For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பயங்கர போதை.. படு வேகத்தில் வந்த கார் மோதி இளைஞர் பலி... சென்னையில் தொழிலதிபரால் விளைந்த விபரீதம்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் நல்ல குடிபோதையில் ஆடி காரை ஓட்டி வந்த தொழிலதிபர் ஏற்படுத்திய விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் வேன் டிரைவர் ஒருவரும் படுகாயமடைந்துள்ளார்.

சென்னை ராயபுரம் காசி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கவின்ராஜ் (25). இவர் கிண்டியில் உள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

பணி முடிந்து நேற்று அதிகாலை 3 மணியளவில் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார் கவின்ராஜ். அப்போது, அண்ணா சாலை டிவிஎஸ் சிக்னல் அருகே ஒன்வேயில் அதிவேகமாக வந்த சொகுசு கார் (ஆடி கார்) கவின்ராஜ் வண்டி மீது மோதியது. இதில், சுமார் 20 அடி தூக்கி வீசப்பட்ட கவின்ராஜ், மெட்ரோ ரயில் பணிக்காக சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பி மீது விழுந்தார்.

Speeding Audi car driven by drunk businessman kills biker in Chennai

இதில், கம்பி கவின்ராஜ் வயிற்று பகுதியில் குத்தி, சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்தை ஏற்படுத்திய பிறகும் வேகம் குறையாமல் சென்ற அந்தக் கார், மற்றொரு மினிலாரி மீது மோதியது. இதில் லாரியின் சக்கரங்கள் தனியாக கழன்று, லாரி சாலையில் கவிழ்ந்தது. அதிலிருந்த காய்கறிகள் மற்றும் பிளாஸ்டிக் டப்பாக்கள் சாலையில் சிதறின. லாரியை ஓட்டி வந்த டிரைவருக்கு காயம் ஏற்பட்டது.

அப்படியும் வேகத்தைக் குறைக்காமல் சென்ற கார், அருகில் இருந்த தடுப்புச் சுவரில் மோதி நின்றது. அப்போது அந்தக் காரில் இரண்டு பேர் மது போதையில் இருந்தது தெரியவந்தது.

உடனடியாக இந்த விபத்துக்கள் குறித்து பொதுமக்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து சம்பவ இடத்திற்கு வந்த அண்ணா சதுக்கம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஷேக்பாபு, பலியான கவின்ராஜின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். காயமடைந்த டிரைவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில்அனுமதித்தனர்.

அதனைத் தொடர்ந்து விபத்து ஏற்படுத்திய இருவரையும் போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்களது பெயர் முகமது சபீக் (31), முகமது பாரூக் (39) எனத் தெரியவந்தது. அவர்கள் இருவரும் ஈரோட்டில் தோல் பொருட்களை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் தொழில் செய்து வருகின்றனர்.

நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்து வரும் கண்காட்சியில் முகமது சபீக் நிறுவனத்தின் ஸ்டால் வைக்கப்பட்டுள்ளது. இதற்காக சென்னை வந்த சபீக், தனது நண்பர் முகமது பாரூக்குடன் அண்ணா சாலை ஸ்பென்சர் பிளாசா எதிரே உள்ள ஹோட்டலில் தங்கியிருந்தார். நேற்று முன் தினம் இரவு அளவுக்கு அதிகமாக மது அருந்திய இருவரும், அதிகாலை கண்காட்சிக்கான ஏற்பாடுகளை பார்ப்பதற்காக காரில் புறப்பட்டுள்ளனர்.

அண்ணா சாலையில் இருந்து வர்த்தக மையம் நோக்கி செல்லும் பாதையில், தற்போது மெட்ரோ ரயில் பணிக்காக குறிப்பிட்ட தூரம் வரை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது. எனவே, சுற்றிக் கொண்டு செல்லாமல் அந்தப் பாதையில் அதிவேகமாகச் சென்று விபத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

இந்த விபத்தின் போது சொகுசு காரில் இருந்த 'ஏர்பேக்' விரிந்துவிட்டதால் காரில் இருந்த இருவருக்கும் சிறு காயம் கூட ஏற்படவில்லை எனத் தெரிகிறது.

சபீக், பாரூக் இருவர் மீதும் போலீசார் கொலை வழக்குக்கு சமமான 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது அவர்கள் இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சினிமா காட்சிகள் போல் அடுத்தடுத்து நடந்த இந்த விபத்துக்களால் அப்பகுதியில் வாகனம் ஓட்டிச் சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

English summary
A man died on the spot when a speeding Audi car, driven by drunk businessman, rammed a two-wheeler on Anna Salai in Chennai in the early hours of Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X