஸ் சம்பந்தப்பட்ட சான்றிதழ்கள் மற்றும் பட்டப்படிப்பு சான்றிதழ்களை லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு சண்முக சுந்தரி தயாரித்து கொடுத்திருப்பது அம்பலமானது.

போலி சான்றிதழ்கள்

பார்கவுன்சிலில் வக்கீல்களாக பதிவு செய்பவர்களின் விண்ணப்பங்கள் மற்றும் சான்றிதழ்களை சரிபார்த்த போது, சென்னையை சேர்ந்த அருண்குமார், அழகிரி, மதுரையை சேர்ந்த கார்த்திகேயன் ஆகியோர் அளித்திருந்த எல்.எல்.பி. சான்றிதழ்கள் போலியானவை என்பது தெரியவந்தது.

குற்றவாளிகள் சிக்கினர்

இதையடுத்து தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் செயலாளர் தட்சிணா மூர்த்தி அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்ற போலீசார் வழக்கு பதிவு செய்தனர். உதவி கமிஷனர் கண்ணன், இன்ஸ்பெக்டர் கீதா ஆகியோர் அதிரடியாக களத்தில் இறங்கி, இந்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

ஹைடெக் அலுவலகம்

கோவை காந்திபுரம் 3-வது தெருவில் ‘‘ஹைமார்க் எஜிகேஷன் இன்ஸ்டி டியூசன்'' என்ற பெயரில் சண்முக சுந்தரி போலி நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். மிகவும் ‘ஹைடெக்'காக காட்சி அளித்த இந்த நிறுவனத்தில் பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

போலி சான்றிதழ்கள்

மின்னல் வேகத்தில் இயங்கக்கூடிய வகையிலான இன்டர் நெட் வசதியும் சண்முக சுந்தரியின் அலுவலகத்தில் இருந்துள்ளது. இங்கிருந்த படியே இணையதளம் மூலமாக உத்தரபிரதேசம், டெல்லி, மகாராஷ்டிரா ஆகிய 3 மாநிலங்களுக்கும் தொடர்பு கொண்டு பேசி மோசடி கும்பல் போலி சான்றிதழ்களை தயாரித்திருப்பது அம்பலமாகி உள்ளது.

விளம்பரம் கொடுத்து

இந்த மாநிலங்களில் செயல்பட்டு வரும் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைகழகங்களின் போலி சான்றிதழ்கள்தான் அதிக அளவில் தயாரிக்கப்பட்டு நூற்றுக்கணக்கானோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக சண்முக சுந்தரி கோவையை மையமாக கொண்டு செயல்பட்ட தனது நிறுவனம் மூலம் விளம்பரங்கள் கொடுத்துள்ளார்.

கல்வி சான்றிதழுக்கு அணுகுங்கள்

அதில் ‘‘3 மாதங்களில் பட்டப்படிப்பு மற்றும் கல்வி சான்றிதழ்கள் வாங்க வேண்டுமா? எங்களை அணுகுங்கள்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் போன் நம்பர்கள் மற்றும் முகவரியையும் இடம் பெற செய்துள்ளனர்.

போட்டி போட்டு விண்ணப்பம்

இதைப்பார்த்து பலர் போட்டி போட்டுக் கொண்டு சண்முக சுந்திரியின் போலி நிறுவனத்தில் விண்ணப் பித்துள்ளனர். அவர்களிடம் ரூ. 5 லட்சம் வரை பணம் வாங்கிக் கொண்டு, சண்முக சுந்தரியும், அவரது கூட்டாளிகளும் போலி சான்றிதழ்களை தயாரித்துக் கொடுத்துள்ளனர்.

8ஆம் வகுப்பு எல்.எல்.பி சர்டிபிகேட்

8ஆம் வகுப்பு வரை மட்டும் படித்திருந்து கையெழுத்து போடத் தெரிந்திருந்தால் போதும், 3 மாதத்தில், சண்முகசுந்தரி, போலி சான்றிதழ்களை தயார் செய்து கொடுத்து விடுவார்.

வக்கீல் ரவுடி

சென்னையில் மட்டும் சுமார் 10 பேர் வக்கீல் படிப்புக்கான எல்.எல்.பி. போலி சான்றிதழ்களை பெற்றிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.இதில் ரவுடிகள் சிலரும் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். குறிப்பாக வியாசர்பாடியை சேர்ந்த ரவுடி ஒருவனும் இந்த சான்றிதழை பெற்றுள்ளான். இவன் மீது வழிப்பறி மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளன.

1000 போலி சான்றிதழ்கள்

கடந்த 2 ஆண்டுகளில் 1000 பேர் வரை இவர்களிடம் போலி சான்றிதழ் பெற்று பல்வேறு துறைகளில் பணியில் சேர்த்துள்ளனர். போலி பொறியியல் சான்றிதழ் பெற்றவர்களில் 5 பேர் பெயர் விவரமும், பாராமெடிக்கல் போலி சான்றிதழ் பெற்றவர்களில் 5 பேர் பெயர் விவரமம் தெரிய வந்துள்ளது.

தீவிரவாதிகளுக்கு சான்றிதழ்

இது போல் உருது மொழி சான்றிதழ்களும் போலியாக வழங்கப்பட்டுள்ளன. உருதுமொழி சான்றிதழ் எதற்கு பயன்படுத்துவார்கள் என்று போலீஸ் அதிகாரியிடம் கேட்ட போது, அரபு நாடுகளில் வேலைக்கு சேருவோருக்கு உருது மொழி சான்றிதழ் அவசியம் என்பதால் பலர் போலியாக பெற்றுள்ளனர். நைஜீரிய நாட்டவர்களும் போலி உருது சான்றிதழ்களை பெற்று உள்ளன. எனவே இந்த போலி சான்றிதழ்களை தீவிரவாதிகள் பயன்படுத்தும் வாய்ப்பும் உள்ளது என்றார்.

டெல்லி ஆசாமிக்கு தொடர்பு

கோவை தவிர ஆலந்தூரிலும் போலி சான்றிதழ் தயாரிப்பு கும்பலின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வந்ததை போலீசார் கண்டு பிடித்துள்ளனர். அங்கும் விசாரணை நடந்து வருகிறது. இப்படி போலி சான்றிதழ் தயாரித்து மோசடி ராணியாக வலம் வந்த சண்முக சுந்தரிக்கு டெல்லியை சேர்ந்த மோசடி ஆசாமி அமித்சிங் மிகவும் உறுதுணையாக இருந்தது கண்டுபிக்கப்பட்டுள்ளது.

டெல்லி ஆசாமிக்கு வலை

இதையடுத்து டெல்லியில் பதுங்கி இருக்கும் அமித்சிங் மற்றும் போலி சான்றிதழ் தயாரிப்பதற்கு உடந்தையாக இருந்த அத்தனை பேரையும் கூண்டோடு கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

போலீஸ் கஸ்டடி

இதற்காக சண்முகசுந்தரியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நாளை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்கிறார்கள். காவலில் எடுத்து அவரிடம் விசாரணை நடத்திய பின்னர், போலி சான்றிதழ் விவகாரத்தில் மேலும் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Shanmugasundari and her accomplices issued a bogus law certificate within three months for 3.5 lakh," an investigating officer said.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
Videos You May Like