For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இளையராஜா விவகாரம்... முழு தவறும் எஸ்பி பாலசுப்பிரமணியன் மீதுதான்!

By Shankar
Google Oneindia Tamil News

-எஸ் ஷங்கர்

இளையராஜா - எஸ்பிபி நட்பு, மோதல் பற்றியெல்லாம் நாம் பேசத் தேவையில்லை.

இந்த காப்பிரைட் நோட்டீஸ் விவகாரத்தில் முழு தவறு எஸ்பிபி பக்கம் இருக்கிறது. இளையராஜாவின் இசை காப்புரிமையை கவனித்துக் கொள்ள இப்போது தனி குழு இருக்கிறது. அவர்கள் அனுப்பியதுதான் இந்த நோட்டீஸ் (நிச்சயம் ராஜாவுக்குத் தெரியாமல் அனுப்பப்பட்டிருக்காது). அதுகூட எஸ்பிபிக்கு அனுப்பப்பட்டதல்ல. நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் ஈவன்ட் கம்பெனிக்கு அனுப்பப்பட்டது.

இப்படி ஒரு நோட்டீஸ் வந்ததும் அதைப் பற்றி ராஜாவிடமே தனிப்பட்ட முறையில் கேட்டிருக்கலாம் எஸ்பிபி. அல்லது அந்த கம்பெனி நிர்வாகிகளை அனுப்பி பேச வைத்திருக்கலாம். காப்புரிமை சட்டப்படி ராஜாவுக்கு சேர வேண்டியதைத் தரச்சொல்லி பிரச்சினையை வெளியில் தெரியாமல் முடித்திருக்கலாம்.

SPB intentionally exposes Ilaiyaraaja's copyright notice

எஸ்பிபி மகனுடன் இணைந்து இந்த இசைக் கச்சேரிகளுக்கு ஏற்பாடு செய்திருப்பவர்கள் பக்கா பிஸினஸ் பார்ட்டிகள். அதுவும் வெளிநாட்டுக்காரர்கள். காப்புரிமைச் சட்டம் தெரிந்தவர்கள். இப்படி ஒரு நோட்டீஸ் வந்ததும், அதை சட்டரீதியாக அணுகாமல், எஸ்பிபியை பேச வைத்து வேண்டுமென்றே சென்சேஷனல் ஆக்கியிருக்கிறார்கள். அது பக்கா கிரிமினல் மூளை!

இன்னொரு பக்கம், ராஜா மீதிருந்த நீண்ட நாள் எரிச்சல்களையெல்லாம் தீர்த்துக் கொள்ள ஒரு வழியாக அந்த வக்கீல் நோட்டீஸை பிடித்துக் கொண்டார் எஸ்பிபி என்பதுதான் உண்மை. பேஸ்புக்கில் ரொம்ப அப்பாவியாக, 'எனக்கு காப்பிரைட் சட்டமெல்லாம் தெரியாது.. ஆனாலும் இனி ராஜா பாடல்களைப் பாட மாட்டேன்,' என்று புலம்பி, மீடியா கவனத்தை தன் பக்கம் திருப்பிக் கொண்டார் (ராயல்டி சட்டம் தெரியாமல்தான் பாடகர்களுக்கும் ராயல்டி வேண்டும் என உண்ணாவிரதம் இருந்தாரா?).

சினிமாக்காரர்களில் சிலர், செய்தி உலகின் ஒரு பகுதியினர் ஏற்கெனவே ராஜா மீது அவதூறு பரப்புவதையே லட்சியமாகக் கொண்டிருப்பவர்கள். இந்த 'பீப்' பார்ட்டிகளுக்கு இப்போது ஒரே கொண்டாட்டம். எஸ்பிபியின் அந்த அறிவிப்பை வைத்து இஷ்டத்துக்கும் ராஜாவைத் திட்டி வருகின்றனர்.

இதைப் பார்த்த சில நடுநிலை ரசிகர்களும்கூட, 'ராஜா பணத்தாசையால் இப்படிப் பண்ணுகிறாரோ... இது தப்புதானே' என்று கூற ஆரம்பித்துள்ளனர்.

எஸ்பிபி நல்ல பாடகர். திறமையான பாடகர். இனிமையான பாடகர். ஆனால் படைப்பாளி அல்ல. ஆனால் இளையராஜா படைப்பாளி. அவரது படைப்புக்குக் குரல் தந்தவர்தான் எஸ்பிபி. ஒரு பாடலின் ட்யூன், இசை, அதை எப்படிப் பாட வேண்டும், எப்படியெல்லாம் பாடக்கூடாது (எஸ்பிபிக்கு இது ரொம்ப முக்கியம்... ராஜா மீது அவருக்கு ரொம்ப காலமாக உள்ள எரிச்சல் இது!) என்று கற்றுத் தருவதெல்லாம் இசையமைப்பாளர்தான். பாடகர், பாடலாசிரியர் எல்லாம் இசையமைப்பாளருக்கு தேவைப்படும் இசைக்கருவிகளைப் போன்ற கருவிகளே. ஒரு பாடலுக்கு முழுமையான சொந்தக்காரர் இசையமைப்பாளர்தான். உடனே, தயாரிப்பாளர் தயாரிப்பாளர் என சிலர் கூப்பாடு போடுகிறார்கள். அது தயாரிப்பாளர்களுக்கும் இசையமைப்பாளர்களுக்கும் உள்ள புரிந்துணர்வு.

ஒரு படைப்பாளி தன் படைப்பின் மீதான உரிமையை நிலை நாட்டுவதையே தவறு என்றும் பேராசை என்றும் பொங்குவதை இங்கு மட்டும்தான் பார்க்க முடியும். காரணம் இவர்கள் என்றுமே அசலை விரும்புபவர்கள் அல்ல.. நகல்களைத்தான் தேடித் தேடி வாங்குவார்கள். இளையராஜாவின் பாடல்களை காசு கொடுத்து வாங்காமல் எம்பி3, இலவச டவுன்லோடில் கேட்பவர்கள் அல்லவா... அந்த மனநிலையின் பிரதிபலிப்புதான் இது.

ராஜா இசையமைத்த ஆயிரம் படங்களின் காப்புரிமையும் அவரிடம் உள்ளதா? இப்படிச் சிலர் கேட்டு வருகின்றனர். அனைத்துப் படங்களின் காப்புரிமையும் இளையராஜாவிடம்தான் இருக்கிறது. நல்ல வேளை, அதற்கான ஆவணங்களையும் வைத்திருக்கிறார். இல்லையென்றால் இவருடைய இசையே இல்லை என்று கூடச் சொல்லி விடுவார்கள் (ஒரு இசை வெளியீட்டு நிறுவனத்துக்கான பாடலின் உரிமை 5 ஆண்டுகளுக்கு மட்டும்தான்).

அன்றைக்கு ரிக்கார்டில் வந்த இளையராஜா இசையை, ரிக்கார்டிங் சென்டர்களில், கேசட்டுகளில் பதிவு செய்து தருவதையே பிழைப்பாக வைத்திருந்தார்கள் பல ஆயிரம் பேர். அது காப்பிரைட் சட்டத்துக்கு விரோதமானதுதான். ஆனால் அந்த நாட்களில் இங்கே காப்பிரைட் சட்டமெல்லாம் பெரிதாக இல்லை... தெரியாது. ரொம்ப ரொம்ப தாமதமாகத்தான் இளையராஜாவுக்கு அது தெரிய வந்தது. கிட்டத்தட்ட 9000 பாடல்கள், அதைவிட அதிகமான இசைக் கோர்ப்புகளை உருவாக்கிய அந்த படைப்பாளி, தன் உழைப்பின் பலனை யார் யாரோ அனுபவிப்பதைப் பார்த்த பிறகுதான் சட்டத்தின் உதவியை நாடினார். தன் இசையை முற்றாக மறு வெளியீடு செய்யும் பொறுப்பை சிலரிடம் ஒப்படைத்தார். ஆனால் அவர்களும்கூட ராஜாவை முழுமையாக ஏமாற்றினார்கள்.

2015-ல் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு சொன்னார்: "இன்றைய தேதிக்கு இளையராஜாவுக்குச் சேரவேண்டிய காப்புரிமைத் தொகையை முறையாக வசூலித்தால் ரூ 100 கோடிக்கு மேல் வரும். இந்தப் பணத்தை வசூலித்துத் தந்தால், அதில் ரூ 50 கோடியை தயாரிப்பாளர்களின் நலனுக்காக, தயாரிப்பாளர் சங்கத்துக்கே தருவதாக ராஜா வாக்குத் தந்திருக்கிறார்!"

எக்கோ நிறுவனத்துக்கு எதிரான வழக்கில் வெற்றிப் பெற்று செய்தியாளர்களைச் சந்தித்த இளையராஜா, "எனக்கு வரும் ராயல்டி தொகையில் ஒரு பகுதியை எனது தயாரிப்பாளர்களுக்கும் தருகிறேன்," என்றார். அவரை பணத்தாசை பிடித்தவராய் சித்தரிக்கிறது இந்த கும்பல்.

எஸ்பிபியின் வெளிநாட்டுப் பயணம் ஏதோ மக்களை மகிழ்விக்கும் இலவசப் பயணம் அல்ல... நூறு சதவீதம் பணம் வசூலிக்கும் இசை நிகழ்ச்சிகள். நிகழ்ச்சியை ரசிக்க வரும் மக்களிடமிருந்து வசூலிக்கும் பல லட்சம், மில்லியன் டாலர்களிலிருந்து, பாடுகிறவர்களுக்கு, இசைக் கலைஞர்களுக்கு என எல்லாத் தரப்புக்கும் பணம் தருகிறார்கள். அந்தப் பாடல்களை உருவாக்கிய படைப்பாளியான இளையராஜா, தனக்கான உரிமையை நிலை நாட்ட முயன்றால் மட்டும் 'பேராசையா'?

இதைப் பற்றி எழுதும் முன், பேசும் முன் ஒரு பத்து நிமிடம் இளையராஜாவின் மனநிலையில் இருந்து பார்த்துவிட்டு, அவரவர் அபிப்பிராயங்களைப் பதியுங்கள்.

வேறு எந்த இசையமைப்பாளரையும் விட எளிமையான, இசையைத் தவிர எந்த வியாபார நுணுக்கமும் தெரியாத வெள்ளந்தி மனிதராகத்தான் இளையராஜா இருந்தார். ஆனால் டிஜிட்டல் வளர்ச்சி, அந்த டிஜிட்டல் யுகத்தில் அவரது படைப்புகளை வைத்து கோடிகளில் யாரோ சிலர் சம்பாதிப்பதைப் பார்த்த பிறகுதான் சுதாரிக்க முயன்றார். அந்த முயற்சிக்கு இந்த வலையுலக கொலைகாரர்கள் வைத்திருக்கும் பெயர் பேராசை.. கர்வம்.. திமிர்!!

English summary
Is Maestro Ilaiyaraaja a greedy person? Why he has sent copy right notice to SPB concert organisers? Here is the detail answer for all.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X