For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சூரிய ஒளி மின் திட்டம்.. தமிழக அரசு மீது டாக்டர் ராமதாஸ் அடுக்கடுக்கான புகார்!!

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசு அறிவித்தபடி எந்த சூரிய மின் திட்டத்தையுமே செயல்படுத்தவில்லை.. 300 நாட்கள் வெயில் அடிக்கும் தமிழகத்தில் 28 மெகாவாட் அளவுக்கே சூரிய ஒளி மின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சாடியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

Solar power projects: Ramadoss slams ADMK government

சென்னையில் நடந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி குறித்த கருத்தரங்கில் பேசிய மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், 2015 ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டில் 3,000 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று கூறியிருக்கிறார். சூரிய ஒளி மின்சாரத்தைத் தயாரிக்க ஆக்கபூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வெற்று வாக்குறுதிகளை மட்டும் அரசு அளிப்பது கண்டிக்கத்தக்கது.

மேலும் தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டை 3 மாதங்களில் போக்குவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா 3 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகும் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இதனால் மக்களிடம் எழும் எதிர்ப்பை சமாளிப்பதற்காக அவ்வபோது ஏதேனும் திட்டத்தை அறிவிப்பதும், அத்துடன் அந்த திட்டத்தை மறந்துவிடுவதுமான அணுகுமுறையை அவர் கடைபிடித்து வருகிறார்.

அத்தகைய உத்திகளில் ஒன்று தான் சூரிய ஒளி மின் கொள்கை ஆகும். சென்னையில் கடந்த 20.10.2012 அன்று தமிழ்நாடு சூரிய ஒளி மின் கொள்கையை வெளியிட்ட முதல்வர் ஜெயலலிதா, 2013 முதல் 2015ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு 1000 மெகாவாட் வீதம் 3 ஆண்டுகளில் மொத்தம் 3000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்பது உள்ளிட்ட பல அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்பின் 20 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் ஜெயலலிதாவின் எந்த அறிவிப்பும் செயல்வடிவம் பெறவில்லை; அதற்காக தமிழக ஆட்சியாளர்கள் கவலைப்படவும் இல்லை.

தமிழக அரசு அறிவித்த சூரிய ஒளி மின் கொள்கையின்படி கடந்த ஆண்டில் 1000 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்; நடப்பாண்டு இறுதிக்குள் மேலும் 1000 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்யப்பட வேண்டும். ஆனால், இன்று வரை இந்தக் கொள்கையின்படி ஒரே ஒரு மெகாவாட் கூட சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்யப்படவில்லை. 2013 ஆம் ஆண்டில் 1000 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தை தனியார் மின்சார நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்வதற்காக கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டன.

எனினும், தமிழக அரசை நம்பி சூரிய ஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்ய தயாராக இல்லாத முன்னணி சூரிய ஒளி மின்சார தயாரிப்பு நிறுவனங்கள் இந்த நடைமுறையில் பங்கேற்கவில்லை. ஒட்டுமொத்தமாக 698 மெகாவாட் அளவுக்கு மட்டுமே சூரிய ஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்து தருவதற்கு 52 நிறுவனங்கள் ஒப்பந்தப் புள்ளிகளை தாக்கல் செய்திருந்தன. அந்த நிறுவனங்களின் அனைத்து ஒப்பந்தப்புள்ளிகளையும் ஏற்றுக்கொண்ட தமிழக அரசு, அவை உற்பத்தி செய்யும் மின்சாரத்தை ஒரு யூனிட் ரூ. 6.48 என்ற விலைக்கு கொள்முதல் செய்ய ஒப்புக் கொண்டது.

அதற்கான ஒப்பந்தத்தை அந்த நிறுவனங்களுடன் தமிழக அரசு செய்து கொண்டிருந்தால், அவை கட்டமைப்புக்களை ஏற்படுத்தி சூரிய ஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்யத் தொடங்கியிருக்கும். ஆனால், ஒப்பந்தப் புள்ளிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் முடிவடைந்துவிட்ட பிறகும், அந்த நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை என்பதிலிருந்தே இவ்விஷயத்தில் தமிழக அரசு எந்த அளவுக்கு அக்கறையின்றி செயல்படுகிறது என்பதை மக்களால் புரிந்து கொள்ள முடியும்.

அதிக மின்சாரம் பயன்படுத்தும் நிறுவனங்கள் தங்களின் மொத்த மின் பயன்பாட்டில் 6% அளவுக்கு சூரிய ஒளி மின்சாரத்தை பயன்படுத்த வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவு செல்லாது என மின்சார மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தடை விதித்ததால் தான் சூரிய ஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியவில்லை என்று அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறுவதை ஏற்க முடியாது. சூரிய ஒளி மின்சார பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவே இப்படி ஒரு நிபந்தனை சேர்க்கப்பட்டது. தமிழகத்தில் தற்போது கடுமையான மின்தட்டுப்பாடு நீடிப்பதால் சூரிய ஒளி மூலம் எவ்வளவு மின்சாரம் தயாரிக்கப்பட்டாலும், அதை வீடுகளுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் பயன்படுத்திக்கொள்ள முடியும். இதற்கான திட்டத்தையும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வகுத்துத் தந்திருக்கிறது. எனவே, சூரிய ஒளி மின்சார தயாரிப்பு நிறுவனங்களுடன் கொள்முதல் ஒப்பந்தத்தை செய்து கொள்ள தீர்ப்பாயத்தின் தடை எந்த வகையிலும் முட்டுக்கட்டை போடவில்லை.

தமிழ்நாட்டிற்கு பிறகு சூரிய ஒளி மின் திட்டங்களில் ஆர்வம் காட்டத் தொடங்கிய மத்திய பிரதேசத்தில், 130 மெகாவாட் திறன் கொண்ட ஆசியாவின் மிகப்பெரிய சூரிய ஒளி மின் பூங்கா உட்பட மொத்தம் 250 மெகாவாட் திறன் கொண்ட திட்டங்களும், மராட்டியத்தில் 150 மெகாவாட் திறன் கொண்ட திட்டங்களும் கடந்த ஓராண்டில் நடைமுறைக்கு வந்துள்ளன. குஜராத் மாநிலத்தில் இதுவரை மொத்தம் 900 மெகாவாட் அளவுக்கு சூரிய ஒளி மின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், ஆண்டுக்கு 300 நாட்கள் சூரிய ஒளி கிடைக்கும் தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் 28 மெகாவாட் அளவுக்கே சூரிய ஒளி மின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை அதிமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே நிறைவேற்றி முடிக்கப்பட்டவையாகும். மொத்தத்தில் சூரிய ஒளி மின்திட்டங்களை செயல்படுத்துவதில் அதிமுக அரசு தோல்வியடைந்துவிட்டது.

மின்வெட்டு முழுமையாக நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட பிறகும் தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின் வெட்டு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் மக்கள் அவதிப்படுவது ஒருபுறமிருக்க, தொடர் மின்வெட்டால் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி 1.61 சதவீதம் என்ற அளவுக்கு சரிந்துவிட்டது.

இதேநிலை தொடர்ந்தால் தமிழகத்தின் வளர்ச்சி பின்னோக்கி தான் இருக்கும். எனவே, சூரிய ஒளி மின் திட்டங்கள், அனல் மின் திட்டங்கள் ஆகியவற்றை விரைவாக செயல்படுத்தி தமிழக மக்களின் அவதியை ஓரளவாவது குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

English summary
PMK founder Dr. Ramadoss slammed ADMK government in connection with solar power projects.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X