For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்கியது: 21ல் சொர்க்கவாசல் திறப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ஸ்ரீரங்கம்: ஸ்ரீ ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா இன்று இரவு திருநெடுந்தாண்டகம் வைபவத்துடன் துவங்கியுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு வரும் 21ம் தேதி அதிகாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள், உற்சவங்கள் நடக்கிறது. சித்திரை தேரோட்டம், வைகாசியில் வசந்த உற்சவம், ஆனி மாதம் திருமஞ்சனம், புரட்டாசி மாதம் நவராத்திரி விழா, கார்த்திகை மாதம் கைசிக ஏகாதசி, தை தேரோட்டம் , மாசி மாதம் கருடசேவை, பங்குனி தேரோட்டம் என பல விழாக்கள், உற்சவங்கள் நடந்தாலும் மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் வைகுண்ட ஏகாதசி விழா தான் மிகவும் முதன்மையானதாகும்.

வைகுண்ட ஏகாதசி திருவிழா

வைகுண்ட ஏகாதசி திருவிழா

இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா நேற்று இரவு 7 மணி அளவில் திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது.

ஸ்ரீரங்கநாதரிடம் மூலஸ்தானத்தில் அனுமதி பெற்று நாலாயிரம் திவ்ய பிரபந்தத்தை படிக்க தொடங்குவதே திருநெடுந்தாண்டகம். நாலாயிரம் திவ்ய பிரபந்த பாசுரங்களில் ஒன்றான மின்னருவாய் என்ற பாசுரத்தை அரையர்கள் அபிநயத்துடன் பாடினார்கள்.இரவு 10 மணி முதல் 11 மணி வரை திருக்கொட்டாரத்தில் ரங்கநாதர் சிறப்பலங்காரத்தில் அருள்பாலித்தார்.

பகல்பத்து உற்சவம்

பகல்பத்து உற்சவம்

வைகுண்ட ஏகாதசி விழா தொடக்க நாளான நேற்று காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையும், பகல் 1.15 மணி முதல் 4.30 மணி வரையும் மூலஸ்தான சேவை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இன்று வெள்ளிக்கிழமையன்று பகல் பத்து உற்சவம் தொடங்கியுள்ளது. நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து சிம்மகதியில் காலை 6.15 மணிக்கு புறப்பட்டு பகல்பத்து மண்டபமான அர்ச்சுன மண்டபத்தில் 7.15 மணிக்கு எழுந்தருளினார்.

அரையர் சேவையுடன் காலை 7.45 மணி முதல் பகல் 1 வரை அர்ச்சுன மண்டபத்தில் காட்சி அளிக்கும் நம்பெருமாள் மாலை 4 முதல் 5.30 வரை உபயக்காரர்கள் மரியாதைகளுடன் பக்தர்களுக்கு தரிசனம் அளித்த பின் மாலை 6.15க்கு அர்ச்சுன மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9.45க்கு மூலஸ்தானத்திற்கு சர்ப்பகதியில் சென்றடைகிறார்.

பகல் பத்து, ராப்பத்து காரணம்

பகல் பத்து, ராப்பத்து காரணம்

நாலாயிரம் திவ்ய பிரபந்தத்தை 20 நாட்கள் அபிநயத்துடன் படிப்பதே பகல் பத்து மற்றும் ராப்பத்து. திருமங்கைமன்னன், நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழிப் பாடல்களை கார்த்திகை தினத்தன்று பெருமாள் முன்னர் பாடினார். பெருமகிழ்ச்சி அடைந்த பெருமாள் திருமங்கை மன்னனிடம் என்ன வேண்டும் என்று கேட்க அதற்கு அவர் வைகுண்ட ஏகாதசி விழாவில் வேதங்களை கேட்டு மகிழ்வது போல் தமிழ் மொழியில் நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழிப்பாடல்களை கேட்டருள வேண்டும் என்று கேட்க, அதற்கு பெரிய பெருமாளும் சம்மதித்தார்.

சொர்க்கவாசல் திறப்பு

சொர்க்கவாசல் திறப்பு

பகல் பத்து, ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21 நாட்கள் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற உள்ளது. பகல் பத்து விழா நடைபெறும் 10 நாட்களும் அரையர்கள் நாலாயிரம் திவ்ய பிரபந்தத்தில் உள்ள திருமொழி பாசுரங்களையும், ராப்பத்து விழா நடைபெறும் 10 நாட்களும் திருவாய் மொழி பாசுரங்களையும் அபிநயங்களுடன் பாடி பெருமாளை பரவசப்படுத்துவார்கள்.

பெருமாளுக்கு உற்சவம்

பெருமாளுக்கு உற்சவம்

நம்மாழ்வாருக்கு பெருமை சேர்த்த திருமங்கை ஆழ்வாருக்கு பெருமை சேர்க்கும் பொருட்டு நாதமுனி காலத்தில் (கி.பி.823-918) திருமங்கை ஆழ்வார் பாடிய பாடல்களின் தொகுப்பான திருமொழிப்பாடல்களையும், மற்ற ஆழ்வார்கள் பாடிச்சென்ற பாடல்களையும் பெரிய பெருமாள் கேட்டருளும் விதமாக பகல்பத்து மற்றும் ராப்பத்து உற்சவம் கொண்டாடப்பட்டு வருகிறது.

பக்தர்களுக்கு அருள்

பக்தர்களுக்கு அருள்

பகல்பத்து விழா 10 நாளும் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து காலை புறப்பட்டு அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி தினமும் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.பகல்பத்து உற்சவ 10ம் நாளான 20ம் தேதி ஞாயிறன்று நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் காட்சி தருகிறார்.

சொர்க்கவாசல்

சொர்க்கவாசல்

விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு வரும் 21ம் தேதி திங்கட்கிழமையன்று நடைபெற உள்ளது. 21ம் தேதி அதிகாலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. சொர்க்கவாசல் திறப்பு அன்று நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து காட்சி அளிப்பார்.

ராப்பத்து உற்சவம்

ராப்பத்து உற்சவம்

சொர்க்கவாசல் திறந்த தினம் முதல் ராப்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் துவங்குகிறது. ராப்பத்து உற்சவ 7ம் நாளான 27ம் தேதி திருக்கைத்தல சேவையும், 8ம் நாள் 28ம் தேதி திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், 10ம் நாள் 30ம் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியும், 31ம் தேதி நம்மாழ்வார் மோட்சம் மற்றும் இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியும் நடக்கிறது.

குவியும் பக்தர்கள்

குவியும் பக்தர்கள்

வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கியதையொட்டியும், பகல் பத்து விழா இன்று ஆரம்பம் ஆவதையொட்டியும் திரளான பக்தர்கள் தரிசனத்திற்கு வருவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது. பக்தர்கள் பாதுகாப்பாக தரிசனம் செய்து விட்டு செல்வதற்காக ஸ்ரீரங்கம் கோவில் ரங்கவிலாச மண்டபத்தில் மாநகர காவல் துறை சார்பில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெறும் நாளான வருகிற ஜனவரி 1ம்தேதி வரை இந்த புறக்காவல் நிலையம் செயல்படும்.

English summary
At the Sri Ranganatha temple in Srirangam, Vaikunta Ekadasi lasts for 21 days – which is divided into two parts of pagal pathu and Ira pathu. Vaikunta Ekadasi is on December 21, 2015. Mohini Alangaram is on December 20.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X