For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Pongal Exclusive: பொங்கலுக்கு மட்டும் தான் புத்தாடைகள் கிடைக்கும்... தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.

Google Oneindia Tamil News

பொங்கல் பண்டிகைக்கான தாய் வீட்டு சீர் இப்போதும் தனக்கு வருவதாகவும், உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பொங்கல் பண்டிகையை மட்டும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மல்லாங்கிணறு கிராமத்தில் தான் இதுவரை தாம் கொண்டாடி வருவதாகவும் பெருமிதம் தெரிவிக்கிறார் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.

இந்நிலையில் ஒன் இந்தியா தமிழ் வாசகர்களுக்காக பொங்கல் சிறப்புப் பேட்டி வேண்டும் என கேட்டபோது பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார். அவர் அளித்த பேட்டியின் விவரம் பின்வருமாறு;

south chennai mp thamizhachi thangapandian pongal special interview

கேள்வி: பொங்கல் என்றவுடன் உங்கள் நினைவுக்கு வருவது எது?

பதில்: எங்கள் வீட்டில் கொண்டாடப்படும் ஒரே பண்டிகை பொங்கல் மட்டுமே. தீபாவளி உள்ளிட்ட எந்த பண்டிகையையும் நாங்கள் கொண்டாடியதில்லை. அதனால் பொங்கல் பண்டிகையை பொறுத்தவரை எப்போதுமே எங்களுக்கு சிறப்பான ஒன்று தான். சிறுவயதில் எனக்கு பொங்கல் பண்டிகைக்கு மட்டுமே அப்பா புத்தாடைகள் வாங்கி கொடுப்பார். அவரும் பொங்கல் அன்று தான் புத்தாடைகள் அணிவார். மல்லாங்கிணறு கிராமத்தில் தோழிகளுடன் சுற்றித்திரிந்த காலத்தை மறக்க முடியாது.

கேள்வி: பொங்கலை கொண்டாட தயாராகிவிட்டீர்களா? இந்த ஆண்டு எங்கு கொண்டாட இருக்கிறீர்கள்?

பதில்: முதல்முறையாக மக்களவை உறுப்பினராக இந்த பொங்கலை கொண்டாடுவதால் கூடுதல் மகிழ்ச்சி. எப்போதுமே பொங்கல் பண்டிகையை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மல்லாங்கிணறு கிராமத்தில் தான் கொண்டாடுவோம். உலகில் எங்கு இருந்தாலும் பொங்கல் பண்டிகைக்கு சொந்த கிராமத்தில் கூடிவிடுவோம். ஆனால் இந்த ஆண்டு மட்டும் தவிர்க்க முடியாத காரணத்தால் நான் கேரளாவில் நடைபெறும் இலக்கிய திருவிழாவுக்கு செல்கிறேன். இதுவரை இப்படி நடந்ததில்லை. ஆனால் முதல்முறையாக சொந்தகிராமத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாட முடியாத நிலை. இரண்டு நாட்கள் இலக்கிய திருவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றிவிட்டு பின்னர் ஊருக்கு செல்கிறேன்.

south chennai mp thamizhachi thangapandian pongal special interview

கேள்வி: உங்களுக்கு பொங்கல் சீர் தாய் வீட்டில் இருந்து இப்பவும் வருகிறதே அதை பற்றி சொல்லுங்க...

பதில்: நான் மருமகன் எடுத்தாலும் எனக்கு இன்னும் எனது தாய் வீட்டில் இருந்து தான் பொங்கல் சீர் வருகிறது. காலம் காலமாக தொடரும் பொங்கல் சீர் நடைமுறையை எனது தாய் இன்னும் தொடர்கிறார். எனது கண்ணு(தங்கம் தென்னரசுவை) தந்தை ஸ்தானத்தில் இருந்து எனக்கு பிறந்த வீட்டு சீர் செய்கிறார். மறைந்த அன்பில் பொய்யாமொழி அண்ணன் என்னை உடன்பிறந்த சகோதரியாக கருதி உயிருடன் இருந்தவரை பொங்கல் சீர் கொடுத்தார். அன்பில் பொய்யாமொழி அண்ணன் மறைவுக்கு பிறகு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் போது அவர் செய்த சீரை நினைத்துபார்ப்போம். அதேபோல் சிறுகதை மன்னன் என்றழைக்கப்பட்ட தென்னரசு பெரியப்பாவும், தாம் மறையும் வரை எனக்கு பொங்கல் சீர் கொடுத்தார்.

கேள்வி: சிறுவயது பொங்கல் கொண்டாட்டத்துக்கும் இப்போது கொண்டாடுவதற்கும் என்ன வித்தியாசம்?

பதில்: சிறுவயதில் எங்கள் கிராமத்தில் நான் உட்பட தோழிகள் அனைவரும் இணைந்து, அதாவது பள்ளி படிக்கும் போதே ஒன்றாக தெருவில் பொங்கல் வைத்து எங்கள் பெற்றோர்களுக்கு கொடுப்போம். பெரியவர்கள் யார் உதவியுமின்றி நாங்களாக கூடி சமைத்து அதை பரிமாறுவோம். மேலும், பொங்கல் அன்று அணியும் புத்தாடைகளை காட்ட கிராமத்தில் உள்ள அனைத்து வீட்டுக்கும் தோழிகளுடன் சென்று வருவோம். இப்போதும் நான் ஊருக்கு போனால், என்னை வாத்தியார் மகள், டீச்சர் மகள் என்று தான் அழைப்பார்கள். காரணம் எங்க அப்பாவும் டீச்சர், அம்மாவும் டீச்சர். அதனால் செமதி வாத்தியார் என்று தான் பாசத்துடன் கிராமமக்கள் என்னை அழைப்பார்கள். என்னுடைய இயற்பெயர் சுமதி, அதை அவர்கள் செமதி என்று தான் உச்சரிப்பார்கள். அதுபோன்ற கொண்டாட்டங்கள் இப்போது இல்லை என்றாலும் அதையொட்டிய பொங்கல் நிகழ்ச்சிகள் இப்போதும் ஊரில் களைகட்டும்.

தை பொங்கல் 2020: தை பொங்கல், மாட்டுப்பொங்கல் வைத்து வழிபட நல்ல நேரம் தை பொங்கல் 2020: தை பொங்கல், மாட்டுப்பொங்கல் வைத்து வழிபட நல்ல நேரம்

கேள்வி: எழுத்தாளர், விரிவுரையாளர், அரசியல்வாதி, இந்த மூன்றில் தாங்கள் பெருமையாக கருதுவது எது?

பதில்: என்றுமே விரிவுரையாளர் என்று கூறிக்கொள்வதில் அதிக பெருமைப்படுகிறேன். ஆங்கில விரிவுரையாளராக நான் பணியாற்றியதற்காக இதை சொல்லவில்லை. ஆசிரியர், மருத்துவர் இரண்டுமே தொழில் வரம்புக்குள் வராது, அதை ஒரு சேவையாகவே கருத வேண்டும். எனது பெற்றோரும் ஆசியர்களாக இருந்தவர்கள். ஒரு புதிய தலைமுறையை உருவாக்கும் பணி தான் ஆசிரியர் பணி. ஆகையால், எப்போதும் நான் பேராசிரியர் என்பதையே பெருமையாக கருதுகிறேன்.

கேள்வி: உங்களை வெற்றிபெற வைத்த தென் சென்னை தொகுதி மக்களுக்கு உங்களின் பொங்கல் பரிசு என்ன? என்ன புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள்?

பதில்: எனது தொகுதி மக்களுக்காக மட்டுமே இதுவரை நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வருகிறேன். பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதிகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுத்து வருகிறேன், சோழிங்கநல்லூரில் விபத்து அவசரச் சிகிச்சை அளிக்கும் வகையில் ஒரு அரசு மருத்துவமனையை கொண்டு அனைத்து நடவடிக்கைகளையும் செய்து வருகிறேன். இதுமட்டுமல்லாமல் எனது தொகுதியில் பெண்களுக்கு கவுன்சிலிங் சென்டர் தொடங்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட நீண்ட நாளைய விருப்பம். ஏனென்றால், பெண்களுக்கு குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளை முறையிட வழியில்லாத நிலை இருக்கிறது. ஆலோசனை நிபுணர்களை கொண்டு கவுன்சிலிங் மையம் அமைக்கப்பட்டால் அவர்கள் பெண்களுக்கு உரிய வழிகாட்டியாக இருப்பார்கள். எனது தென் சென்னை தொகுதியில் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அதில் முதற்கட்டமாக 2 தொகுதிகளில் இந்த திட்டத்தை தொடங்கலாம் என நடவடிக்கை எடுத்து வருகிறேன்.

English summary
south chennai mp thamizhachi thangapandian pongal special interview
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X