நில அதிர்வு அச்சத்தில் இருந்து மீளாத நெல்லை மாவட்ட மக்கள்

நெல்லை: நெல்லை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் நேற்று நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் பீதியில் இருந்து வருகின்றனர்.
நெல்லை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளான செங்கோட்டை அருகே உள்ள புளியரை, வடகரை, அச்சன்புதூர், வி.கே.புரம் மற்றும் தென்காசி, சுரண்டை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று திடீரென நில அதிர்வு உணரப்பட்டது.

பயங்கர சத்தத்துடன் 10 விநாடிகள் உணரப்பட்ட இந்த நில அதிர்வு அப்பகுதி மக்களால் நன்கு உணரப்பட்டது. இதனால் பீதி அடைந்த பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து அமர்ந்தனர். பயத்தின் காரணமாக அவர்கள் காலையில் தான் வீட்டுக்குள் சென்றனர்.
இந்த நிலையில் நெல்லை மனோன் மணியம் சுந்தரனார் பல்கலை கழக புவி தொழில்நுட்ப துறையில் உள்ள துறை தலைவர் ஸ்ரீனிவாஸ் மற்றும் பேராசிரியர்கள் ஆய்வு செய்தனர். பின்னர் ஸ்ரீனிவாஸ் கூறியதாவது, நெல்லை மாவட்டத்தில் தற்போது உணரப்பட்ட நில அதிர்வு குறைந்த அளவில் இருக்கலாம். இது நில அதிர்வு கருவியில் பதிவாக வாய்ப்பு இல்லை.
இந்த குறைந்தபட்ச அதிர்வால் பாதிப்பு இருக்காது. ஆனால் அச்சன்கோவில் முதல் திசையன்விளை கடல் பகுதி வரை அச்சன்கோவில் புவி மின்சிதைவு மண்டலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் குமரி மாவட்டத்தில் சில பகுதிகளும் அடங்கியுள்ளது.
இந்த மண்டலத்திற்கு உள்பட்ட பகுதிகளில் எப்போதாவது சிறிய அளவிலான நில அதிர்வுகள் உணரப்பட வாய்ப்புள்ளது. இப்பகுதி கடல் பகுதிகளில் பெரிய அளவிலான நில அதிர்வு பதிவாகும் போது அதன் தொடர்ச்சியாக தரைப்பகுதியில் சிறிய அளவிலான நில அதிர்வு இருக்கும்.
நெல்லை பல்கலையில் உள்ள ஆய்வு கருவியில் பெரிய அளவிலான நில அதிர்வுகள் உடனடியாக பதிவாகி விடும். பாறைகளை உடைத்தால் கூட அதன் சத்தம் இதில் பதிவாகி விடும். இவ்வாறு அவர் தெரிவித்தார். பொதுமக்கள் தேவை இன்றி அச்சப்பட வேண்டாம் என்றும் அவர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!