• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

"உங்க முகத்திலும் கரியை பூசுவோம்"- டி.வி. லைவ்-ல் பத்திரிகையாளர் ஞாநியை மிரட்டிய சிவசேனா நிர்வாகி

By Mathi
|

சென்னை: டி.வி. விவாத நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பின் போது "இந்துக்களுக்கு எதிரான யார் பேசினாலும் இதே அரங்கத்தில் உள்ள உங்கள் மீதும் கரியை பூசுவோம்" என்று பத்திரிகையாளர் ஞாநியை சிவசேனா நிர்வாகி ராதாகிருஷ்ணன் மிரட்டிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நேற்று இரவு 9 மணிக்கு நேர்பட பேசு விவாத நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் பத்திரிகையாளர் ஞாநி, காங்கிரஸின் கோபண்ணா, சிவசேனாவின் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Shiv sena threatens to ink attack on Journalist Gnani

இந்நிகழ்ச்சியில் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது சிவசேனாவின் நிர்வாகி ராதாகிருஷ்ணன், இந்துக்களுக்கு எதிராக யார் பேசினாலும் கரியை பூசுவோம்... இதே அரங்கத்தில் உள்ள உங்கள் மீதும் கரியை பூசுவோம்" என பத்திரிகையாளர் ஞாநியை நோக்கி எச்சரிக்கை விடுத்தார்.

இது அரங்கத்தில் இருந்தவர்களை மட்டுமின்றி நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களையும் கடும் அதிர்ச்சியடைய வைத்தது. மும்பையிலும் டெல்லியிலும் வலதுசாரி இந்துத்துவா அமைப்புகள் சுதீந்தரா குல்கர்னி, காஷ்மீர் எம்.எல்.ஏ. ரஷீத் மீது கருப்பு மை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் தமிழகத்திலும் விரைவில் நடக்கப் போகிறது என்பதையே இந்த மிரட்டல் வெளிப்படுத்தி இருக்கிறது.

Shiv sena threatens to ink attack on Journalist Gnani

இது குறித்து பத்திரிகையாளர் ஞாநி தமது ஃபேஸ்புக் பக்கத்தில், "சிவசேனை பிஜேபி இதர இந்துத்துவ இயக்கப் பேச்சாளர்களுடன் டி.வி.விவாத அரங்குகளில் பங்கேற்க இனி செல்வதாயிருந்தால்,அழைக்கும் டிவி நிலையங்கள் போதுமான பாதுகாப்பு அளித்தால்தான் வர இயலும் என்று இதன்படி தெரிவித்துக் கொள்கிறேன்." எனப் பதிவு செய்துள்ளார்.

இதேபோல் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன்,

"இந்துக்களுக்கு எதிராக பேசினால் இதே அரங்கத்தில் உஙகள் முகத்திலும் கரி பூசுவோம்- ஞாநியை நோக்கி சிவசேனாவைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் இப்போது புதிய தலைமுறை நேர்பட பேசு நிகழ்ச்சியில்.

வாய்யா...அடுத்த கட்ட டெவலப்மெண்டா இதைத்தான் எதிர்பார்த்தோம். டிவில உட்கார்ந்து எவ்வளவு நாள்தான் வெறுப்பூட்டும் பேச்சை வெறுமனே பேசிட்டு இருப்பீங்க. செயல்ல இறங்க வேண்டாமா? ஞாநியாவது பிறப்பால் ஒரு இந்து...மையோட நிறுத்தினாலும் நிறுத்திக்குவாங்க...என் நிலமையெல்லாம் நினைச்சா யோசனையா இருக்கு. எடுத்த எடுப்பிலேயே கத்திய இனி விவாதங்களில் தூக்கிடுவாங்கன்னு நினைக்கிறேன்..ஊடக விவாதங்களில் இந்துத்வா பயங்கரவாதிகள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்திற்கு இனிதான் உண்மையிலேயே நியாயம் செய்யப் போகிறார்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.

Shiv sena threatens to ink attack on Journalist Gnani

இதேபோல் பல மூத்த பத்திரிகையாளர்களும் சிவசேனா நிர்வாகியின் இந்த மிரட்டலை கடுமையாக கண்டித்துள்ளனர்.

மகாராஷ்டிராவிலும் டெல்லியிலும் நிகழ்த்தப்பட்ட கருப்பு மை வீச்சுத் தாக்குதலைப் போன்ற சம்பவங்களை தமிழக அரசு முன்கூட்டியே தடுத்து நிறுத்தப் போகிறதா? அல்லது அந்த மாநில அரசுகளைப் போல இந்துத்துவா அமைப்புகளின் இந்த பயங்கரவாத தாக்குதல்களை கைகட்டி வேடிக்கை பார்க்கப் போகிறதா? என்பதுதான் பத்திரிகையாளர்கள் எழுப்பும் கேள்வியாக உள்ளது.

ஞாநி கடிதம்

இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக புதிய தலைமுறை தொலைக்காட்சி நிர்வாகி சத்திய நாரயணனுக்கு ஞாநி ஒரு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

தரம், சமூகப் பொறுப்பு, ஜனநாயகப் பண்பு, பொது நாகரிகம் ஆகியவற்றில் நம்பிக்கையுடன் இயங்கும் பல ஊடகவியலாளர்கள் பணியாற்றி வருவதால் உங்கள் தலைமையின் கீழ் இருக்கும் புதிய தலைமுறை தொலைக்காட்சி பொதுமக்களிடையே ஒரு மதிப்பான இடத்தைப் பெற்றுள்ளது. இந்த இடத்தை உங்கள் சேனல் அடைவதற்கு உங்கள் ஊழியர்களின் சிறப்பான உழைப்புடன் சேர்ந்து உதவியிருக்கும் மற்றோர் அம்சம், என்னைப் போன்ற பல பொதுநிலை கருத்தாளர்கள் தொடர்ந்து சேனலின் நிகழ்ச்சிகளில் ஈடுபாட்டுடன் பங்கேற்றுவருவதுமாகும்.

Shiv sena threatens to ink attack on Journalist Gnani

நேற்று இரவு (அக்டோபர் 20) நேர்படப்பேசு விவாதப் பதிவை நீங்கள் வரவழைத்துப் பார்க்கும்படி கோருகிறேன். அதில் என்னுடன் பங்கேற்ற சிவசேனை பிரதிநிதி போன்றவர்கள் இனி விவாதங்களுக்கு அழைக்கப்படவேண்டுமா, அப்படி அவர்கள் அழைக்கப்படுவதானால், என்னைப் போன்றவர்கள் அழைக்கப்படவேண்டுமா என்பது குறித்து முடிவெடுக்கவேண்டிய வரலாற்றுத்தருணத்தில் நீங்கள் இப்போது இருக்கிறீர்கள். தங்கள் கருத்துக்கு எதிர்க்கருத்தை சொல்லும் ஒருவரின் முகத்தில் மை ஊற்றும் வன்முறையில் ஈடுபடுவோம், அது வன்முறையே அல்ல என்றும் நீங்கள் அப்படிப் பேசினால் உங்கள் மீதும் ஊற்றுவோம் என்றும் நிகழ்ச்சியிலேயே என்னிடம் அவர் பேசுகிறார். அதை நானோ நிகழ்ச்சித் தொகுப்பாளர் தியாகச் செம்மலோ கண்டித்ததை அவர் பொருட்படுத்தவே இல்லை என்பதைப் பதிவில் அவர் உடல்மொழியில் நீங்கள் பார்க்கலாம்.

இப்படிப்பட்ட நபர்கள் சேனல் விவாதங்களில் பங்கேற்பது இது முதல்முறையல்ல. பல்வேறு இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் விதவிதமான அமைப்புகளின் பெயர்களில் அவற்றின் பிரதிநிதிகளாக உங்கள் நிலைய நிகழ்ச்சிகளில் இவ்வாறு வந்து பேசுகிறார்கள். சிலருக்கு சமூக ஆர்வலர் என்று பெயர் சூட்டப்படுகிறது. சாராம்சத்தில் அவர்களிடையே வேறுபாடே இல்லை. இதில் பல அமைப்புகள் மக்கள் கவனத்தைப் பெறுவது என்பதே உங்கள் சேனலின் வழியே அவர்களுக்குக் கிடைக்கும் விளம்பரத்தினால்தான். இதே சலுகையை இதர மத அடிப்படைவாதிகளுக்கோ அரசியல் தீவிரவாதிகளுக்கோ உங்கள் சேனல் அளிப்பதில்லை அல்லவா. அப்படி அவர்களுக்கும் அளிக்கவேண்டும் என்று அவர்களும் கோரலாமல்லவா. அப்படித் தர ஆரம்பித்தால் நிலைமை என்ன ஆகும் என்று யோசியுங்கள்.

மாறுபட்ட கருத்துகள் எல்லாம் விவாதிக்கப்படும் களமாக உங்கள் சேனல் தொடர்ந்து இருக்கவேண்டும் என்பதே என் போன்றோரின் விருப்பம். ஆனால் அப்படிப்பட்ட விவாதம், சமூக ஒழுங்கு, கண்ணியம், பேச்சு நாகரிகம் முதலியன உள்ளவர்கள் இடையில் நடந்தால் மட்டுமே ஆரோக்கியமாக இருக்கமுடியும். எந்த நிமிடமும் விவாத அரங்கின் நடுவிலேயே பக்கத்திலிருப்பவர் என் மீது மை ஊற்றுவாரோ, தாக்குவாரோ என்ற சந்தேகத்துக்குரிய நபர்களுடன் உட்கார்ந்து விவாதிக்கமுடியாது. நானும் தற்காப்புக்காக ஹெல்மெட் அணிந்துகொண்டோ சோப்பு, டவல் எல்லாம் எடுத்துக் கொண்டோ அல்லது எதிர் தாக்குதலுக்காக நானும் கையில் மை புட்டியுடனோ வரவேண்டும் என்ற நிலையில் ஒரு சமூகக் களம், மீடியா களம் இயங்கும் நிலை ஏற்பட்டுவிடக் கூடாது.

இனி உங்கள் சேனலின் பொது விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்க எப்படிப்பட்டவர்கள் அழைக்கப்படவேண்டும், அவர்களுக்கான நடத்தை விதிகள் என்ன என்பது பற்றி துல்லியமாக கறாராக நீங்கள் முடிவெடுக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.

இது குறித்து விரைவில் உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன். புதிய தலைமுறை தொடர்ந்து ஓர் ஆரோக்கியமான செய்தி விமர்சன சேனலாக இயங்கவேண்டும் என்பதே அதன் முதல் நாள் முதல் தொடர்ந்து அத்துடன் இணைந்து பணியாற்றுவரும் என்போன்றோரின் விருப்பம். இந்த நோக்கத்தில் தற்போது ஏற்பட்டிருக்கும் தடங்கல்களை நீங்கள் விரைந்து களைவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

 
 
 
English summary
Shivsena's state functonary Radhakrishnan threaten to Ink attack on Journalist Gnani in TV Live debate.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X