For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சியாச்சின் பனிச்சரிவில் உயிரிழந்த 4 தமிழக வீரர்களின் உடல் சொந்த ஊர் வந்தது: அமைச்சர்கள் அஞ்சலி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி உயிர் இழந்த தமிழக ராணுவ வீரர்களின் உடல்கள் சென்னையில் இருந்து அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின்னர் இன்று இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளது.

காஷ்மீர் மாநிலம், சியாச்சின் பகுதியில் கடந்த 3ம் தேதி ஏற்பட்ட பனிச் சரிவில் நாட்டின் எல்லையை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்களான, வேலூர் மாவட்டம், பாகாயம் கிராமத்தைச் சேர்ந்த ஹவில்தார் எம்.ஏழுமலை; தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், குமணன்தொழு பகுதியைச் சேர்ந்த ஹவில்தார் எஸ்.குமார்; மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், சொக்கதேவன்பட்டியைச் சேர்ந்த சிப்பாய் ஜி.கணேசன்; கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், குடிசாதனப் பள்ளியைச் சேர்ந்த சிப்பாய் என்.ராமமூர்த்தி ஆகியோர் புதையுண்டனர்.

இவர்களை தேடும் முயற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவம் கடந்த 9ம் தேதியன்று அவர்கள் உடல்களை மீட்டனர். சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி பலியான 9 ராணுவ வீரர்களின் உடல்களும் லடாக்கில் இருந்து நேற்று டெல்லி கொண்டு வரப்பட்டது.

Siachen avalanche: Minister's pays Tribute to soldiers bodies

டெல்லியில் உள்ள பாலம் விமான நிலையத்தில் வைக்கப்பட்ட ராணுவ வீரர்களின் உடல்களுக்கு ராணுவ உயர் அதிகாரிகள் இறுதி மரியாதை செலுத்தினர்.
அங்கிருந்து வீரர்களின் உடல்களை, இந்திய விமானப் படையினர், புனே, பெங்களூரு, ஹைதராபாத், மதுரை, சென்னை மற்றும் திருவனந்தபுரம் ஆகிய ஊர்களுக்குக் கொண்டு சேர்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

அதில், தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஏழுமலை உடல் பெங்களூர் மூலமாக அங்கிருந்து சென்னை விமான நிலையம் கொண்டு வரப்பட்டது. அங்கு, தமிழக அமைச்சர்கள் டி.கே.எம்.சின்னையா, வளர்மதி உள்ளிட்டோரும், ராணுவ வீரர்களும், அதிகாரிகளும் ஏழுமலையின் உடலுக்கு மலரஞ்சலி செலுத்தினர்.
இதனை தொடர்ந்து ஹவில்தார் ஏழுமலையின் உடல் அவரது சொந்த ஊரான வேலூர் மாவட்டம், பாகாயம் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

வீரர் ஏழுமலையின் உடல் அவரது சொந்த ஊரில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அப்போது தமிழக கல்வித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி ஏழுமலையின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். முதல்வர் ஜெயலலிதா அறிவித்த ரூ. 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை ஏழுமலையின் குடும்பத்தினருக்கு அமைச்சர் வீரமணி அளித்தார்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், சொக்கதேவன்பட்டியைச் சேர்ந்த சிப்பாய் ஜி.கணேசன் உடல் நேற்று இரவு சொந்த ஊருக்குக் கொண்டு வரப்பட்டது. அமைச்சர் செல்லூர் ராஜூ, வீரரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது முதல்வர் ஜெயலலிதா அறிவித்த ரூ. 10 லட்சத்திற்காக காசோலையை கணேசன் குடும்பத்தினருக்கு அளித்தார்.

முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை வீரரின் சடலம் இருந்த பெட்டியின் முன்பாக வைத்து காசோலையை அளித்தார் அமைச்சர் செல்லூர் ராஜூ. இந்த சம்பவம் அங்கிருந்த பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தது.

இதற்கிடையே பனிச்சரிவில் சிக்கி இறந்த மற்றொரு ராணுவ வீரர் ராமமூர்த்தியின் உடல் டெல்லியில் இருந்து பெங்களூருக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது. பின்னர் ராணுவ வாகனத்தில் அவரது சொந்த ஊரான குடிசாதனப்பள்ளிக்கு நேற்று இரவு எடுத்து வரப்பட்டது. அவரது உடலுக்கு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். இறுதிச்சடங்கு ராணுவ மரியாதையுடன் இன்று நடக்கிறது.

English summary
The mortal remains of 4 soldiers from Tami Nadu, who were buried alive by an avalanche in the Siachen Glacier. TamilNadu Ministers pays tribute to Soldiers bodies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X