For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

21 குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் தமிழக வீரர் ஏழுமலை உடல் அடக்கம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர் ஏழுமலையின் உடல் 21 குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர் கணேசன் இறுதி ஊர்வலம் இன்று காலையில் 10 மணிக்கு மதுரை உசிலம்பட்டி அருகே உள்ள சொக்கத்தேவன்பட்டியில் துவங்கியது. மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், ராணுவ வீரர்கள் பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றுள்ளனர்.

காஷ்மீர் மாநிலம் சியாச்சின் பகுதியில் கடந்த 3ம் தேதி பாதுகாப்பு பணியில் இருந்த 10 ராணுவ வீரர்கள் பனிப்பாறை சரிவில் சிக்கினர். அவர்களை தேடும் பணியில் ராணுவம் ஈடுபட்டது. 2 நாட்களுக்குப் பின்னர் 10 ராணுவ வீரர்களும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

Siachen Martyr Elumalai cremated with full honours

இருப்பினும் ராணுவ வீரர்களின் உடல்களைத் தேடும் நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. அப்போது யாரும் எதிர்பாராத வகையில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஹனுமந்தப்பா என்ற வீரர் உயிருடன் மீட்கப்பட்டார்.

கோமா நிலையில் இருந்த ஹனுமந்தப்பா உடனடியாக டெல்லிக்கு கொண்டுவரப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் அவரை காப்பாற்ற முடியாமல் போனது. டெல்லியில் உயிரிழந்த ஹனுமந்தப்பாவின் உடல் அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் எஞ்சிய 9 ராணுவ வீரர்களின் உடல்களும் பெரும் போராட்டத்துக்குப் பின்னர் மீட்கப்பட்டன. இதில் தமிழகத்தைச் சேர்ந்த எம்.ஏழுமலை, எஸ்.குமார், கணேசன், ராமமூர்த்தி உள்ளிட்ட 4 வீரர்களும் வீரமரணம் அடைந்தனர். தொடர்ந்தும் பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் 9 பேரின் உடல்களையும் டெல்லி கொண்டுவருவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில் லே-வில் இருந்து 9 வீரர்களின் உடல்களும் நேற்று டெல்லிக்கு கொண்டுவரப்பட்டது. டெல்லி பாலம் விமான நிலையத்தில் 9 வீரர்களின் உடல்களுக்கும் ராணுவ வீரர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து வீரர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு சென்னை, பெங்களூருவிற்கு கொண்டு செல்லப்பட்டு அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பனிச்சரிவில் சிக்கி வீரமரணம் அடைந்த படைத்துறை மேலாளர் ஏழு மலையின் உடல் நேற்று நள்ளிரவு அவரது சொந்த ஊரான வேலூர் மாவட்டம் அடுக்கம்பறைக்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. .

அமைச்சர் கே.சி. வீரமணி, மாவட்ட ஆட்சியர் நந்தகோபால் ஆகியோர் இன்று காலை ராணுவவீரர் ஏழுமலை உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். ராணுவ வீரர் குடும்பத்தினருக்கு முதல்வர் ஜெயலலிதா வழங்கிய அனுதாப கடிதத்தை கொடுத்து அமைச்சர் கே.சி.வீரமணி ஆறுதல் கூறினார்.
மேலும் முதல்வர் அறிவித்த ரூ.10 லட்சம் நிதியை ராணுவ வீரர் குடும்பத்தினரிடம் வழங்கினார்.

இதனை தொடர்ந்து மேயர் கார்த்தியாயினி எம்.எல்.ஏக்கள் கே.ஜி.ரமேஷ், கலையரசு, அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ராமு, ஆவின் தலைவர் வேழலகன், பென்னாத்தூர் பேரூராட்சி தலைவர், தாசில்தார் விஜயன், பி.ஆர்.ஓ. விஜயகுமார் மற்றும் பலர் ராணுவவீரர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து இன்று காலை 10 மணியளவில் வீரர் ஏழுமலையின் உடலுக்கு தேசிய கொடி போர்த்தப்பட்டு ஊர்வலமாக இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். 21 குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஏராளமானோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

கணேசன் உடல் இறுதி ஊர்வலம்

அதேபோல சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர் கணேசன் இறுதி ஊர்வலம் இன்று காலையில் 10 மணிக்கு மதுரை உசிலம்பட்டி அருகே உள்ள சொக்கத்தேவன்பட்டியில் துவங்கியது. மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், ராணுவ வீரர்கள் பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றுள்ளனர்.

English summary
Siachen Martyr Elumalai's body was cremated with full honours in his native place today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X