For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மருமகனை துப்பாக்கியால் சுட்டதுஏன் ? கைதான எஸ்.ஐ. வாக்குமூலம்

Google Oneindia Tamil News

சென்னை : மருமகனை துப்பாக்கியால் சுட்டது ஏன் என கைது செய்யப்பட்ட எஸ்ஐ பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஆசையாக வளர்த்த மகளை அடிக்கப் பாய்ந்ததால் தான் மருமகனை துப்பாக்கியால் சுட்டதாக தனது வாக்குமூலம் எஸ்.ஐ. தெரிவித்துள்ளார்.

SI Shot soninlaw

மந்தைவெளி செயின்ட் மேரீஸ் சாலை பகுதியைச் சேர்ந்தவர் சங்கர பாண்டியன். ஆயுதப்படை போலீஸ் எஸ்.ஐ.யான இவர், மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஒருவரின் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மகள் சங்கரி அபிநயா, ஆதம்பாக்கத்தில் உள்ள சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் பணி புரிகிறார்.

இவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் ராஜசேகர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பெற்றோர் சம்மதத்துடன் இந்த திருமணம் நடந்தது.

ராஜசேகரின் சொந்த ஊர் தேனி மாவட்டம் வருசநாடு. திருமணத்துக்கு பிறகு புதுமண தம்பதிகள் ஆதம்பாக்கத்தில் தனிக்குடித்தனம் சென்றனர். சில நாட்களில் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கூடுதல் வரதட்சணை கேட்டு ராஜசேகர் சித்ரவதை செய்வதாக சங்கரி அபிநயா மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். பின்னர் சமரச பேச்சுக்கு பிறகு புகாரை வாபஸ் பெற்றார். இருப்பினும் சில நாட்களில் கருத்து மோதல் வெடித்தது. இதைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக பிரிந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மந்தைவெளி செயின்ட் மேரீஸ் சாலையில் உள்ள மசூதி அருகே வைத்து மருமகனை எஸ்.ஐ. சங்கர பாண்டியன், தான் பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டார். இதில், இரண்டு குண்டுகள் ராஜசேகர் மீது பாய்ந்தது. மீதம் உள்ள இரண்டு குண்டுகள் குறி தவறி வேறு இடத்தில் பாய்ந்தது. இந்த சம்பவம் அபிநயாவின் கண் முன்னே நடந்தது. கருத்து வேறுபாடு இருந்தாலும் கண் முன் கணவர் சுடப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அபிநயா அதிர்ச்சி அடைந்தார்.

அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். ஆட்டோ மூலம் ராஜசேகரை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், தகவல் அறிந்து மயிலாப்பூர் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் சியாம் வின்சென்ட் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். எஸ்.ஐ. சங்கர பாண்டியனை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். பின்னர், இரவோடு இரவாக அவர் மீது கொலை முயற்சி மற்றும் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டு இருந்த ஆயுதத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

போலீஸ் எஸ்.ஐ. ஒருவர் மருமகன் மீதே துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதற்கிடையில், மருமகன் மீது துப்பாக்கி சூடு நடத்தியது ஏன் என எஸ்.ஐ. சங்கர பாண்டியன் பரபரப்பு அளித்த வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது...

எனக்கு இரண்டு மகள்கள். இரண்டு பேரையும் செல்லமாக வளர்த்தேன். அவர்கள் என்ன கேட்டாலும் மறுப்பு தெரிவிக்காமல் வாங்கி கொடுத்தேன். மூத்த மகள் சங்கரி அபிநயா நன்றாக படித்து, சாப்ட்வேர் இன்ஜினியராக பணி செய்து வந்தார். எனது உறவுக்கார் மூலம் ராஜசேகர் குடும்பத்தினர் அறிமுகம் கிடைத்தது.

இரு தரப்பும் பேசி கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் அபிராமபுரத்தில் வைத்து திருமணத்தை நடத்தி முடித்தோம். திருமணமான 3 மாதத்தில் தம்பதிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. நான் எவ்வளவோ சமாதானம் செய்தேன். மருமகனின் குணம் சிறிது மோசமாக இருந்தது. வரதட்சணை கேட்டும் தொந்தரவு செய்துள்ளார். மருமகனின் மோசமான குணத்தால் மகளால் ராஜசேகருடன் வாழ முடியவில்லை.

3 மாதங்களுக்கு முன்னர் மகள் எனது வீட்டிற்கு வந்துவிட்டார். பாசமாக வளர்த்த மகள் கணவர் வீட்டை துறந்து பிறந்த வீட்டில் இருப்பதை பற்றி பலரும் கேலி செய்தனர்.

இது எனக்கு மன வேதனையை ஏற்படுத்தியது. இருப்பினும் மருமகனுடன் சமாதானம் பேசி அனுப்பி விடலாம் என நினைத்துக் கொண்டு இருந்தேன். மருமகன் வண்டலூரில் உள்ள அவரது சகோதரி வீட்டில் தங்கி மந்தைவெளியில் உள்ள கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு மகளை தனியாக அழைத்து ராஜசேகர் பேசியுள்ளார். காரசாரமான வாக்குவாதம் நடந்துள்ளது. தான் கட்டிய தாலியை இப்பவே கழற்றி கொடு என மருமகன் மகளிடம் ஆக்ரோஷமாக சண்டை போட்டார். எதிர்பாராத விதமாக அந்த வழியாக சென்ற நான் இதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். அவர்களிடம் சென்று சமாதானம் செய்தேன். ஆனால், மருமகன் சற்றும் அமைதியாகவில்லை.

மாறாக, என்னை தகாத வார்த்தையால் திட்டினார். என்னை கையால் தாக்கினார். மகளையும் அடிக்க பாய்ந்தார். செல்ல மகள் மீது மருமகன் தாக்குதல் நடத்த முயன்றது என்னை மிருகமாக மாற்றியது. கண் இமைக்கும் நேரத்திற்குள் என்னை நான் மறந்தேன். பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாக்கியால் ராஜசேகரை சரமாரியாக சுட்டேன். 4 குண்டுகளில் 2 குண்டுகள் மருமகன் உடலில் பாய்ந்தது. அவரை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கில் சுடவில்லை.

பாச மகளை தாக்க முயன்றதால் மெய் மறந்து விட்டேன். மருமகன் மீது குண்டு பாய்ந்ததை கண்டு மகள் துடிதுடித்தாள். பின்னர், சுதாரித்துக் கொண்டு மகள் வாழ்க்கை பாழாகி விட்டதே என்ற அதிர்ச்சியில் உறைந்து போனேன். இவ்வாறு வாக்குமூலத்தில் எஸ்.ஐ. சங்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

English summary
SI has given Confessions about why he shot on his son in law
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X